திருப்பதியின் கதை!



‘பாகுபலி’யின் வரலாறு காணாத வெற்றிக்குப் பிறகு நேரடிப் படங்களுக்கு இணையாக டப்பிங் படங்களும் செமத்தியாக தமிழக தியேட்டர்களில் டப்பு பார்த்துக் கொண்டிருக்கின்றன. ரிஸ்க் கம்மி என்பதால் தியேட்டர்காரர்களும் இந்தப் படங்களை ஆர்வத்தோடு திரையிடுகிறார்கள். இந்தச் சூழலை பயன்படுத்தி கல்லா கட்ட வருகிறது ‘பிரம்மாண்ட நாயகன்’நம்மூரில் கே.பாலச்சந்தர் போல, தெலுங்கு சினிமாவில் பிதாமகராக மதிக்கப்படும் கே.ராகவேந்திரராவ் இயக்கியுள்ள திரைப்படம் இதுதான்.

‘பாகுபலி’ ராஜமவுலி உள்ளிட்ட தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குநர்கள் பலரும் இவரது சிஷ்யர்கள்தான். உலகமெங்கும் இந்தப்படத்தை ‘ஜோஷிகா பிலிம்ஸ்’ துரைமுருகனும், நாகராஜனும் ரிலீஸ் செய்கிறார்கள்.ஹீரோ நாகார்ஜுன், ஹீரோயின் அனுஷ்கா. இவர்களோடு பிரக்யா ஜெய்ஸ்வால், ஜெகபதிபாபு, சாய் குமார், சம்பத், பிரம்மானந்தம் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

“இது பக்திப்படம் என்றாலும், சமூகத்துக்கு அவசியமான கருத்துகளை கொண்ட படம். பிரம்மாண்டத்துக்கு பஞ்சமே இல்லாத அளவிலான திரைக்கதை. ராமா என்கிற பெருமாள் பக்தனின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதை. பெருமாளின் பக்தையான ஆண்டாள் கதாபாத்திரத்தில் அனுஷ்கா நடிக்கிறார். ‘பாகுபலி’க்குப் பிறகு அவர் பெயர் சொல்லும் படமாக இது அமையும்.

 மகாபாரதத் தொடரில் கிருஷ்ணராக நடித்து புகழ்பெற்ற சவுரப் ஜெயின் வெங்கடேச பெருமாள் வேடத்தில் நடிக்கிறார்.  பகவானுக்கும் பக்தனுக்கும் உள்ள உறவு, திருமலை உருவான விதம், ஆனந்த நிலையம் என பெயர் வரக்காரணம், வேங்கடம் என்ற சொல்லுக்கு பொருள் விளக்கம், ராமா என்பவர் ஹாத்திராம் பாபாவாக மாறியது எப்படி, பாலாஜி என்று பெயர் வரக்காரணம்,  திருமலையில் முதலில் யாரை வணங்குவது என பக்தர்கள் மனதில் எழும்  பல சந்தேக கேள்விகளுக்கு விஷூவலாகவும் விளக்கம் கொடுத்துள்ளோம்.

இசையமைப்பாளர் கீரவாணி கதையின் தேவைக்கேற்ப பனிரெண்டு பாடல்களை சிறப்பாக கொடுத்துள்ளார். உன்னி கிருஷ்ணன், எஸ்.பி.பி. சரண், டாக்டர் சீர்காழி ஜி. சிவசிதம்பரம், வி.வி. பிரசன்னா, ஜானகி ஐயர், முகேஷ், ஹேமாம்பிகா, பிரியா, ராஜேஷ், கவிதா கோபி எனப் பலரும் பாடல்களைப் பாடியுள்ளனர்.

டி.எஸ்.பாலகன் பாடல்களோடு வசனமும் எழுதியுள்ளார். கோபால்ரெட்டியின் ஒளிப்பதிவு திருமலையை கண்முன் நிறுத்திய மாதிரி இருக்கும்.  இன்றைய நவீன காலத்திற்கேற்ப மிகச்சிறந்த தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி ஜனரஞ்சகமாக எடுத்திருக்கிறேன்’’ என்கிறார் இயக்குநர் கே.ராகவேந்திர ராவ்.

- எஸ்