டைரக்டர் ஆனார் டிரைவர்!கோக்குமாக்கா தலைப்பு வைப்பதுதான் இப்போது கோடம்பாக்கத்தில் ட்ரெண்ட். அந்த வகையில் ‘எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா’ என்று ஒரு படத்துக்கு தலைப்பு வைத்திருக்கிறார்கள்.

டி.என்.75 கே.கே கிரியேஷன்ஸ் என்று கம்பெனிக்கும் புதுமையாக பெயர் வைத்திருக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் கெவின். கோலிவுட் லேட்டஸ்ட் ட்ரெண்ட்படி யாரிடமும் உதவியாளராக வேலை பார்க்காமல் டைரக்‌ஷன் பண்ணியிருக்கிறார். போஸ்ட் புரொடக்‌ஷன் பணியில் பிஸியாக இருந்தவரிடம் பேசினோம்.

“தலைப்பே ஏடாகூடமா இருக்கே?”
“இது முழுமையான கமர்ஷியல் படம். தினமும் சென்னைக்கு நூற்றுக்கணக்கான பேர் பிழைப்புக்காக பல ஊர்களில் இருந்து வருகிறார்கள். அப்படி வருகிறவர்களில் நூறு பேராவது சினிமா கனவுகளுடன் வருகிறார்கள். அப்படி சினிமா கனவோடு வந்து வாய்ப்பு கிடைக்காமல் ஊருக்கே திரும்பிச் செல்லும் அகில் ஊரில் பண்ணையாராக இருக்கும் நான் கடவுள் ராஜேந்திரனிடம் சென்னையில் நடந்ததை சொல்கிறார்.

அவருடைய திறமையையும், அவருடைய வருத்தத்தையும் புரிந்துகொண்ட ராஜேந்திரன், நானே உன்னை வைத்து படம் தயாரிக்கிறேன் என்று தனது சொத்துக்களை விற்றுவிட்டு சென்னைக்குக் கிளம்பி வந்து திரைப்படம் தயாரிக்கிறார்.சினிமா எப்பவும் ஒரே மாதிரி இருக்காது. சினிமாவில் இழந்தவர்களும் அதிகம், வாழ்ந்தவர்களும் அதிகம். அப்படிப்பட்ட சினிமாவில் அகிலும், ‘நான் கடவுள்’ ராஜேந்திரனும் ஜெயித்தார்களா இல்லையா என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.”

“இந்தப் படத்தில் புதுசா என்ன சொல்லப் போறீங்க?”
“சினிமாவுக்குள் சினிமா என்பது போல் நிறைய கதைகள் வெளிவந்துள்ளன. ஆனால் நான் அப்படி சொல்லவில்லை. கிராமிய கலைகளை வைத்து திரைக்கதை அமைத்திருக்கிறேன். திறமைசாலியான ஒரு இளைஞனைப் பற்றித்தான் சொல்லியிருக்கிறேன். ‘எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா’ கதை மிகவும் புதிது என்றெல்லாம் சொல்லவில்லை.

எவ்வளவு பெரிய நடிகர்கள் நடித்த படங்களாக இருந்தாலும், அந்தப் படங்களின் கதையும் பழசாகத்தான் தெரியும். ஆனால் சொன்ன விதத்தில் புதுமையாக இருந்திருக்கும். சமீபத்தில் பேய் படங்கள், ப்ளாக் காமெடி படங்கள் வரிசைகட்டி நின்றன.

ஒவ்வொரு காலகட்டத்திலும் சினிமாவில் டிரெண்ட் மாறிக்கொண்டே இருக்கும். ஆனால் கமர்ஷியல் சினிமா அப்படி இல்லை. கமர்ஷியல் சினிமாவுக்கு மக்கள் ஆதரவு எப்போதும் இருக்கும்.”“அகில் - இஷாரா ஜோடிப் பொருத்தம் எப்படி?”

“அகிலுக்கு இந்தப் படம் வேற டைமன்ஷன்ல இருக்கும். எப்போதும் சோகம் கலந்த அகிலைத்தான் நாம் பார்த்திருப்போம். இதில் ஜாலியா துறுதுறுன்னு இருக்கிற அழகான அகிலைப் பார்க்கலாம். இது சாதிக்கத் துடிக்கும் இளைஞனின் கதை. அதற்கு அகில் பொருத்தமா இருந்தார்.

இஷாரா, ரஹானா, கிருஷ்ணபிரியா என்று படத்துல மூன்று நாயகிகள். இஷாரா சினிமாத்துறையில் இருக்கிறவங்களா வர்றாங்க. நடுவுல எனக்கும் இஷாராவுக்குமிடையே லேசா மனகசப்பு வந்தது. ஆனால் அதுக்கப்புறம் இரண்டு பேரும் ராசியாயிட்டோம். அவருடைய போர்ஷன் முழுவதும் முடித்துக் கொடுத்துவிட்டார்.

நான் நடிகனாக வேண்டும் என்ற கனவோடுதான் சினிமாவுக்கு வந்தேன். ‘சிங்கம்-2’, ‘காஞ்சனா’ உள்பட சில படங்களில் நடித்தேன். அப்போது நான் கடவுள் ராஜேந்திரனின் நட்பு கிடைத்தது. அவர்தான் நான் படம் இயக்குவதற்கு ஊக்கம் கொடுத்தார். கோடம்பாக்கத்தில் அவருடைய கால்ஷீட்டுக்கு ஏக கிராக்கின்னு தெரியும். ஆனால் ராஜேந்திரன், உனக்கு எவ்வளவு நாள் வேணும்னாலும் கேள், திருப்தியா படம் பண்ணு என்று தட்டிக் கொடுத்தார். அவருக்கு பனை மரம் ஏறும் கேரக்டர்.

அவருக்கு ஃப்ளாஷ்பேக் சீன்ஸ் உண்டு. ராஜேந்திரனும், மனோபாலாவும் பால்ய நண்பர்களாக வருகிறார்கள். இருவருடைய டைமிங் காமெடி அதிரிபுதிரியா வந்திருக்கு. யோகிபாபு, சிவசங்கர், பாலாசிங், சூப்பர் சுப்பராயன், சஹானா, கெளசல்யா, ஷகீலான்னு என்னைச் சுற்றி நல்ல உள்ளங்கள் இருந்ததால்தான் இந்தப் படத்தை திட்டமிட்டபடி முடிக்க முடிந்தது. படத்துல நானும் நடிச்சிருக்கிறேன்.” “இசை?”

“வர்ஷன் மியூசிக் பண்ணியிருக்கிறார். இவர்தான் ‘புறம்போக்கு’ படத்துக்கு இசையமைச்சவர். நான்கு பாடல்கள் வெரைட்டியா வந்திருக்கு. பின்னணியில மிரட்டியிருக்கிறார். ப்ரியன் உதவியாளர் ரஹீம்பாபு ஒளிப்பதிவு பண்ணியிருக்கிறார். விஷுவல்ஸ் ஃப்ரெஷ்ஷாக இருக்கும். சூப்பர் சுப்பராயன் கச்சிதமாக ஃபைட் சீன்ஸ் கம்போஸ் பண்ணிக்கொடுத்தார்.

சுரேஷ் அர்ஸ் எடிட்டிங் நறுக்குன்னு இருக்கும். கலா மாஸ்டர் உதவியாளர்கள் ரமேஷ், ரேகா ஸ்டெப்ஸ் புதுசா இருக்கும். இந்த இடத்தில் என்னுடைய தயாரிப்பாளர்கள் திருமுருகன், பாலகிருஷ்ணனுக்கு நன்றி சொல்லிக்கிறேன். அவர்கள்தான் எனக்கு வேண்டிய வசதிகளைச் செய்து கொடுத்ததோடு எந்த டென்ஷனும் இல்லாமல் பார்த்துக்கொண்டார்கள்.”

 “சினிமாவுக்கு வருவதற்கு முன்பு என்ன செய்துகொண்டிருந்தீர்கள்?”
“சொந்த ஊர் நாகர்கோவில். அப்பாவுக்கு போக்குவரத்துக் கழகத்தில் வேலை. அண்ணன், தம்பி என்று எங்களுடைய குடும்பம் பெரிது. படிப்பு சரியா வராததால் ஐ.டி.ஐ.யில் சேர்த்துவிட்டார்கள். படிப்பு முடிஞ்சதும் சென்னைக்கு வந்துட்டேன். சொந்தமா இரண்டு கால் டாக்ஸி வெச்சு ஓட்டிக்கிட்டிருந்தேன். சில சமயம் சில சினிமா பிரபலங்களுக்கும் சவாரி ஓட்டியிருக்கிறேன்.

அப்படி அறிமுகமானவங்கதான் இயக்குநர் ஹரியும், பாடகி மாலதியும். அவர்கள் சினிமாவில் நான் அடியெடுத்து வைக்க உதவினார்கள். ஹரி சார் ‘சிங்கம்-2’ படத்துல வாய்ப்பு கொடுத்தார். மாலதி மேடமும், அவருடைய அம்மாவும் என் மீது தனி பாசம் உள்ளவர்கள். அவர்கள்தான் நாகர்கோவிலுக்கு வந்து இந்தப் படத்தை ஆரம்பித்து வைத்தார்கள்.

சினிமா மீதிருந்த ஆர்வத்தினாலும், சினிமாக்காரர்களின் நட்பு கிடைத்ததாலும் எல்லா விஷயங்களையும் உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தேன். ஆனால் யாரிடமும் உதவியாளராக சேரணும்னு தோணலை. ஒவ்வொரு விஷயமா நானே பார்த்துப் பார்த்து தெரிந்துகொண்டேன். ‘அன்புள்ளம் கொண்ட அம்மா’ என்ற குறும்படத்தை இயக்கினேன்.

அந்த தைரியத்தில் முழு நீள சினிமாவுக்கு கதை எழுத ஆரம்பித்தேன். நான் என்ன முயற்சி எடுத்தாலும் என் குடும்பத்திலிருந்துதான் முதல் ஆதரவுக் கரத்தை நீட்டுவார்கள். அவர்கள் மட்டும் இல்லையென்றால் சினிமாவில் இவ்வளவு காலம் தாக்குப்பிடித்திருக்க மாட்டேன்.”

- சுரேஷ்ராஜா