என்னோட பெரியப்பா எம்.ஜி.ஆர்.. சித்தப்பா சிவாஜி



நெகிழ்கிறார் என்.டி.ராமராவின் மகன்

‘பாகுபலி’யின் சரித்திரவெற்றி, மீண்டும் இந்திய சினிமாவில் வரலாற்றுப் படங்களுக்கு சிகப்புக் கம்பளத்தை விரித்திருக்கிறது. அவ்வகையில் சமீபத்தில் தெலுங்கில் வெளிவந்து பெரிய ஹிட் அடித்திருக்கிறது  ‘கெளதமி புத்ர சாதகர்ணி’. பாலகிருஷ்ணா ஹீரோவாக நடித்து வெளியான இந்தப் படம் சுமார் நூற்றி ஐம்பது கோடிக்கும் மேல் வசூலித்திருக்கிறது. அதே பெயரில் தமிழிலும் வெளியாகும் இப்படத்தில் ஸ்ரேயா, கபீர்பேடி, தணிகலபரணி, சுபலேகா சுதாகர் ஆகியோர் நடித்திருக்கிறார்கள் நம்ம ஹேமமாலினிக்குத்தான் கீ ரோல்.  இசை சிரஞ்சன்.

ஆர்.என்.சி. சினிமா சார்பாக நரேந்த்ரா தயாரித்துள்ளார். வசனம் எழுதி தமிழாக்கம் செய்திருக்கிறார் மருதபரணி. இயக்கம் கிரிஷ். இவர் சிம்பு நடித்த ‘வானம்’ படத்தை இயக்கியவர். சமீபத்தில் இந்தப் படத்தின் டிரைலர் வெளியிட்டு விழா சென்னையே மிரளும் வகையில் அமர்க்களமாக நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சிக்காக ஐதராபாத்திலிருந்து பறந்து வந்தார் பாலகிருஷ்ணா. படத்தின் பாடல்களை கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் கார்த்தி வெளியிட்டனர். படத்தின் டிரைலரோடு மூன்று பாடல்களும் திரையிடப்பட்டன.

தமிழில் வசனம் எழுதியிருக்கிற மருதபரணி, ‘‘சிவாஜிக்கு ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’, எம்.ஜி.ஆருக்கு ‘மதுரை வீரன்’, என்.டி.ஆருக்கு ‘நாதேசம்’ போல பாலகிருஷ்ணாவுக்கு இந்தப் படம் இருக்கும். அந்த அளவுக்கு வசனங்கள் சிறப்பாக வந்துள்ளது. ‘கௌதமி புத்ர சாதகர்ணி’ சாதாரண  அரசன் அல்ல. காலண்டர் முறையை இந்தியாவில் துவக்கியவன் அவன்தான். இந்தியா முழுவதும் ஒரே நாணயம் அறிமுகப்படுத்தியதும்  சாதகர்ணிதான்’’ என்றார்.

கே.எஸ்.ரவிக்குமார் பேசும்போது, “நான் ‘தசாவதாரம்’ இயக்குவதற்கு ஒன்றரை வருடம் தேவைப்பட்டது. ஆனால், இவ்வளவு பிரம்மாண்டமான படத்தை வெறும் எழுபத்தி ஒன்பது நாட்களில் இயக்கியிருக்கிறார் கிரிஷ். டைட்டிலில் படம் சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரின் பெயருக்கு முன்னாலும் அவர்களின் தாயாரின் பெயரைப் போட்டு அறிமுகப்படுத்தி இருப்பது சிறப்பு. எல்லாவகையிலும் என்.டி.ராமராவின் மறுபதிப்பாக இருக்கிறார் பாலகிருஷ்ணா’’ என்றார். 

கார்த்தி தன் பேச்சில், ‘‘எம்.ஜி.ஆரையும் சிவாஜியையும் கொண்டாடும் முன்னாடியே என்.டி.ஆரையும் நாகேஸ்வரராவையும் கொண்டாடிய ஊர் இது. நிச்சயம் இந்தப் படத்தைத் தமிழ் ரசிகர்கள் கொண்டாடுவார்கள். எனக்கெல்லாம் இப்போதும் நடனம் ஆடும் காட்சி என்றால் காய்ச்சல் வந்துவிடும். ஆனால் பாலகிருஷ்ணா இந்த வயதிலும் பிரமாதமாக ஆடுகிறார்’’ என்று புகழ்ந்தார்.

தமிழில் பேசிய பால கிருஷ்ணா, ‘‘நான் சென்னையில் இந்த விழாவில் கலந்து கொண்டது ரொம்ப மகிழ்ச்சி. ஏன்னா  நானும் உங்களில் ஒருத்தன்தான். நான்  சென்னை யில் பிறந்து வளர்ந்தவன். தமிழ் தண்ணிய குடிச்சவன். இது நம்மை ஆண்ட மன்னனின் நிஜக்கதை. இந்தக் கதையைக் கேட்டவுடனே பெரியப்பா எம்.ஜி.ஆர், சித்தப்பா சிவாஜி, எங்கப்பா என்.டி.ஆர் இவங்களை நினைச்சுக்கிட்டேன்.

இவங்க இன்ஸ்பிரேஷன் இல்லாம எந்த படங்களும் என்னாலே பண்ண முடியாது. எல்லாரும் அவங்கவங்க அம்மாவை பெருமைப்படுத்துங்கள். நிச்சயம் நல்லா இருப்போம். அடுத்ததா நான் கே.எஸ். ரவிக்குமார் படத்திலே நடிக்கிறேன். ஷூட்டிங் இங்க தான் கும்பகோணத்தில் நாற்பது நாட்கள் நடக்குது” என்று பேசினார்.

- சுரேஷ்ராஜா