நிக்கி என் தங்கச்சி! நெகிழ்கிறார் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்



சர்வதேச கிரிக்கெட் வீரராக ஏற்கனவே புகழ்பெற்றவர் ஸ்ரீசாந்த். இப்போது ‘டீம்-5’ படத்தின் மூலமாக சினிமாவிலும் என்ட்ரி கொடுத்திருக்கிறார். படத்தின் பிரமோஷன் வேலைகளுக்காக சென்னைக்கு வந்தவர், எக்ஸ்க்ளூஸிவ்வாக ‘வண்ணத்திரை’யிடம் பேசினார்.
“தமிழ் சினிமா அனுபவம் எப்படி?”

“ரொம்ப நல்லா இருந்தது. தமிழ் படத்தில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை. சின்ன வயசுலேயே ரஜினி, கமலின் தீவிர ரசிகன். இப்போதும் சூப்பர் ஸ்டார்களாக அவர்கள் கோலோச்சிக் கொண்டிருக்கும்போதே, நான் நடிக்க வந்திருப்பது நெகிழ்ச்சியாக இருக்கிறது.”“நீங்க அறிமுகமாகிற ‘டீம் 5’ கதை?”

“அப்பா இல்லாத குடும்பத்தில் ஒரு மகனையும், மகளையும் வழிநடத்த ஒரு பெண் எப்படியெல்லாம் கஷ்டப்படுகிறார் என்பதுதான் படத்தோட ஒரு வரிக் கதை.”“உங்களுக்கு என்ன கேரக்டர்?”“என்னோட கேரக்டர் பெயர் அகில். பைக் ரேஸராக வர்றேன். பைக் நான் அவ்வளவாக ஓட்டியதில்லை. அப்படி ஓட்டினாலும் மிதமிஞ்சிய வேகத்தில் ஓட்ட மாட்டேன்.

நான் சேஃப் டிரைவர். இந்தப் படத்துக்காகவே பிரத்யேகமாக பைக் ஓட்ட பயிற்சி எடுத்துக்கொண்டேன். இந்தப் படத்தில் என்னுடன் சேர்த்து மொத்தம் ஐந்து பேர் லீட் பண்ணியிருக்கிறார்கள். அதில் ஒருவர் கிரிஸ். அவர் தொழில் ரீதியான பைக் ரேஸர். அவர்தான் எனக்கு பந்தய சாலையில் பைக் எப்படி ஓட்ட வேண்டும் என்று பயிற்சி கொடுத்தார். பைக் ரேஸருக்கான உடற்கட்டை இந்தப் படத்துக்காக உருவாக்கினேன். நடிப்பைப் பொறுத்தவரை உடல்மொழியும் இயல்பாக இருக்கும்.”

“நிக்கி கல்ராணி?”
“நாங்க இரண்டு பேரும் சைல்ட்ஹுட் ஃப்ரெண்ட்ஸ். நான் பிறந்தது கேரளாவில் என்றாலும் படித்தது பெங்களூரு. அப்போது என்னுடைய சக மாணவிதான் நிக்கி கல்ராணி. நிக்கி என் தங்கை மாதிரி. ஸ்கூலில் நான் சீனியர் என்றால் நடிப்பில் நிக்கி என்னைவிட சீனியர் ஆர்டிஸ்ட். அவருக்குன்னு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள்.

நடிப்புல அவர் டிகிரின்னா நான் கிண்டர்கார்டன். அவருடன் நடித்தது நல்ல பயிற்சியாக இருந்தது. அதுமட்டுமில்ல, நிக்கி ரொம்ப சப்போர்ட் பண்ணினார். எனக்காக கால்ஷீட்டை அட்ஜஸ்ட் பண்ணி நடித்தார்.”“நடனத்தில் புகுந்து விளையாடுகிறீர்களே?”

“படிக்கும் காலத்திலேயே முறைப்படி நடனம் கற்றுக்கொண்டேன். கர்நாடக மாநில அரசு என்னை தேர்வு செய்து தேசியளவிலான போட்டிகளுக்கு அனுப்பி வைத்துள்ளது. ஒரு கட்டத்தில் நான் கிரிக்கெட்டை விட்டுவிட்டு நடனத்தின் மீது தீவிர மோகத்தில் இருப்பதைப் பார்த்த அப்பா, நடனமா, கிரிக்கெட்டா அல்லது படிப்பா..... எது வேணும் என்று  முடிவு பண்ணு என்று கேட்டார். நான் கிரிக்கெட்டை முடிவு பண்ணினேன். இப்போது நான் சின்ன ஸ்டெப் போட்டாலும் பெரிய ஸ்டெப் போட்டதாக சொல்கிறார்கள். எல்லாம் தொட்டில் பழக்கம்.”
“வில்லனா நடிப்பீர்களா?”

“நடிச்சுக்கிட்டிருக்கேன். இந்தி, கன்னடம்னு தலா ஒரு படத்துலே மெயின் வில்லனா வர்றேன். என்னைப் பொறுத்தவரை ஹீரோ, வில்லன் என்று பிரித்துப் பார்க்கமாட்டேன். ஐ லவ் சினிமா. சினிமாவில் ஏதாவது ஒருவிதத்தில் நான் அங்கமாக இருக்கணும். சினிமாவுக்கு இப்போதுதான் வந்துள்ளேன். பரீட்சார்த்த முறையில் எல்லா ரோலிலும் நடிப்பேன்.” “விஜய், அஜீத்துக்கு வில்லனா நடிக்க வாய்ப்பு கிடைத்தால்?”

“கரும்பு தின்னக் கூலியா? விஜய், அஜீத் இருவரும் மிகப்பெரிய ஜாம்பவான்கள். அவர்களுடன் நடிப்பது என்பது எனக்கு கிடைக்கும் மிகப் பெரிய கெளரவமாக இருக்கும். அதுமட்டுமில்ல, அவர்களுடன் நடிக்கும் போது நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ளலாம். அவர்களுடன் நடிக்க ஒரூ சீன் கிடைத்தாலும் நடிப்பேன்.”“கனவு ரோல்?”

“இப்போ பண்ணுற ‘டீம் 5’ படத்துல வர்ற அகில் கேரக்டரே கனவு ரோல் மாதிரிதான். நான் நிஜ வாழ்க்கையில் கிரிக்கெட் வீரர். இதில் பைக் ரேஸர். எந்த ரோல் பண்ணினாலும் தி பெஸ்ட்  எனுமளவுக்கு என்னுடைய கேரக்டர் பேசப்படணும். அப்படி பேசப்பட்டாலே அது என்னோட கனவு ரோல்தான்.” “ரோல் மாடல்?”

“சினிமாவைப் பொறுத்தவரை மோகன்லால் மாதிரி நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால் நிஜ வாழ்க்கையில் என் அப்பா சாந்தகுமார் நாயர்தான் என் ரோல்மாடல். என்னுடன் பிறந்தவர்கள் மொத்தம் நாலு பேர். எங்களை நல்ல நிலைக்கு கொண்டுவர அப்பா செய்த தியாகம் அதிகம். இந்த உலகத்தில் நான் அதிகமாக மரியாதை கொடுப்பது என் அப்பாவுக்கு மட்டுமே. என்னுடைய ஆல் டைம் பேவரைட் ரோல் மாடல் அப்பா மட்டுமே.”
“சினிமா, கிரிக்கெட் - என்ன வித்தியாசம்?”

“பெரிய வித்தியாசம் இருப்பதாக சொல்ல முடியாது. இரண்டு துறைக்கும் உடம்பை ஃபிட்டாக வைத்திருக்க வேன்டும். சினிமாவிலே டயலாக் பேசணும், மேக்கப் இருக்கும். மற்றபடி இரண்டு துறைக்கும் உழைப்பு என்பது ஒன்றுதான்.” “கிரிக்கெட்டை மிஸ் பண்ணுகிறோம் என்ற ஃபீல் இருக்கிறதா?”“பெரியளவில் ஃபீலிங் கிடையாது. சினிமாவுக்குள் வந்த பிறகும் கிரிக்கெட் என்னுடன் பயணம் செய்கிறது. சமீபத்தில் நடந்த டோலிவுட் செலிபிரிட்டி லீக் மேட்ச்சுக்கு கோச்சாக இருந்தேன். கிரிக்கெட் என் ரத்தத்தில் ஊறிப்போன விஷயம். அவ்வளவு எளிதில் என் வாழ்க்கையில் இருந்து கிரிக்கெட்டைப் பிரித்து விட முடியாது.”

“உங்க குடும்பத்துக்கு சினிமா பின்னணி உண்டு அல்லவா?”
“ஆமாம். என் வீட்ல நான் மட்டும்தான் கிரிக்கெட் வீரர். அப்பா சாந்தகுமார் நாயர் மலையாளத்தில் மிகப் பெரிய தயாரிப்பாளர். சத்யன், மது நடித்த படங்களைத் தயாரித்திருக்கிறார். என்னுடைய சகோதரி நிவேதிதா  தமிழ், மலையாளப் படங்களில் நடித்துள்ளார். என்னுடைய மைத்துனர் மதுபாலகிருஷ்ணன் பின்னணிப் பாடகர்.

என்னுடைய சகோதரர் மலையாளப் படத் தயாரிப்பாளர். என்னுடைய உறவினர்கள் பலர் சினிமா துறையில் இருக்கிறார்கள். அந்த வகையில் டோட்டல் ஃபேமிலியே சினிமா ஃபேமிலி. ஆனால் என்னைச் சுற்றி என் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சினிமாவில் இருந்தாலும் அவர்கள் நிழலில் நிற்காமல்,ஸ்ரீசாந்தின் அப்பாதான் சாந்தகுமார், ஸ்ரீசாந்தின் சகோதரிதான் நிவேதிதா என்ற பெயரை எடுக்க விரும்புகிறேன். நான் நடிகனாக மாறியதற்கு சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சினிமாவிலும் பெயர் எடுக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.”

- சுரேஷ்ராஜா