மரகத நாணயம்



பரிசுத்த ஆவிகள்!

சேர மன்னன் இளம்பொறையின் சமாதியில்  இருக்கும் மரகத  நாணயத்தை  எடுத்து வருபவர்களுக்கு   ஒரு கோடி ரூபாய் கிடைக்கும் அரிய வாய்ப்பு. சின்னச்சின்ன திருட்டுகளைச் செய்துவரும் ஆதி இந்த ஆபரேஷனில் இறங்குகிறார்.

அந்த மரகத நாணயத்தைக் கையால் தொட்ட  132 பேர் இதுவரை மரணத்தைத் தொட்டிருக்கிறார்கள் என்பது வரலாறு. இருப்பினும் குடும்பச் சூழலுக்காக ஆபத்தான அசைன்மென்டுக்கு தயாராகிறார் ஆதி. இந்த முயற்சியில் இறந்துபோன நான்கு ஆவிகள் மற்றும் நண்பன் டேனியல் துணையுடன் பயணம் தொடங்குகிறது. கிடைத்தது மரகதமா மரணமா என்பதை விவரிக்கிறது தெளிவான திரைக்கதை.

அலட்டல் இல்லாமல் அளவாக நடித்து சாகசம் செய்கிறார் ஆதி. நிக்கி கல்ராணியின் மீதான காதல் ஏக்கம், மரகத நாணயத்தைக் கைப்பற்றியே ஆகவேண்டும் என்கிற வெறி ஆகியவற்றை திறம்பட வெளிப்படுத்தியிருக்கிறார்.படத்தின் சிறப்புகளில் சிம்மாசனம் போட்டுக்கொள்கிறார் நிக்கி கல்ராணி. ஒரு ஆண் ஆவி அவரது உடலுக்குள் புகுந்துகொள்ள, ஆணைப்போலவே மேனரிசம், அசத்தலான ஆண்குரல் என அசத்துகிறார்.

டப்பிங் குரலில் பேசி நடிக்கும்போதே சபாஷ் வாங்குகிற ராமதாஸ் சொந்தக்குரலுக்கு மாறியபிறகு கைதட்டல்களை அள்ளுகிறார். ‘கபாலி’யில் ‘நெருப்புடா...’ பாடலைப்பாடிய அருண்ராஜ், காமராஜ் ஆவியாக நடித்துப் போடும் ஆட்டத்தில் அரங்கத்தில் ஆரவாரம். டிவிங்கிள் ராமநாதன் கதாபாத்திரத்தில் வரும் ஆனந்தராஜின் சேட்டைகள் செம காமெடி. தமிழ் வாத்தியார் ஆவியாக நடித்திருக்கும் சங்கிலி முருகன் ‘ங்கொய்யால’ என்று சொல்லும்போது ஓவர் சிரிப்பலையில் குலுங்குகிறது தியேட்டர். 

மைம் கோபி, கோட்டா சீனிவாசராவ், ஆதேஷ்,  பிரம்மானந்தம் ஆகியோர் வந்துபோனாலும் மனதில் நின்று போகிறார்கள். மரகத நாணயத்தைத் தொட்டவர்களைக் கொல்லவரும் லாரிகூட ஒரு பாத்திரமாக சித்தரிக்கப்பட்டிருப்பது சிறப்பு.

திபுநினன் தாமஸ்  இசையில் அளவான பாடல்களும் பின்னணி இசையும் ஈர்க்கின்றன.  பி.வி.ஷங்கரின் ஒளிப்பதிவு பாராட்டுப் பெறுகிறது. ரசிகர்களுக்கு நாணயமாக நடந்து கொள்ளவேண்டும் என்ற உறுதியுடன் பரிசுத்தமான ஆவியை வழங்கியிருக்கும்  இயக்குநர் ஏ.ஆர்.கே. சரவன் தமிழ் சினிமாவுக்கான நல்ல வரவு.