பத்தோடு பதினொண்ணா இருக்கறவனோட கதை!



“சினிமா சிலருக்கு உடனே வசப்படும். சிலருக்கு வனவாசமாகிடும். இதில் நான் இரண்டாவது வகை. நீண்ட முயற்சிக்குப் பிறகு ஒரு நல்ல படத்தில் என்னுடைய கேரியர் துவங்குவதால் சந்தோஷமாக இருக்கிறேன்.

அதுக்கு காரணமான என்னுடய தயாரிப்பாளர் ‘சில்வர் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ்’ சிவ ரமேஷ்குமாருக்கு என் நன்றி எப்போதும் இருக்கும் என்று சென்டிமென்ட்டாக ஆரம்பித்தார், ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’ படத்தின் இயக்குநர் இன்பசேகர்.

“டைட்டில் டாப்பா இருக்கே?”
“முக்கியமான விஷயத்தை சொல்வதற்கு முன்னாடி மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்கு முன்னாடி சொல்கிற வார்த்தை ரொம்ப முக்கியம். அதைப் பொறுத்துதான் சொல்லப் போற விஷயம் முக்கியமானதா, இல்லையா என்பது தெரியும். அந்த அடிப்படையில்தான் இப்படியொரு டைட்டில் செலக்ட் பண்ணினோம்.

நிச்சயம் எங்கள் தலைப்பு படத்தில் ஏதோ சொல்லப் போகிறோம் என்ற சிந்தனையைத் தூண்டும். அதுக்காக சீரியஸான விஷயத்தை சொல்லப் போறோம் என்றில்லை. உங்க லைஃப்ல நடந்த, நடக்கப்போகும் விஷயத்தைத்தான் படத்தில் சொல்லியிருக்கிறேன்.”
“முதல் படமே காமெடி படமா?”

“ப்ளாக் காமெடின்னு சொல்லுவாங்களே அதுமாதிரியான படம் இது. எந்த இடத்திலும் யதார்த்தத்தை மீறாத நகைச்சுவைப் படமாக இருக்கும். காமெடி இருந்தாலும் வாழ்வியலோடு இருக்கும். மதுரை, திருநெல்வேலி மாதிரி சென்னைக்கு என்று ஒரு லைஃப் ஸ்டைல் இருக்கிறது. அந்த மாதிரி சென்னையில் இருக்கிற ஒரு பையனோட வாழ்க்கைதான் படம்.

படத்தோட ஹீரோ கிடாரிஸ்ட்டா வர்றார். இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் போன்ற ஜாம்பவான்கள் குரூப்ல கிடார் வாசிக்கணும் என்பதுதான் லட்சியம். ஆனால் கல்யாண கச்சேரி யில் பத்தோடு பதினொன்றாக கிடார் வாசிக்கத்தான் வாய்ப்பு கிடைக்கிறது. திடீர்னு ஹீரோவுடைய வாழ்க்கையில் சில எதிர்பாராத சம்பவங்கள் நடக்கிறது. அதிலிருந்து அவர் வெளியே வருவதற்கு எப்படி போராடுகிறார் என்பதுதான் படம். இந்த விஷயத்தை ப்ரேம் பை ப்ரேம் காமெடியா சொல்லாமல் அடக்கி வாசித்து சொல்லியிருக்கிறேன். முதல் காட்சியில் ஆரம்பிக்கும் விறுவிறுப்பு கடைசி காட்சி வரை நீடிக்கும்.”

“தம்பி ராமையா மகன் உமாபதிதான் ஹீரோவா?”
“முதல் படத்திலேயே பெரிய ஸ்டார், பெரிய பட்ஜெட் என்று இல்லாமல் மீடியம் பட்ஜெட்டில் ஒரு புதுமுகத்தை வைத்து எடுக்கலாம் என்று முடிவு பண்ணினேன். ஆடிஷனில் நூற்றுக்கணக்கில் கலந்துகொண்டார்கள். ஆனால் யாரும் மனசுக்கு திருப்தியா படலை. இந்தக் கதை பாடலாசிரியர் யுகபாரதிக்கு தெரியும். ஹீரோ கமிட் பண்ணாததைக் கேள்விப்பட்டு, ‘ஒரு தம்பி இருக்கிறார். உங்க கதைக்கு அவர் செட்டாகிற மாதிரி தெரியுது.

பிடிச்சிருந்தா யூஸ் பண்ணுங்க’ என்று உமாபதியை அறிமுகம் செய்து வைத்தார். முதல் சந்திப்பிலேயே உமாபதி என் கவனத்தை ஈர்த்துவிட்டார். ஏன்னா, ஒரு ஹீரோவுக்குரிய உடல்வாகும் தேஜஸும் கச்சிதமாக இருந்தது. நாலைந்து நாள் பழக்கத்துக்குப் பிறகுதான் தம்பிராமையாவின் மகன் என்று தெரிந்தது. அப்பாவைப் போல் உடல்மொழி, டயலாக் டெலிவரியில் மிரட்டி யிருக்கிறார். டான்ஸ், ஃபைட், காமெடி என்று நவரசத்தையும் காண்பித்திருக்கிறார். லொகேஷனோடு தன் வேலை முடிந்துவிட்டது என்றில்லாமல் ரிலீஸ் வரை என் கூடவே இருக்கிறார். இது சினிமா மீதான காதலே தவிர வேறொன்றுமில்லை.”

“ரேஷ்மா ரத்தோர் ஜோடிப் பொருத்தம் உமாபதிக்கு பொருத்தமா இருக்கே?”
“வேகாத வெயிலில் பெங்களூர், கொச்சின், மும்பைன்னு ஹீரோயினுக்காக தேடுதல் வேட்டை நடத்தி கண்டுபிடித்த ஹீரோயினாச்சே? அப்படித்தான் இருப்பார். பூர்வீகம் வட இந்தியா. இரண்டு தலைமுறையாக ஐதராபாத்தில் செட்டிலான ஃபேமிலி. தெலுங்குல அம்மணி இப்ப செம பிஸி. தமிழில் இதுதான் முதல் படம். வெரி குட் பெர்ஃபாமர். அனுபவசாலி என்பதால் எல்லாக் காட்சிகளையும் ஒரே டேக்கில் ஓ.கே.பண்ணினார். இந்தப் படத்தில் நடிக்க வரும்போது அவருக்கு தமிழ் சுத்தமா தெரியாது. ‘ஆதித்யா’, சன் மியூசிக் மாதிரி சேனல்களைப் பார்த்து தமிழ் கற்றுக்கொண்டு இப்போது தமிழில் வெளுத்துக்கட்டுகிறார்.”

“உமாபதிக்காக பிரபுசாலமன் கதை கேட்டாராமே?”
“உமாபதியின் தந்தை தம்பிராமையா சீனியர் என்பதால் அவரிடம் கதை சொல்லலாம் என்று முடிவு செய்து அவரிடம் கதை சொல்லப் போனேன். அவர், நான் எதையும் முடிவு பண்ணமாட்டேன். உமாபதிக்கு சினிமாவைப் பற்றிய பார்வை இருக்கிறது. அவரே முடிவு செய்யட்டும் என்றார். வேணும்னா ஒரு ஐடியா பண்ணலாம். எனக்கு எல்லாமே பிரபுசாலமன்தான். இந்தக் கதையை நான் கேட்பதை விட பிரபு சாலமன் கேட்டால் நல்லா இருக்கும் என்று அவரிடம் உட்கார வைத்தார். பிரபு சாலமனுக்கும் கதை பிடித்திருந்தது. அவரும், ‘உமாபதி ஹீரோவா அறிமுகமாவதற்கு பொருத்தமான கதை’ என்றார்.”

“கருணாகரனுக்கு என்ன கேரக்டர்?”
“ஹீரோ, ஹீரோயினுக்கு அடுத்தபடியாக முக்கியமான ரோல் பண்ணியிருக்கிறார். மொத்த வெயிட்டும் அவர் தோளில்தான் இருக்கும். கருணாகரனைப் பார்க்கும் போது உங்கள் நண்பரை ஸ்கிரீன்ல பார்த்த மாதிரி இருக்கும். அந்தளவுக்கு அவருடைய கேரக்டர் யதார்த்தத்துக்கு அருகில் இருக்கும். வழக்கமா ஹீரோ கூட வர்ற காமெடி கேரக்டர் கிடையாது. பாண்டியராஜன், மனோபாலா, ஆடுகளம் நரேன், யோகி ஜேபிக்கும் படத்துல முக்கியத்துவம் இருக்கும்.” “மற்ற சிறப்பம்சங்கள்?”

“இந்தப் படத்தின் முதுகெலும்பாக இமான், யுகபாரதியை சொல்லலாம். நான் மாங்கு மாங்குன்னு கதை, திரைக்கதை, வசனத்தை பக்கம் பக்கமா எழுதியதை இரண்டு பேரும் சேர்ந்து நாலு பாட்டில் கொடுத்திருக்கிறார்கள். இமானைப் பொறுத்தவரை சின்ன ஹீரோ, பெரிய ஹீரோ என்று பார்ப்பதில்லை. அவருக்கு புதுக்களமா இருக்கணும். கதையைக் கேட்டதும் ரொம்பவும் இம்ப்ரஸாகி, யார் ஹீரோ?ன்னு கேட்காமலேயே ‘நான் பண்றேன்’ என்றார். யுகபாரதி அற்புதமான பாடல் கொடுத்திருக்கிறார். இமானின் ஸ்டூடியோவில் பிறந்த ‘ஏனடி’, ‘அந்தப்புள்ள மனச’, ‘டபுள் ஓ.கே’, ‘இதுக்குதானே ஆசைப்பட்டேன்’ பாடல்கள் பரவசத்தைக் கொடுக்கும்.

ஒளிப்பதிவாளர் பி.கே.வர்மா. ‘அட்டக்கத்தி’, ‘குக்கூ’ன்னு சொல்லும்படியான படங்களைப் பண்ணியவர். எடிட்டர் மதன் கதைக்கு என்ன ஷாட்ஸ் தேவையோ அதை மீட்டரை தாண்டாமல் நறுக்குன்னு கொடுத்திருக்கிறார். ஸ்டண்ட் மாஸ்டர் தளபதி தினேஷ் சண்டைக் காட்சிகளை ஷார்ப்பா பண்ணிக் கொடுத்தார். நடன இயக்குநர்கள் தினேஷ், ஷெரீப், ‘தி பெஸ்ட்’ கொடுத்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தின் காஸ்டியூம்ஸ் சம்திங் ஸ்பெஷலா இருப்பதாகச் சொல்கிறார்கள். அந்த கிரெடிட் என்னுடைய தோழி சரளா விஜயகுமாரைத்தான் சேரும். சிங்கப்பூர் சிட்டிசன். ‘பாணா காத்தாடி’, ‘எங்கேயும் எப்போதும்’, ‘பொன் மாலைப் பொழுது’ன்னு அவங்களோட டிராக் ரிக்கார்ட் பெரியது. இந்தப் படத்துக்கு சென்சார் போர்டிலும், விநியோகஸ்தர்கள் மத்தியிலும் நல்ல பேர் கிடைச்சிருக்கு. அதுக்கு காரணம் எனக்கு கிடைத்த டெக்னீஷியன்ஸ்தான். இந்தப் படம் பார்த்துவிட்டு வெளியே வரும் போது ஒரு மணி நேரமாவது ஹேப்பியா இருப்பீங்க.”

- சுரேஷ்ராஜா