பாரதிராஜாவை பொறாமைப்படவைத்த புது டைரக்டர்!



காட்சித் தொடர்பியல் முடித்துவிட்டு, குறும்பட இயக்கத்தில் ஈடுபட்டார் நித்திலன். கலைஞர் தொலைக்காட்சியின் ‘நாளைய இயக்குநர்’ போட்டியில் பெற்ற வெற்றி, சினிமாவை நோக்கி நகரவைத்தது. யாரிடமும் உதவியாளராகப்  பணியாற்றவில்லை என்பது நுழைவுத்தடையாக இருந்தது. 

தனது இயக்கத்தில் உருவான  ‘புன்னகை வாங்கினால் கண்ணீர் இலவசம்’ குறும்படத்தைக் கையில் எடுத்தார். வழி பிறந்தது. பாரதிராஜா, விதார்த் ஆகியோரின் மனதைக்கவர்ந்து கால்ஷீட் வாங்கினார். ஸ்ரேயா ஸ்ரீ மூவிஸ் தயாரிக்க முன்வந்தது. அண்மையில் பாடல் வெளியீட்டு விழா நடந்துவிட்டது. மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார் இயக்குநர்  நித்திலன்.

 ‘’பொதுவாக இந்த மாதிரி நிகழ்ச்சிகளுக்கு நான் வர விரும்புவதில்லை. வருவதில்லை. அதிலும் இது நானே நடித்திருக்கும் படம். வரமாட்டேன் என்றுதான் சொன்னேன். ஆனாலும் இந்தப் படத்தின் இயக்குநருக்காக வந்தேன். இந்தப் படத்தின் இயக்குநர் நித்திலன், வளர்ந்து வரும் தளிர். அந்தத் தளிரைப் பாராட்டவே வந்தேன்.

நித்திலன் பார்க்க ரொம்ப அமைதி யாக இருப்பான். அவன் மிக ஆழமான சிந்தனையுடைய இளைஞன். அவனது குறும்படம், “புன்னகை வாங்கினால், கண்ணீர் இலவசம்” பார்த்துவிட்டு அவன்மீது மிகுந்த பொறாமை கொண்டேன். அந்த அளவு திறமைசாலியான பையன். இந்தப் படத்தில், நான் பாரதிராஜா என்பதை ஓரமாக தூக்கிப் போட்டுவிட்டு நடிகனாக என் வேலையை மட்டும் செய்திருக்கிறேன். நித்திலன் நிச்சயம் மிகப்பெரிய இயக்குநராக பாராட்டப்படுவான்.

விதார்த், மிக வீரியமான நடிகன். பெங்காலி சினிமாக்களையும், மலையாள சினிமாக்களையும் பார்க்கும்போது அந்த நடிகர்களின் மிக யதார்த்தமான நடிப்பைப் பார்த்து பிரமிப்பேன். விதார்த், அப்படி ஒரு நடிகன். தமிழ் சினிமாவில், நடிப்பது தெரியாமல் நடிக்கக்கூடிய ஒரே நடிகன் விதார்த். நிச்சயம் பெரிய இடத்தைப் பிடிப்பான். விரைவில் நடிப்பிற்காக தேசிய விருது வாங்குவான். அவனுக்கு என் வாழ்த்துகள்’’ என்று பாடல் வெளியீட்டு விழாவில்  மனம் திறந்தார் பாரதிராஜா.

‘’இந்தப் படத்தில் நான் நடித்திருப்பதால் எனக்கு நான்கு படங்களுக்கு மேல் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு வந்திருக்கிறது. அதோடு, நான் இப்போது இயக்குநர் இமயம் இயக்கும் படத்திலும் நடித்துக்கொண்டிருக்கிறேன். இது எல்லாம் அமைய நித்திலனும் குரங்கு பொம்மையும்தான் காரணம்.

பாரதிராஜா படத்தில் நடிப்பது அவ்வளவு கஷ்டம், சம்பளம் தரமாட்டார், திட்டுவார், அடிப்பார் என்று சொல்வார்கள். ஆனால், பாரதிராஜா  என்னிடம் கதை சொன்னதும் உனக்கு இவ்வளவு லட்சங்கள் சம்பளம் தருவேன் என்று ஒரு நல்ல தொகையைச் சொன்னார். நானும் சரி என்றேன். அவர் என்ன தொகை சொன்னாரோ, அதே அளவு தொகை ஒரு கடன்காரருக்கு  உடனடியாகக் கொடுக்கவேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் நான் அப்போது இருந்தேன். பாரதிராஜா  என்னை அழைத்து கதை சொன்னதும், எனக்கு அட்வான்ஸ் பணத்தை செக்காகக் கொடுத்தார்.

சம்பளமாகச் சொன்ன தொகையில் ஒரு கால்வாசியை அட்வான்ஸ் செக்காக கொடுத்திருப்பார் என்று நினைத்தேன். ஆனால் சம்பளமாகப் பேசிய முழுத்தொகையையும் ஒரே செக்காகக் கொடுத்தார். நான் அதை எதிர்பார்க்கவில்லை. உடனே அந்த செக்கை வைத்து என் கடனை திருப்பிக்கொடுத்து அந்த இக்கட்டான சூழலில் இருந்து தப்பித்தேன்’’ என்று நெகிழ்ந்தார் விதார்த்.

த்ரில்லர் களத்தில் பயணிக்கும் ‘குரங்கு பொம்மை’ படத்தில்  பாரதிராஜாவும் விதார்த்தும் அப்பா- மகனாக நடிக்கிறார்கள். தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் அமைதியான வில்லன் வேடத்தில் அறிமுகமாகிறார். சம்பளமே வேண்டாம் என்று சொன்ன அவருக்கும் நல்ல தொகையைக் கொடுத்திருக்கிறது தயாரிப்பு நிர்வாகம். விதார்த் ஜோடியாக டெல்னா டேவிஸ் நடித்துள்ளார்.

‘அபியும் நானும்’ குமரவேல் இனி ‘குரங்கு பொம்மை’ குமரவேல் என்று அழைக்கப்படும் அளவுக்கு அவரது கதாபாத்திரம் அமைந்திருப்பதாக சொல்கிறது  படக்குழு. பாரதிராஜாவுக்கு தேசியவிருது நிச்சயம் என்பது படக்குழுவின் நம்பிக்கை. கன்னடப்படஉலகைச் சேர்ந்த அஜனீஷ் லோக்நாத் இசையமைத்திருக்கிறார். குறும்படக் காலத்திலிருந்தே இயக்குநருடன் உடன் பயணிக்கும் மடோன் அஸ்வின் வசனம் எழுதியுள்ளார்.

எதிர்பார்ப்புமிக்க இந்தப்படத்துக்கு மேலும் சில சிறப்புகள் சேர்ந்திருக்கின்றன.  ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி வெளியிட்டார்.  அனிமேஷன் போஸ்டரை விஜய் சேதுபதி வெளியிட்டார். இசை உரிமையை  இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, தனது யு 1 ரெக்கார்ட்ஸ் மூலம் பெற்றுள்ளார். ஆர்யா  தனது டுவிட்டர் பக்கத்தில் ‘குரங்கு பொம்மை’ படத்தின் டீசரை வெளியிட்டார்.

- நெல்பா