யானையை ஜெயிக்கும் எலி!



நடிகர்கள் மார்க்கெட் இழந்த பிறகு சொந்தப் படம் எடுத்து தங்கள் மார்க்கெட்டை நிலை நிறுத்தி ஜெயித்திருக்கிறார்கள் என்பது கடந்த கால வரலாறு. ஆனால் ரமீஸ் ராஜா சற்று வித்தியாசமானவர்.

இண்டஸ்ட்ரிக்கு வரும் போதே ‘டார்லிங் - 2’  என்ற சொந்தப் படம் எடுத்து  ஹீரோவாக அறிமுகமானவர். இப்போது மீண்டும் ‘விதி மதி உல்டா’ என்ற படத்தைத் தயாரித்து ஹீரோவாக நடிக்கிறார். தயாரிப்பாளராக இறுதிக்கட்ட வேலையில் பிஸியாக இருந்தவரிடம் பேசினோம்.

“அது என்ன ‘விதி மதி உல்டா’ன்னு எகனைமொகனையா தலைப்பு?”
“இந்தப் படத்தில் வில்லனா நடிப்பவர் கமல், விஜய், தனுஷ்னு மாஸ் ஹீரோக்களுடன் மோதியிருக்கிறார். அவருக்கு ஈக்குவலா நான் அடித்தால் அது காமெடியாக இருக்கும். வில்லனை அடியால் ஜெயிப்பதைவிட மதியால் ஜெயிக்கிற மாதிரி கதை இருக்கும். அதுமட்டுமில்ல, இந்தப் படத்துக்கு முதலில் ‘உல்டா‘ன்னுதான் தலைப்பு வெச்சோம். அது அரபிக் வார்த்தை என்பதால் வரிவிலக்கு கிடைப்பதில் பிரச்சனை வரும்னு ‘விதி மதி உல்டா’ன்னு மாத்தி

வெச் சோம்.”“கதை?”
“தமிழ் சினிமாவில் சொல்லப்படாத கதை என்றெல்லாம் சொல்லவில்லை. இது வழக்கமான கதைதான். வாழ்க்கையில் சில விஷயங்கள் இப்படித்தான் இருக்கும்னு எதிர்பார்ப்போம்.  ஆனால் எதிர்பார்ப்புக்கு  வேறுவிதமாக நாம் நினைத்தது நடக்கும். சில விஷயங்களை நம் வாழ்க்கையில் எதிர்பார்க்கவே மாட்டோம்.

ஆனால் அது நடந்துடும். நம்முடைய மனதுக்கும், நடைமுறை வாழ்க்கைக்குமான இந்தப் போட்டிதான் படத்தோட கதை. மிகப்பெரிய தாதாவை நேருக்கு நேர் மோதுவதற்கு பலம் இல்லாத ஹீரோ எப்படி தன் மதியால் ஜெயிக்கிறார் என்பதுதான் படத்தோட ஒரு வரிக் கதை. எந்த இடத்திலும் தொய்வு ஏற்படாதளவுக்கு திரைக்கதை விறுவிறுப்பாக இருக்கும்.”

“தயாரிப்பாளர் ஹீரோவா நடிச்சா படத்தில் ஓவர் வாசிப்பு இருக்குமே?”
“சொல்லப்போனால் இந்தக் கதைக்கு ஹீரோவே தேவைப்படலை. பாய் நெக்ஸ்ட் டோர் என்பது மாதிரியான ஒரு பையன்தான் தேவைப்பட்டார். நான் தயாரிப்பாளர் என்பதால் பத்து பேரை அடிக்கிற மாதிரி சீன்வையுங்க என்று கேட்டதில்லை. என்னுடைய முதல் படமான ‘டார்லிங்-2’ படம் டபுள் ஹீரோ சப்ஜெக்ட் படமாக பண்ணுவதற்கு காரணமே ஹீரோவுக்கு இணையாக இன்னொரு கேரக்டர் இருந்தால் நன்றாக இருக்கும் என்று ஃபீல் பண்ணினேன். அப்படித்தான் அந்தப் படத்தில் கலையரசன் நடித்தார். 

இந்தக் கதையும் எனக்கே எனக்கு என்கிற மாதிரி இருந்ததால் துணிந்து சிங்கில் ஹீரோவா களமிறங்கியிருக்கிறேன். ஆதித்யா என்கிற அந்தக் கேரக்டர் எந்த இடத்திலும் அந்நியமா இருக்காது. அன்றாட வாழ்க்கையில் நாம் சந்திக்கிற பையன்களில் ஒருவனாகத்தான் ஆதித்யா என்கிற கேரக்டர் இருக்கும்.”“ஜனனி ஐயருடன் காதல் காட்சிகளில் கொஞ்சிக் குலவினீர்களாமே?”

“நான் ஏற்கனவே சொன்ன மாதிரி இது யதார்த்தமான ஸ்கிப்ரிட். கண்டதும் காதல் மாதிரியான கதை இல்லை. பாடல் காட்சிகளில்தான் நீங்கள் சொல்ற மாதிரி நெருக்கம் இருக்கும். ‘உன் நெருக்கம்’ என்ற பாடலை பாங்காக் கடற்கரையில் படமாக்கினோம். பாடல் வரிகளின்படி நெருக்கம் தேவைப்பட்டது.

ஜனனி ஐயர் ஏற்கனவே பாலா சார் படம் பண்ணியவர். சினிமா அனுபவம் அதிகம். அவரிடம் நிறைய கற்றுக்கொண்டேன் என்று கூட சொல்லலாம். சில ஷாட்களில் நான் ரீடேக் வாங்கினாலும் கூலா இருப்பார். ரொம்பவும் அட்ஜஸ்டபள் ஆர்டிஸ்ட். ஜனனி ஐயரை இதுவரை ஹோம்லியாதான் பார்த்திருக்கிறோம். இதில் மாடர்ன் லுக்ல வர்றாங்க. திவ்யான்னு ஒரு காலேஜ் ஸ்டூடண்ட் ரோல் பண்ணுறாங்க. இந்தப் படம் அவங்க கேரியரில் திருப்புமுனையா அமையும்.” “படத்துல வேற யாரெல்லாம் இருக்காங்க?”

“என்னுடைய முதல் படத்தில் கலையரசன் மாதிரி இந்தப் படத்தில் டேனியல் பாலாஜி முக்கியமான ரோல் பண்றார். டேனியல் பாலாஜியைப் பொறுத்தவரை ஒரு சீன்ல வந்தாலும் அவருடைய நடிப்பு மிரட்டலாக் இருக்கும். இதில் அவருடைய மிரட்டல் கொஞ்சம் அதிகம்னு சொல்லலாம். சென்ராயன், கருணாகரனும் இருக்கிறார்கள். சூது கவ்வும் படத்துல கருணாகரனுக்கு எப்படி காசு பணம் துட்டு பாடல் புகழ் கொடுத்ததோ அதே மாதிரி இதில் அவருக்கு ஒரு பாடல் இருக்கு. ‘அண்ணன்தான்டா டான்....’ என்ற அந்தப் பாடலை கானா பாலா பாடியிருக்கிறார்.”“உங்க டீமைப் பற்றி சொல்லவே இல்லையே?”

“டைரக்டர் விஜய் பாலாஜி. ஏ.ஆர்.முருகதாஸின் சிஷ்யர். ‘ஏழாம் அறிவு’, ‘கஜினி’ (இந்தி), உள்பட சில படங்கள் அவரிடம் வேலை பார்த்தவர். ‘டார்லிங்-2’ படம் பண்ணும்போதே இந்த ஸ்கிப்ரிட்டை சொல்லி ஓக்கே வாங்கி இருந்ததால் பக்கா கமர்ஷியல் படமாக உருவாகியுள்ளது. ரொம்பவும் சின்சியர். கதைக்கு தேவையில்லாத செலவுகளை வைக்கமாட்டார். இசையமைப்பாளர் அஸ்வின் விநாயக மூர்த்திக்கு இதுதான் முதல் படம். ஆனால் அனுபவசாலி போல் பாடல்களையும், பின்னணி இசையையும் பிரமாதமாக கொடுத்திருக்கிறார்.

 ‘தாறுமாறா’ என்ற பாடலை ஜி.வி.பிரகாஷ் பாடியிருக்கிறார். ஒளிப்பதிவாளர் மார்ட்டின். ஏற்கனவே ‘வில் அம்பு’ படம் பண்ணியிருக்கிறார். அவருடைய திறமையும் பேசப்படும்.”“வெளிப்படங்களில் நடிப்பீர்களா?”

“என்னுடைய அடுத்த படமும் சொந்தப்படம்தான். ஸ்கிப்ரிப்ட் ரெடி. ‘விதி மதி உல்டா’ ரிலீஸுக்குப் பிறகு அறிவிப்பு வெளியாகும். வெளிப் படங்களில் நடிக்க எனக்கும் ஆசைதான். ஆனால் ஹிட் கொடுத்துவிட்டு நடிக்கணும். என் திறமையை ப்ரூவ் பண்ணிய பிறகு வெளிப் படங்களில் நடிப்பேன்.”

- சுரேஷ்ராஜா