கட்டம் போட்ட சட்டை என் கையை பிடிச்சி தொட்ட... இசையோடு இயக்கம் செய்கிறார் பரணி!



சில வருடங்களுக்கு முன் ‘பார்வை ஒன்றே போதுமே’ படத்தில் அனைத்துப் பாடல்களையும் ஹிட்டாக்கி ரசிகர்களை லயிக்க வைத்தவர் இசையமைப்பாளர் பரணி. ‘பெரியண்ணா’, ‘சார்லி சாப்ளின்’, ‘சுந்தரா டிராவல்ஸ்’, ‘வெளுத்துக்கட்டு’ என்று கலக்கியவர் இப்போது டைரக்‌ஷன் நாற்காலியில் உட்கார்ந்து ‘ஒண்டிக்கட்ட’ என்ற படத்தையும் இயக்கி முடித்துள்ளார். இறுதிக்கட்ட வேலைகளில் பிஸியாக இருந்தவரிடம் பேசினோம்.
“மியூசிக்கை விட்டுவிட்டு டைரக்‌ஷன் பண்ண வந்துட்டீங்களே?”

“சினிமாவுக்கு வரும்போது எனக்கு இரண்டு ஆசை இருந்துச்சு. ஒண்ணு இசையமைப்பாளரா வரணும். இன்னொண்ணு டைரக்டரா வரணும். இசைக்கான கதவு திறந்தது. டைரக்டர் வாய்ப்புக்காக காத்திருந்தேன். மியூசிக் டைரக்டரா குறுகிய காலத்தில் ஏராளமான படங்களுக்கு இசையமைத்தேன். கால் செஞ்சுரி போட்டாச்சி. இசையமைப்பாளரா ஓரளவுக்கு பெயர் எடுத்ததும் அடுத்த கட்டத்துக்கு நகரணும்னு இசையோடு சேர்த்து டைரக்‌ஷன்  பண்ணவந்தேன்.”

“வாய்ப்பு எப்படி கிடைத்தது?”
“டைரக்‌ஷன் பண்ண வேண்டும் என்ற நோக்கத்தில் ஸ்கிப்ரிட் ரெடி பண்ணி வைத்திருந்தேன். பட்ஜெட் படமா இருந்தாலும் குவாலிட்டியா இருக்கணும், அதுக்கு ஏத்த மாதிரி தயாரிப்பாளர் கிடைச்சா நல்லா இருக்கும்னு என்னுடைய கோ டைரக்டர் சக்தி சிவபெருமாளிடம் சொல்லி வைத்திருந்தேன். அவர்தான் இந்தப் படத்தின் இணை தயாரிப்பாளர் தர்மராஜை அறிமுகம் செய்தார். அவருக்கு கதை பிடிச்சிருந்ததால உடனே படப்பிடிப்புக்கு கிளம்பியாச்சு. 59 நாள்ல படத்தையும் எடுத்து முடிச்சாச்சு.”
 
“படத்துக்கு ஏன் இப்படியொரு டைட்டில்?”
“நீங்க கேட்ட மாதிரிதான் நிறைய பேர் கேட்டாங்க. வாழ்க்கையில் ஒருகட்டத்தில் எல்லோரும் ஒண்டிக்கட்டதான். அப்பா, அம்மா, மனைவி, பிள்ளைகள் என்று உறவுகள் இருந்தாலும் இங்கு ஏதோ ஒரு சூழ்நிலையில் ஒண்டிக்கட்டையாதான் இருக்கோம். இந்த டைட்டில் பொதுவா எல்லாருக்கும் பொருந்தக்கூடியதாக இருந்தாலும் என் கதைக்கு ரொம்பவே பொருத்தம்.”
“முற்றிலும் புதுமுகங்கள்?”

“இந்தப் படத்துக்காக ஆடிஷன் நடத்தினேன். ஏராளமான பேர் கலந்துக்கிட்டாங்க. அதில் ஒருவர்தான் விக்ரம் ஜெகதீஷ். ‘தெனாவட்டு’ உள்பட சில படங்களில் கேரக்டர் ரோலில் நடிச்சவர். ஜாடிக்கேத்த மூடி மாதிரி ஒண்டிக்கட்ட கேரக்டருக்கு கச்சிதமாக இருந்தார். இந்தப் படத்தில் நடிச்சிருக்கிறார் என்று சொல்வதைவிட வாழ்ந்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஹீரோயின் நேகா. ‘உச்சத்துல சிவா’, ‘தண்ணில கண்டம்’ போன்ற படங்கள் பண்ணியிருக்கிறார். இது ஹீரோயினுக்கு முக்கியத்துவம்  உள்ள ஸ்கிப்ரிட். அதை புரிஞ்சிக்கிட்டு நிறைய இடங்களில் அசால்ட்டா ஸ்கோர் பண்ணியிருக்காங்க. முல்லை கோதண்டம், ‘லொள்ளு சபா’ சாமிநாதன்னு படத்துல காமெடிக்கு நிறைய பேர் இருக்காங்க. தவிர, கலைராணி, சென்ராயன், மதுமிதாவுக்கும் முக்கியத்துவம் இருக்கும்.

வில்லனா தயாரிப்பாளர்களில் ஒருவரான தர்மராஜ் பண்ணியிருக்கிறார். சினிமாவுல பல வருஷம் இருந்தாலும் கேமரா அனுபவம் இல்லாதவர். ஆனால் பேர் வாங்கக்கூடியளவுக்கு சிறப்பா பண்ணியிருக்கிறார். என்னுடைய தயாரிப்பாளர் என்பதற்காக சொல்லலை. படம் பார்க்கும் போது நீங்களே அவரை பாராட்டுவீங்க.”  “படப்பிடிப்பு அனுபவம் எப்படி?”

“அது மறக்க முடியாத அனுபவம். கொள்ளிடம் ஆத்துக்குள்ள ஒரு கோயில் உள்ளது. கரையிலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரம் நடந்தே போகணும். அந்த லொகேஷன் படத்துல தனியா தெரியும்.அதே மாதிரி கள்ளக்குறிச்சி கோமுகி அணையில் ‘கட்டம் போட்ட சட்டை என் கையை பிடிச்சி தொட்ட’ என்ற பாடலை எடுத்தோம். அது இரும்பு பாலம். மின்சார ஒயர் அந்த இரும்பு பாலத்தின் வழியா தான் அடுத்த பகுதி போகுமாம்.

இந்த விஷயம் எங்களுக்கு தெரியாது. பாலத்தை விட்டு வெளியே வந்த பிறகுதான் அங்கிருந்த ஊழியர், ‘ஏதாவது ஓர் இடத்தில் மின் கசிவு ஏற்பட்டிருந்தாலே பெரிய ஆபத்துல முடிஞ்சிருக்குமே? முன்னாடியே சொல்லியிருந்தா மெயினை ஆப் பண்ணியிருப்பேனே’ என்று சொன்னபோது எங்களுக்கு அள்ளு இல்லை. இன்னும் பல இடங்களில் மரணத்தின் நுனியைத் தொட்டுவிட்டுத்தான் ஷூட் பண்ணினோம்”
“இசை?”

“பாட்டு எல்லாமே நச்சுன்னு வந்திருக்கு. ‘துண்டு பீடி இல்லேன்னா’ என்ற பாடலை ‘ரஜினி முருகன் படத்தில் ‘ஆவி பறக்கும் டீக்கடை’ பாடலை பாடிய மகாலிங்கம் பாடியிருக்கிறார். இந்தப் பாடலை  பாபநாசம் பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் படமாக்கினோம். ‘அட்டு’ படத்தில் காட்டுற குப்பை மேட்டுக்கு அண்ணன் மாதிரி பெரிய குப்பை மேடு. அங்கு போயிட்டா சாப்பிடவே மனசு வராது. 

‘கெட்ட கெட்ட கனவா வருது ‘முத்தம் ஒண்ணு தரட்டுமா’ என்ற பாடலை ‘ஹலோ மிஸ்டர் கந்தசாமி’ போன்ற ஹிட் பாடலை பாடிய ப்ரியா ஹிமேஷ், பிரசன்னா பாடியுள்ளார்கள். ‘செக்க சிவந்த புள்ள சீனி மடை தோப்புக்குள்ள’ என்ற பாடலை நான் எழுதி பாடியிருக்கிறேன். ‘ஏ முன்ன விட்டு பின்ன நின்னு தினம் ஏங்கி ஏங்கி பாக்குறீயே’ என்ற பாடலை என் மனைவி சுமித்ரா பரணி பாடியிருக்கார்.

என்னுடைய கேமராமேன் ஆலிவர் டெனி, எடிட்டர் விதுஜீவா, டான்ஸ் மாஸ்டர்ஸ் சிவசங்கர், தினா, ராதிகா, பைட் மாஸ்டர் குபேந்திரன்னு எல்லாருமே நான் என்ன கேட்டனோ அதை அப்படியே பண்ணிக் கொடுத்தார்கள். எல்லாரும் அவரவர் பெஸ்ட் கொடுத்தாங்க. படமும் தி பெஸ்ட்டா வந்திருக்கு. ரசிகர்களுக்கு நல்ல விருந்து ரெடி!” 

- சுரேஷ்ராஜா