பாடகராகிறார் கார்த்தி!



முன்பெல்லாம் மழலையாக இருந்த ஜோதிகாவின் தமிழ் இப்போது கனிந்திருக்கிறது. ‘மகளிர் மட்டும்’ தொடர்பான விழாவில் சிவகுமார் குடும்பத்தில் ஆரம்பித்து, படத்தில் சம்பந்தப்பட்ட அத்தனை பேரையும் மறக்காமல் குறிப்பிட்டு மனநிறைவாகப் பேசினார். ‘குற்றம் கடிதல்’ இயக்குநர் பிரம்மாவின் இரண்டாவது படைப்பு ‘மகளிர் மட்டும்’. கதையைக்கேட்ட ஜோதிகா உற்சாகமானார் .

கணவர் சூர்யாவிடம் ஒரு நல்ல கதைசொல்லியாக எடுத்துக் கூறியிருக்கிறார். பிடித்துப்போன சூர்யா, நாமே தயாரிப்போம் என்று சொல்லி ஜோவின் உற்சாகத்தை இரட்டிப்பு செய்துவிட்டார். முதன்மைக் கதாபாத்திரத்தில் ஜோ நடிக்க, ஊர்வசி, சரண்யா பொன்வண்ணன், பானுப்ரியா, நாசர், லிவிங்ஸ்டன் என நடிப்புத்திறன் வாய்ந்த கூட்டணி அமைந்தது.

திருமணம் ஆவதற்கு முன்பு உள்ள கதாபாத்திரம், பைக் ஓட்டும் சாகசம், ஆவணப்பட இயக்குநர் என்று ஜோதிகாவின் பங்களிப்பைப் படைத்திருக்கிறார் பிரம்மா. காதல் மனைவிக்கு இரண்டு மாதங்கள் பைக் ஓட்டும் பயிற்சியைக் கொடுத்திருக்கிறார் சூர்யா.

முன்னர் ஒரு படப்பிடிப்பில் பைக்கில் பின்னால் உட்கார்ந்து சென்ற ஊர்வசி விபத்துக்குள்ளானார். கை உடைந்து மூன்று தையல் போடப்பட்டது. அதை மனதில் வைத்துக்கொண்டு, ஜோதிகாவின் பைக்கில் ஏறுவதற்கு தயங்கியிருக்கிறார். நெரிசல் நிறைந்த நகரச் சாலையில் ஜோதிகா பைக்கை ஓட்டிக்காட்டி நிரூபித்தபிறகு தைரியமாக பின்னால் அமர்ந்துகொண்டாராம்.

ஜிப்ரான் இசையில் ‘மகளிர் மட்டும்’ பாடல்கள் சிறந்த வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. ‘அடி வாடி திமிரா புலியோட்டும் மொறமா’ என்கிற உமாதேவியின் வரிகளை கோல்டு தேவராஜ் பாடியிருக்கிறார். இயக்குநர் பிரம்மா எழுதிய ‘கருகருன்னு சுருட்டமுடி வளத்திருந்தாண்டி கரண்டுக்கம்பி கண்ணா வச்சி கெறங்கடிச்சாண்டி’ பாடலை கோல்டு தேவராஜ், பானுப்ரியா, நமீதாபாபு பாடியிருக்கிறார்கள்.

‘காந்தாரி யாரோ கண் பார்த்ததாரோ’ பாடலை தாமரை எழுதி யிருக்கிறார். அனுராக் குல்கர்னி, பத்மலதா பாடிய பாடல் இது. ‘கேரட்டு பொட்டழகா’ பாடலை பிரம்மா எழுதியிருக்கிறார். இதை ஊர்வசி, நமீதா பாபு, கோல்டு தேவராஜ் பாடியிருக்கிறார்கள்.  பிரம்மா எழுதிய ‘டைம் பாஸுக்கோசரம்’ பாடலை சரண்யா பொன்வண்ணனும் பத்மலதாவும்  பாடியுள்ளனர். விவேக் எழுதிய ‘குபு குபு’ பாடலை ரொம்ப இயல்பாகப் பாடியிருக்கிறார் கார்த்தி. பருத்திவீரன் மற்றும் பிரியாணி படங்களில் ஒருசில வரிகளைப் பாடி அனுபவம் பெற்ற கார்த்தியின் முழுமையான பாடல் இது.

தம்பிதானே என்று தவிர்த்துவிடாமல், முன்னணி பாடகருக்கு வழங்கப்படும் சன்மானத்தை கார்த்தியின் கையில் கொடுத்து  அசத்தியிருக்கிறார் தயாரிப்பாளர் சூர்யா. ராயல்டிக்கான பத்திரத்தைக் கொடுத்து மிரட்டியிருக்கிறார்  இசையமைப்பாளர் ஜிப்ரான்.தலைப்புதான் ‘மகளிர் மட்டும்’. ஆனால், அனைவரும் பார்க்கக்கூடிய வகையில் படத்தை உருவாக்கியுள்ளோம்  என்கிறார் இயக்குநர் பிரம்மா.

- நெல்பா