இலை



கல்வியால் மலரும் இலை!

ஒரு குக்கிராமம். பெண் குழந்தைகளின் கல்வியில் அக்கறையே காட்டாத ஊர். எனினும், அங்கே விவசாயம் செய்யும் கிங் மோகன். தனது மகள் இலையை நன்றாகப் படிக்க வைக்கிறார். மகள் கேட்டதையெல்லாம் வாங்கிக்கொடுத்து ஊக்குவிக்கிறார். ஊர் பெரிய மனிதரின் மகள், இலையைவிட குறைவாகவே மதிப்பெண் வாங்குவார்.

அதனால் பொதுத் தேர்வில் இலையை பரீட்சை எழுதவிடாமல் தடுக்க பல முயற்சிகளைச் செய்கிறார் பண்ணையார். சதிகளை முறியடித்து இலை எப்படி மாநில அளவில் முதல் மாணவியாக வருகிறார் என்பதுதான் கதை.இலை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஸ்வாதி நாராயணன் சிறப்பு. வீட்டுக்குள் மாட்டிக்கொண்ட தம்பியை மீட்பதற்காக அவர் படும் பாடும் ஓட்டமும் நடையுமாக பள்ளிக்கூடத்துக்கு விழுந்து புரண்டு செல்லும் காட்சியும் பரிதாபத்தை அள்ளுகிறது.

விஷ்ணு திவாகரன் இசையமைத்திருக்கிறார். இலை பாடும் ‘இயற்கை’ பாடல் அழகு.சந்தோஷ் அஞ்சால் ஒளிப்பதிவில் கிராமம் அழகுபெறுகிறது. கதையம்சம் உள்ள ஒரு நல்ல படைப்பை இயக்கியிருக்கிறார் பினீஷ் ராஜ்.