மிசஸ் அஜீத்குமார்!



வெறும் ஏழே ஆண்டுகளில் ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக சாதனை செய்தவர் ஷாலினி. ஆனால், அவர் ஹீரோயினாகிய பிறகு தமிழ், மலையாளம் இரு மொழிகளிலும் சேர்த்து பதினைந்து படங்களுக்கு உள்ளாகத்தான் நடித்தார். மிகச்சிறந்த கதை, தன்னுடைய கேரக்டருக்கு முக்கியத்துவம் போன்ற அளவுகோல்களை கறாராக கடைப்பிடித்தே படங்களை ஒப்புக் கொண்டார்.

எனவேதான் அவர் நடித்த அத்தனை படங்களுமே விமர்சகர்களால் பாராட்டப்பட்ட படங்களாக மட்டுமின்றி, வசூலிலும் சக்கைப்போடு போட்டவையாக அமைந்தன.‘கிளாமராக நடிக்க மாட்டேன், நெருக்கமாக நடிக்கமாட்டேன். ஆனால், கதைக்கு தேவைப்பட்டால்...’ என்றெல்லாம் ஷாலினி எந்தக் காலத்திலும் சாக்குபோக்கு சொல்லி தன்னை சமரசப்படுத்திக் கொண்டதே இல்லை. சினிமாவைப் பொறுத்தவரை அவரது கடைசிப்படம் வரை தரமான நடிகையாகவே தன்னை பிராண்ட் செய்து கொண்டார்.

தமிழில் முன்னணி நாயகியாக இருந்தபோதுதான் அஜீத்துடன் ‘அமர்க்களம்’ படத்தில் நடித்தார். படப்பிடிப்பின் போது அஜீத்தின் அன்பான ஆளுமையில், மற்றவருக்கு உதவும் குணத்தில் கவரப்பட்டார். காதலித்தார். ஷாலினிக்கும் இதே பண்புகள் உண்டு. ஆணழகன் என்று சினிமாவில் பெயரெடுத்த அஜீத்தே ஷாலினியின் அன்புக்கு வசப்பட்டார். இவர்களது காதல், திருமணத்தில் முடிந்தது.

உடன் நடிக்கும் நடிகர், நடிகை காதலிப்பதும், திருமணம் செய்துகொள்வதும் புதிய விஷயமில்லை. ஆனால் புகழின் உச்சியில் இருக்கும் போது, பிசியான நடிகையாக இருக்கும்போது அதையெல்லாம் தூக்கி எறிந்து விட்டு ஒருவரை திருமணம் செய்துகொண்டு இல்வாழ்க்கைக்கு திரும்புவது என்பது எல்லோராலும் முடியாது.

அஜீத்தை ஷாலினி திருமணம் செய்தபோது, அஜீத் ஒன்றும் அவ்வளவு முன்னணி நடிகர் இல்லை. வளர்ந்து வரும் ஒரு இளம் நடிகர் மட்டுமே. 15 வருட இல்வாழ்க்கையில் ஒரு சின்ன கீறல்கூட இல்லாமல் அந்த வாழ்க்கைக்கு நியாயம் செய்திருக்கிறார். தான் ஒரு நடிகை என்பதையோ தன் கணவர் ஒரு சூப்பர் ஸ்டார் என்பதையோ அவர் எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் காட்டிக் கொண்டதில்லை.

அஜீத்திற்கு கார் ரேஸர் என இன்னொரு முகம் இருப்பது போன்று ஷாலினிக்கு இன்னொரு முகம் உண்டு. அவர் ஒரு பேட்மின்டன் வீராங்கனை. ஒரு பெரும் நடிகரின் மனைவி என்ற எந்த பந்தாவும் இல்லாமல் பேட்டும் பந்துமாக போட்டிகளுக்கு போய்க்கொண்டிருக்கிறார். வெற்றியோ தோல்வியோ இரண்டையும் சுகமாக சுமந்து திரும்புகிறார்.

சிறிய ஊரில், சிறிய அரங்கில் சிலபேர் மட்டுமே அமர்ந்து ரசிக்க தனக்கு பிடித்த விளையாட்டை விளையாடிவிட்டுத் திரும்புகிறார். இரண்டு குழந்தை களுக்குத் தாயான பிறகும் உற்சாகமாக விளையாட்டுக் களத்தில் ஷாலினி நிற்பது வாழ்க்கையை அவர் தனக்கு பிடித்த வகையில் ரசித்து வாழ்கிறார் என்பதையே காட்டுகிறது. சாதாரண கவுன்சிலர் மனைவியே மகாராணி ரேஞ்சுக்கு நடந்து கொள்ளும் உலகில். ஒரு சூப்பர் ஸ்டாரின் மனைவியாக இருந்தும் தன்னை ஒரு சாதாரண பெண்ணாக கருதிக் கொண்டு வாழ்வதுதான் ஷாலினி ஸ்பெஷல்.

- மீரான்