நயன்தாரா என் கழுத்தை நெரித்தார்!



‘டோரா’ வில்லன் மகிழ்ச்சி!

நயன்தாரா நடிப்பில் வெளியாகி பரபரப்பாக ஓடிய ‘டோரா’வில், அமானுஷ்ய சக்தியால் பழிவாங்கப்படும் மூன்று வில்லன்களில் ஒருவராக நடித்தவர் வெற்றி. பானிபூரி விற்கும் அந்த ரோல், ரசிகர்களிடம் வெகுவாக இவரை அடையாளம் காட்டியிருக்கிறது.

சுமார் பதினேழு ஆண்டு காலமாக சினிமாவில் கூட்டத்தோடு கூட்டமாக அட்மாஸ்பியருக்கு நின்றுகொண்டிருந்தவருக்கு ‘டோரா’ நல்ல அடையாளமாக அமைந்திருக்கிறது.
“எனக்கு சின்ன வயசுலே இருந்து எல்லாமே சினிமாதாங்க. ஆசை, ஆர்வம், மோகம் எதுவேணாலும் வெச்சுக்கலாம்.

 சினிமாவில் வாய்ப்பும் தேடணும், வயித்துக்கு சோறும் வேணும் என்கிற நிலையில் டப்பிங் யூனியனில் கார்டு வாங்கி டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆனேன்.நிறைய விளம்பரப் படங்கள், சின்ன பட்ஜெட் படங்கள் மற்றும் டிவி தொடர்களில் டப்பிங் பேசியிருக்கேன். இருந்தாலும் நடிப்புதான் நம்ம இலட்சியம் என்பதில் உறுதியா இருந்தேன்.

அந்த சமயத்தில்தான் ‘நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சி மூலமாக சுமார் ஏழு குறும்படங்களில் நடிச்சேன்.இயக்குநர் தாஸ் ராமசாமி, ‘டோரா’ படத்துக்காக பானிபூரி விற்கிற ரோலுக்கு ஆர்ட்டிஸ்ட் தேடுவதா தகவல் கிடைச்சுது.

அவரை நேரில் போய் பார்த்து வாய்ப்பு கேட்டேன். ‘அது வட இந்தியர் வேடம். இந்தி பேசணும். நீ பக்கா தமிழன். உன்னோட திராவிட முகம் இந்த கேரக்டருக்கு சரிப்பட்டு வராது’ன்னு சொன்னாரு. அவரு ஒரு வட இந்தியனோட போட்டோவை காமிச்சி, ‘இதுமாதிரி ஆளுதான் நான் தேடுறேன், யாராவது இருந்தா சொல்லு’ன்னு எங்கிட்டேயே கேட்டாரு.

நான் ஆளை தேடலை. என்னை நானே அப்படி மாத்திக்கிறதுன்னு முடிவு பண்ணிட்டேன். முதலில் தாடி, மீசையை எல்லாம் மழிச்சிட்டேன். தெருத்தெருவா போய் பானிபூரி விக்கிறவங்களோட மேனரிசம், தோற்றத்தையெல்லாம் ஸ்டடி பண்ணினேன். அவங்களை மாதிரியே டிரெஸ் பண்ண ஆரம்பிச்சேன்.

உச்சமா ஒரு பானிபூரிக் கடையில் வேலைக்குச் சேர்ந்து பானிபூரி விக்க ஆரம்பிச்சேன். இது எல்லாத்தையும் அப்பப்போ என் மொபைலில் வீடியோவாகவும், ஸ்டில்ஸாகவும் பதிவு பண்ணி வெச்சிக்கிட்டேன். லேசா இந்தியும் கத்துக்கிட்டேன்.

கொஞ்சநாள் கழிச்சி டைரக்டர் முன்னாடி போய் நின்னு இந்தியில் பேசி, என்னோட திறமையை காமிச்சேன். அவர் கொஞ்சமும் எதிர்பார்க்க வில்லை. என்னோட ஹார்ட் ஒர்க்கை பார்த்து அசந்து போயிட்டார். ‘நீயே நடி’ன்னு சொல்லிட்டாரு. இப்படித்தான் எனக்கு ‘டோரா’ வாய்ப்பு கிடைச்சது.

முதன்முதலா பெரிய ரோல் பண்றோம். கூட நடிக்கிறவங்க நயன்தாரான்னதுமே படபடப்பா இருந்தது. ஆனா, நயன் மேடம் எந்த பந்தாவுமில்லாமே ரொம்ப எளிமையா பழகினாங்க. ஒரு சீன்லே அவங்க என்னை கழுத்தை நெரிக்கணும். அதில் நடிக்கிறப்போ ‘வலிக்குதா?’ன்னு மனிதாபிமானத்தோட கேட்டு நெகிழ வெச்சிட்டாங்க.

ஒரு சீன்லே பாட்டில் துண்டுகளைப் போட்டு துணியால் என்னை அடிக்கிற மாதிரி காட்சி. அந்தக் காட்சியில் நடிக்கிறப்போதான் நிஜமாவே வலிச்சது. தியேட்டரில் அந்தச் சீனை பார்த்த ரசிகர்கள், ‘அவனை சாகடி’ன்னு கத்துறாங்க. நான் இதுவரை அனுபவிச்ச எல்லா வலியுமே போயிடிச்சி” என்று உருக்கமாகப் பேசும் வெற்றிக்கு இப்போது அடுத்தடுத்து நிறைய வாய்ப்புகள் வருகிறதாம். மனுஷன், சந்தோஷத்தில் ஜொலிக்கிறார்.

- எஸ்ரா