சினிமாவுக்கு புதிய வினியோக முறை!



‘ஹிட்பாக்ஸ்’ மூலம் கொட்டப்போகுது வசூல்!

திரையுலகமே மூக்கில் கை வைக்குமளவுக்கு ‘வைகை எக்ஸ்பிரஸ்’ படத்துக்கு பிரும்மாண்டமான டிரைலர் வெளியீட்டு விழாவை நடத்தி அசத்திவிட்டார் படத்தின் ஹீரோ ஆர்.கே. படத்தின் ஹீரோயின் நீதுசந்திரா. தமன் இசையமைத்திருக்கிறார். வி.பிரபாகர் வசனம்.

பிரபல ஹீரோக்களின் படங்களை விநியோகம் செய்வதற்கே தாவூ தீரக்கூடிய சூழலில், வினியோகத்தில் ஒரு புதுமுறையை அறிமுகப்படுத்தி, வெற்றிகரமாக ‘வைகை எக்ஸ்பிரஸ்’ படத்தை திரைக்குக் கொண்டு வந்திருக்கிறார் ஆர்.கே.

இதுகுறித்து அவரிடம் கேட்டோம்.“இன்றைய சூழலில் படம் தயாரிப்பது மிகவும் சுலபம். திரையுலகில் கொஞ்சமும் அனுபவமே இல்லாதவர்கள்கூட அட்டகாசமாக படமெடுப்பதை பார்த்து வருகிறோம். ஆனால், எல்லோருமே பிரச்னைக்கு உள்ளாவது அந்தப் படத்தை வினியோகம் செய்யக்கூடிய கட்டத்தில்தான்.

உண்மையை சொல்லப்போனால் வினியோகஸ்தர்கள் என்கிற இனமே அரிதாகிக் கொண்டிருக்கிறது. வினியோகத்தை தங்கள் உயிராக நினைத்து செய்து கொண்டிருந்த பல நூறு வினியோகஸ்தர்கள் கடந்த சில ஆண்டுகளில் காணாமல் போய்விட்டார்கள். அதன் விளைவுதான் நூற்றுக்கணக்கான படங்கள் சென்ஸார் சான்றிதழ் வாங்கியும், ரிலீஸ் ஆக முடியாமல் முடங்கிக் கிடக்கின்றன.

இந்தச் சூழலை கவனித்த நான் ‘வைகை எக்ஸ்பிரஸ்’ படத்தின் வினியோகத்தில் ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டிருக்கிறேன். இது வெற்றி பெறும் பட்சத்தில் சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட பல நூறு படங்களுக்கு விடிவுகாலம் பிறக்கும்.

இன்றைய உலகமயமாக்கல் பொருளாதார சூழலில் மார்க்கெட்டிங் சிறப்பாக இருக்கும் பட்சத்தில் எதை வேண்டுமானாலும் சந்தைப்படுத்திக் கொள்ளலாம். திரைப்பட வியாபாரத்தைப் பொறுத்தவரை, இப்படியும் செய்யலாம் என்று செய்து காட்டுகிறேன்.

சினிமா என்பது வெறுமனே பொழுதுபோக்கு அல்ல. பல நூறு கோடி வர்த்தகம் நடக்கும் தொழில் சினிமா. பல லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் துறை. மற்ற துறைகள் நசிவடையும்போது அது குறித்து பேசுபவர்கள், சினிமா குறித்து மட்டும் சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை என்பது பெரும் வேதனை. அறுநூறு பேர் அமரும் திரையரங்கில் நூறு பேர் கூட படம் பார்ப்பதில்லை.

இதற்கு பல்வேறு காரணங்களை நீங்கள் அடுக்கலாம். ஆனால், இறுதியில் சினிமாத்துறை நலிவடைந்து கொண்டே போகிறது என்கிற விடையைத்தான் நீங்களும் சொல்லப் போகிறீர்கள்.

எனவேதான் ‘ஹிட்பாக்ஸ்’ என்கிற புதிய விநியோக முறை மூலமாக களமிறங்கி இருக்கிறேன். பாக்ஸ் ஆபீஸ் கல்லாவை இந்த முறை நிச்சயமாக நிரப்பும் என்று நம்புகிறேன். ‘வைகை எக்ஸ்பிரஸ்’ படத்துக்காக ஆயிரம் விநியோகஸ்தர்களை உருவாக்கி இருக்கிறேன். இந்தப் புதிய முறையில் திருட்டு டிவிடி என்கிற பேச்சுக்கே இடமிருக்காது.

எங்கள் ஹிட்பாக்ஸ் முறையில் மக்களிடம் நேரடியாக டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது. ஆன்லைனில் ஒரு படத்துக்கு டிக்கெட் வாங்கினால்கூட 30 ரூபாய் கூடுதலாக பணம் செலுத்த வேண்டியிருக்கிறது. பத்து டிக்கெட் புக் ஆனால், சினிமாத்துறைக்கு சம்பந்தமே இல்லாத யாரோ 300 ரூபாய் சம்பாதித்துவிட்டுப் போகிறார்கள்.

எங்கள் ஹிட் பாக்ஸ் முறையில் ஒரு டிக்கெட்டுக்கு ஐந்து ரூபாய்தான் கூடுதல். ஒருவரால் ஒரு லட்சம் டிக்கெட் விற்க முடிந்தால் ஐந்து லட்ச ரூபாய் சம்பாதிக்கலாம். கிட்டத்தட்ட செயின் மார்க்கெட்டிங் மாதிரி முறை.

ஹிட் பாக்ஸ் மூலமாக சினிமா பார்க்க விரும்பும் அத்தனை பேருமே தியேட்டருக்கு வந்து படம் பார்ப்பார்கள். உறுதியாக சொல்கிறேன். எங்கள் ‘வைகை எக்ஸ்பிரஸ்’ தொடர்ந்து நான்கு வாரங்களுக்கு இந்த முறையில் அரங்கு நிறைந்த காட்சிகளாய் ஓடும்.

ஹிட் பாக்ஸ் என்கிற இந்த வினியோக முறை உலகிலேயே முதன்முறையாக இந்தியாவில், அதுவும் தமிழ் சினிமாவான ‘வைகை எக்ஸ்பிரஸ்’ மூலம்தான் நடைமுறைக்கு வருகிறது. சினிமாவின் எதிர்காலமாக இந்த ‘ஹிட்பாக்ஸ்’ உருவெடுக்கப் போகிறது” என்று தன்னம்பிக்கையோடு சொல்கிறார் ஆர்.கே.

- சுரேஷ்ராஜா