குறி கச்சிதமா இருக்கும்!



கவண் குறித்து கே.வி .ஆனந்த்

“கோலியாத்துன்னு ராட்சஷன். டேவிட், ஆடு மேய்க்கிற சின்ன பையன். அக்கிரமங்களோட முழு உருவமான கோலியாத்தை சின்ன உண்டிகோலால அடிச்சி டேவிட் பழிவாங்கினான். பைபிள்லே வர்ற இந்த சம்பவம்தான் என் படத்தோட நாட். உண்டிகோலைத்தான் இலக்கியத் தமிழ்ல ‘கவண்’னு சொல்றோம்.

சர்வ வல்லமை படைத்த ஒரு பெரிய கேங்கை ஒரு சின்ன டீம் வீழ்த்துறதுதான் கவண். இதுலே யார் நெகட்டிவ் கேரக்டர், யார் பாசிட்டிவ்னு சொல்லவே முடியாது. ஏகத்துக்கும் சிக்கலான முடிச்சுகள் இருக்கு. அதை அவிழ்க்கிற சுவாரஸ்யத்தை நீங்க திரைக்கதையில பார்க்கலாம்’’ என்று ட்விஸ்ட் வைக்கிறார் டைரக்டர் கே.வி.ஆனந்த்.

“தொடர்ச்சியா இரட்டை எழுத்தாளர்கள் சுபாவோடு வேலை செய்யுறீங்க?”

“நான் ‘கல்கி’ இதழில் போட்டோகிராபரா வேலை பார்த்தப்போ அங்கே ரிப்போர்ட்டர்களா சுரேஷும், பாலகிருஷ்ணனும் அறிமுகமானாங்க. அப்போ ஆரம்பிச்ச நட்பு. அவங்களோட நாவல்களுக்கும் அட்டைக்காகவும் போட்டோ எடுத்திருக்கேன். எனக்கு முன்னாடியே சுந்தர்.சி மாதிரி டைரக்டர்களோடு அவங்க சினிமாவில் வேலை செஞ்சிருக்காங்க. எங்க கூட்டணியை ரசிகர்களுக்கு பிடிச்சிருக்கு.

இப்போ எழுத்தாளர்களுக்கு சினிமா சரியா மரியாதை கொடுக்குறதில்லைன்னு குறை சொல்லப்படுது. அதை கொஞ்சமாவது மாத்தணும். ஹாலிவுட்டில் எல்லாம் திரைக்கதை எழுத பெரிய டீமே இருக்கு. அந்த நிலைமை இங்கேயும் வருவது நல்லது.

என்னோட படம் தெலுங்கு, இந்தின்னு எந்த மொழிக்கு ரீமேக் ரைட்ஸ் தரப்பட்டாலும் இயக்குநருக்கு மட்டு மின்றி எழுத்தாளர்களுக்கும் சேர்த்து ராயல்டின்னு பார்த்துக்கறேன். படம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே இதுக்கெல்லாம் பக்காவா ஒப்பந்தம் போட்டுடறோம்.

பப்ளிசிட்டியிலும் எழுத்தாளர்களுக்கு உரிய கவுரவம் கொடுக்கணும் என்பது என் பாலிசி. இந்தப் படத்துலே கபிலன் வைரமுத்துவும் எங்களோட சேர்ந்து ஒர்க் பண்ணியிருக்காரு. சுபா இரட்டையர் என்னைவிட பத்து வயசு மூத்தவங்க. கபிலன் என்னைவிட பத்து வயசு இளையவரு.

இதனாலே நாங்க ஒவ்வொருத்தரும் கதையை பார்க்குற பார்வையிலே எங்க அனுபவங்கள், சமகால பிரச்னைகள் தொடர்பா வித்தியாசமான பரிமாணங்கள் கிடைக்குது. அதோட ஒட்டுமொத்த கலெக்டிவ்வான விஷயங்களை காட்சிப்படுத்தறப்போ சுவாரஸ்யம் கூடுது.”“ஆனா இதுமாதிரி பிரச்னைகளை பேசுற படங்களிலும் ஹீரோயிஸத்தை தவிர்க்க முடியாதா?”

“சினிமா, பொருளாதாரம் சம்பந்தப்பட்ட விஷயமும் கூட இல்லையா? நல்ல விஷயங்களை சொன்னாலும் மக்களுக்கு பிடிக்கிறமாதிரி சொல்ல வேண்டியிருக்கு. அவங்களுக்கு எதிரி யாருன்னு சுட்டிக் காட்டணும்னா, அந்த எதிரியை வீழ்த்துற ஹீரோவையும் அடையாளம் காட்டணும். அதுக்குன்னு நான் நூறு சதவிகித ஹீரோயிஸப் படங்களை எடுக்கலை.

என் படங்களில் ஆக்‌ஷன் காட்சிகளிலும் யதார்த்தம் இருக்கும். ‘அயன்’, ‘கோ’, ‘அனேகன்’ படங்களில் ஹீரோவுக்கு மட்டுமில்லை, ஹீரோயினுக்கும் ஈக்குவலா முக்கியத்துவம் இருக்கும். ‘கவண்’ படத்திலும் விஜய் சேதுபதியின் கேரக்டருக்கு மடோனா செபாஸ்டின் கேரக்டர் வெயிட்டேஜ் கொடுக்கும்.”

“டிசைன் டிசைனா குற்றங்களை அலசுறீங்க. இதிலே என்ன ஸ்பெஷல்?”
“கார்ப்பரேட் க்ரைம். ஆக்சுவலா, ‘அனேகன்’ படத்துலே இது ஒரு பார்ட்டா வந்தது. டி.ராஜேந்தர், விக்ராந்த், பாண்டியராஜன், நாசர், ‘அயன்’ பட வில்லன் ஆகாஷ் தீப் சைகல்னு டிசைன் டிசைனா நிறைய கேரக்டர்ஸ்.

இதுல யார் நல்லவங்க, யார் கெட்டவங்கன்னு சொல்ல முடியாது. எந்த ரோல் எந்த மாதிரி மாறும்னு கணிக்க முடியாது. படத்தோட ஆரம்பத்துலே காட்சித் தொகுப்பு மாதிரி இவங்க ஒவ்வொருவர் பத்தியும் ஒரு அறிமுகக் காட்சி வரும். ‘அப்போ யாரு ஆப்பு வைக்கப்போறா... யாரு சோப்பு போடப்போறா’ன்னு வரிகளும் வரும்.”

“ரொம்ப நாள் கழிச்சி டி.ராஜேந்தரை முழுநீளப் படத்துலே பார்க்கப் போறோம்...”
“இந்த கேரக்டருக்கு இவரைத்தவிர வேறு யாருமே செட் ஆகமாட்டாங்க. ப்ளாக் காமெடி ரோல். அதுக்கு இவரால்தான் உயிர் கொடுக்க முடியும். அவரைப் பார்த்து பேசிட்டிருந்தப்போ, நான் கேமரா ஒர்க் பண்ணின படங்களைப் பத்திதான் நிறைய பேசினாரு. ‘சார், இந்த மாதிரி படம் பண்ணப் போறேன், நீங்க நடிக்கணும்’னு ஆரம்பிச்சதுமே, ‘ஆனந்த்.

நான் டி.ராஜேந்தராவே இருக்க விரும்பறேன். டி.ராஜேந்தர் இப்படித்தான் பண்ணுவான், இப்படித்தான் பேசுவான்னு ஜனங்களுக்கு ஒரு இமேஜ் இருக்கு. நீங்க வேற ஏதாவது செய்யச் சொல்லி கேட்டா அதுக்கு நான் சரிப்பட மாட்டேன்’னு மறுத்துட்டாரு. அவரை வற்புறுத்தாம திரும்பிட்டேன்.

ஆனால்-அந்த கேரக்டருக்கு வேற யாரையுமே என்னாலே ஃபிக்ஸ் பண்ண முடியலை. மறுபடியும் மறுபடியும் டி.ஆர் சாரிடம் படையெடுத்தேன். கடைசியா ஒத்துக்கிட்டாரு. எனக்கு என்ன வசனம் வேணும்னு அவரிடம் கொடுப்பேன்.

அவர் அதை அவர் பாணியில் சேர்த்து, குறைச்சு பேசுவாரு. ‘ஆனந்த், என் ஸ்டைலில் பண்ணிக்கறேன். சரியில்லேன்னு தோணினா நீங்க தூக்கிடலாம்’னு ரொம்ப பெருந்தன்மையா சொன்னாரு. அவரோட ஸ்டைல், பாடிலேங்குவேஜ் எதையுமே நான் மாத்தலை.

ஆனா என்னோட ரோலுக்கு அவரோட ஸ்டைல் பக்காவா மிக்ஸ் ஆகி கிடைச்சிருக்கு. அவர் பெரிய டைரக்டர். அதனாலே ஒரு டைரக்டருக்கு என்ன தேவைன்னு அவருக்கே தெரியும். காரிலிருந்து ஜம்ப் பண்ணுற ஒரு சீனை டூப் போடாம அவரே செஞ்சாரு.

அவரோட எனர்ஜியைப் பார்த்து மொத்த யூனிட்டும் பிரமிச்சு நிக்குது. அவர்கிட்டே எப்பவுமே ஒரு ரியலான தன்மை இருக்கும். ரீலிலும் அந்த ரியாலிட்டியை கொண்டுவர்றதுதான் அவரோட ஸ்பெஷல்.”“விஜய் சேதுபதி?”

“எந்த ரோலுக்கும் ஃபிட் ஆகுற ஆக்டர் அவர். கார்ப்பரேட் கம்பெனியிலே நம்மூரு பையன் என்கிற ரோலுக்கு அசலா பொருந்தறாரு. இதுலே அவர் காலேஜுக்கு போகிற சீன்களும் உண்டு. அப்புறம் எம்.ஏ. எல்லாம் முடிச்சிட்டு ஒரு இருபத்தேழு வயசுலே மறுபடியும் காலேஜ் போறாருன்னுலாம் வருது. கார்ப்பரேட் லுக் ஹீரோ யாரையாவது வெச்சி இதையெல்லாம் செஞ்சா சரிவராது.”“விஜய் சேதுபதியோட மறுபடியும் மடோனா?”

“ஆமாம். ‘காதலும் கடந்து போகும்’ பார்த்தப்போ விஜய் சேதுபதி - மடோனா செபாஸ்டின் கெமிஸ்ட்ரி எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. இந்தக் கதைக்கும் அதே ஜோடி பொருத்தமா இருப்பாங்கன்னு தோணிச்சி.

ஒரு டயலாக்கை மடோனாகிட்டே கொடுத்து பேசச் சொன்னோம்னா, அசிஸ்டெண்ட் டைரக்டரை கூப்பிட்டு, ‘இந்த வசனம் எதுக்கு படத்துலே இருக்கு, இதுக்கு முன்னாடி சீன் என்ன, இந்த டயலாக்கோடு சம்பந்தப்பட்ட கேரக்டர்கள் யார் யாரு?’ன்னுலாம் தீவிரமா விசாரிச்சிட்டுதான் நடிப்பாங்க. அதனாலே தான் அவங்ககிட்டே நாம ஓவர் ஆக்டிங்கையே பார்க்க முடியலை. பெர்ஃபெக்ட் ஆர்ட்டிஸ்ட்.”

“ஹாரிஸ் ஜெயராஜும் நீங்களும் வெற்றிகரமான கூட்டணி. ஆனா, ‘கவண்’ படத்துலே...”

“அவருக்கு நிறைய கமிட்மென்ட்ஸ். அதனாலே இதுலே ஹிப்ஹாப் தமிழாவோட இணைஞ்சிருக்கேன். ஹாரிஸிடம் சொன்னதுமே ரொம்ப ஹேப்பியா ஓக்கேன்னு சொல்லிட்டாரு. அவரும் நானும் டைரக்டர் - மியூசிக் டைரக்டர் என்பதைத் தாண்டி நல்ல நண்பர்கள். எப்பவுமே சேர்ந்துதான் இருப்போம்.

இதுலே வில்லங்கமா எதையும் யோசிக்காதீங்க. இந்தப் படத்துலே ‘ஹேப்பி நியூ இயர்’ பாட்டு இப்பவே ஹிட்டு. டி.ஆர் பாடியிருக்காரு. ரீரெக்கார்டிங்கும் பிரமாதமா இருக்கும். பொதுவா என்னோட படங்களில் பாடல்கள் தரமா இருக்கும். அது இந்தப் படத்திலும் தொடரும்.”

- ஜியா