மூன்று பசுக்களோடு வாலிப ரேஸ் நடத்தும் ஜெயிக்கிற குதிரை!



அதிரிபுதிரியாக படமெடுக்கக் கூடிய வழக்கம் கொண்ட இயக்குநரான ஷக்தி சிதம்பரம் ‘ஜெயிக்கிற குதிர’ மூலம் அடுத்த ரவுண்டுக்கு தயாராக இருக்கிறார். நக்கல் நையாண்டிக்கு பஞ்சமில்லாத காட்சிகளை தன் படங்களில் வைக்கும் ஷக்தி சிதம்பரம், நேரிலும் அப்படித்தான் பேசுகிறார்.“உங்க ‘குதிர’ எப்படி இருக்கு?”

“ஃபுல் பிக்கப்புலே இருக்கு. எப்படியாவது லைஃபில் ஜெயிச்சே ஆகணுங்கிற கட்டாயத்துலே இருக்கிற ஓர் இளைஞனோட கதை. ஜெயிக்கிறவனைத்தான் உலகம் மதிக்கும். அவன் நல்லவனா, கெட்டவனா, கருப்பா, சிவப்பா, குட்டையா, நெட்டையா என்பதைப் பத்தியெல்லாம் கவலையில்லை. அதனாலேதான் நம்ம ஹீரோ ஜெயிக்க விரும்பறேன்.

அதுக்காக அவர் எடுக்கிற முயற்சிகள், போராட்டங்களை நகைச்சுவையா சொல்ல முயற்சி பண்ணியிருக்கேன். வழக்கம்போல அரசியல் கலந்த நையாண்டி என்பதால் டயலாக்கெல்லாம் தாறுமாறா இருக்கும். ஒருமாதிரி ‘ரத்தக்கண்ணீர்’ மாதிரி படம்னு கூட வெச்சுக்கங்களேன். இன்றைய சமூக அரசியல் நிகழ்வுகள் அத்தனையையும் நம்ம குதிர கட்டி இழுத்துச் செல்லும் விதமா திரைக்கதை அமைச்சிருக்கோம்.”
“ஜீவன்?”

“அவரை ஸ்க்ரீன்லே பார்த்து ஆடியன்ஸுக்கு ரொம்ப நாள் ஆச்சு. அவரைத்தான் மனசுலே வெச்சு இந்தக் கதையையே எழுதினேன். நம்ம படத்துலே துணை நடிகர் கேரக்டர் அவருக்கு. ஏற்கனவே அவர் நடிச்ச ‘திருட்டு பயலே’, ‘நான் அவனில்லை’ படங்களில் இதேமாதிரி வில்லங்கமான கேரக்டர்களில் பின்னி பெடலெடுத்த அனுபவம் அவருக்கு இருக்கு. கோல்மால், கோக்குமாக்கு, தில்லாலங்கடி வேலை செய்யுற கேரக்டருக்கு ஜீவனைத் தவிர வேற யாரை நடிக்க வைக்க முடியும்? ஃப்ராடு பண்றது, லவ் பண்றது, ஏமாத்துறது, ஜெயிக்கிறதுக்காக எந்த எல்லையையும் தொடுவதுன்னு இந்தக் கேரக்டருக்கான பண்புகளை அப்படியே ஸ்க்ரீனுக்கு கொண்டு வர்றாரு.

ஜெயிக்கிறதுக்காக குறுக்கு வழியில் ஓடுற குதிரையா அவரைத் தவிர வேற யாருமே எனக்கு தோணலை. பொருத்தமா ‘டெய்லர் மேட்’ ரோல் அவருக்கு. ஒரு படத்தோட வெற்றிக்கு காஸ்டிங்தான் ரொம்ப முக்கியம். இந்தப் படத்துலே ஜீவன் அதுக்கு ஜீவன் கொடுத்திருக்காரு. அவரோட இன்னொரு படம் செய்யணும்னு ஆசையா இருக்கு.”“படத்துலே ஏகத்துக்கும் நடிகப் பட்டாளம்?”

“கதைக்குத் தேவைப்பட்டது. கோவை சரளா, பாண்டு, பவர் ஸ்டார், மதன்பாப், ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, யோகி பாபு, இமான் அண்ணாச்சி, ரவி மரியா, சிங்கம்புலி என தமிழ் சினிமாவில் இருக்கிற முப்பதுக்கும் அதிகமான காமெடி நடிகர்களை உள்ளே இறக்கியிருக்கிறோம். வெடிச்சிரிப்புக்கு படம் கேரண்டி.”“ஹீரோயின்?”

“நம்ம படத்துலே எப்பவுமே கிளாமர் கொஞ்சம் தூக்கலாதான் அமையும். ‘யாருடா மகேஷ்?’, ‘கல்கண்டு’ மாதிரி படங்களில் நடிச்ச டிம்பிள் சோப்டேவை ஹீரோயினாக்கி இருக்கோம். காட்டு காட்டுன்னு காட்டியிருக்காங்க. அவங்க தமிழில் மார்க்கெட்டை பிடிக்க இந்தப் படம் உதவும். இன்னொரு ஹீரோயினா ‘யூகன்’, ‘திருட்டு விசிடி’, கககாபோ’  போன்ற படங்களில் நடித்த  சாக்‌ஷி அகர்வால் நடிக்கிறாங்க. இவங்களும் கிளாமர் ஏரியாவில் புகுந்து விளையாடுவாங்கன்னு ரசிகர்களுக்கு தெரியும்.

இவங்க ரெண்டு பேரைத் தவிர மூணாவதா அஸ்வினியும் ஹீரோயின். இந்த மூணு பேருக்குமே ஈக்குவலா கேரக்டர் வெச்சிருக்கேன். ஷூட்டிங் ஸ்பாட்டில் அவங்களுக்குள்ளே சின்னச் சின்ன ஈகோ ஃபைட் நடந்ததென்னவோ உண்மைதான். ஆனா, அதை ஜாலியா அவங்களே எடுத்துக்கிட்டதாலே எனக்கு ஒண்ணும் பிரச்னை ஏற்படலை.”
“எப்பவுமே ஜீவனுக்கு ஹீரோயின் மேட்டரில் மச்சம்தான்...”

“கமர்ஷியலுக்காக மூணு ஹீரோயின்னு நெனைச்சுக்காதீங்க. கதைப்படி ரெண்டு ஃபேமிலி. ஜீவனை பணக்காரர்னு நெனைச்சு ரெண்டு ஃபேமிலியுமே இவரை மாப்பிள்ளை ஆக்கிக்கிறதுக்கு முயற்சிப்பாங்க. இதைத் தவிர்த்து ஜீவனுக்குன்னு தனியா ஒரு காதலி. மூணு பெண்களுக்கிடையே கட்டழகான நம்ம குதிரையை அடையுறதுலே கடுமையான வாலிபப் போட்டி. ‘நான் அவனில்லை’ படத்தையும் தாண்டி இதுலே இளமை தெறிக்கும்.”
“மியூசிக்?”

“பாடலாசிரியர் பிறைசூடனின் மகன் கவின்சிவாதான் செய்யுறாரு. பிறைசூடனும், நானும் இணைஞ்சு பாடல்கள் எழுதியிருக்கோம். அம்மா சென்டிமென்ட் பாட்டு ஒண்ணு அருமையா வந்திருக்கு. ‘வியாபாரி’ படத்துல ‘ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம் அம்மாவை வாங்க முடியுமா?’ன்னு பாட்டு வெச்சேன். அது செம ஹிட்டு. அதே மாதிரி ‘வீட்டுக்கு ஒரு சாமி உண்டு அது அம்மா... அம்மாடா... நீ கோவில் குளம் போவதெல்லாம் சும்மா... சும்மாடா...’ன்னு இதிலே வர்ற அந்தப் பாட்டு இந்த வருடத்தின் மிகப் பெரிய ஹிட் பாடலா இருக்கும். ராம்கோபால் வர்மா இயக்கிய ‘ஐஸ்கிரீம்’ போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ஆஞ்சி கேமராவை ஹேண்டில் பண்றாரு.”

“சாக்‌ஷிக்கும் ஜீவனுக்கும் ஜலக்கிரீடை நடக்குற மாதிரி காட்சிகள் இருக்காமே?”

“சஸ்பென்ஸா இதை வெச்சிருந்தேன். ‘வண்ணத்திரை’ வாசகர்களுக்கு போனஸ் கொடுக்குறது மாதிரி நீங்களே கேட்டுட்டீங்க. ஸ்விம் ஸூட்டில் இருக்கிற சாக்‌ஷியைப் பார்க்குறதுக்கு ஜீவன் வருவார். ஜீவனோட செல்போனை தன்னோட ஸ்விம்ஸூட்டுக்குள்ளே மறைச்சிட்டு டைவ் அடிப்பாங்க சாக்‌ஷி. அந்த போனை ஜீவா எடுக்கணும்.

அவர் எப்படி எடுக்குறார் என்பதை வாலிப வயோதிக அன்பர்களின் இளமை நரம்புகளை சுண்டி இழுக்கிற விதமா ஜில்லுன்னு படமாக்கி இருக்கோம். அதுக்காக ரொம்ப ‘ஏ’டாகூடமா உங்க மன்மத கற்பனைகளைத் தறிகெட்டு ஓட வெச்சுடாதீங்க. ஃபேமிலி ஆடியன்ஸே ரசிக்கிற வகையில் இலைமறை காய்மறையாய் இங்கிலீஷ் படங்களில் வர்றது மாதிரி ஸ்டைலிஷா எடுத்திருக்கோம். அதுலே வல்கர் இருக்காது. நாகரிகமான கிளாமர்தான் இருக்கும்.”
“படத்தோட மெசேஜ் என்ன?”

“ஜெயித்தவன் தப்பு செஞ்சாலும் அதை மன்னிக்க இந்த உலகம் தயாரா இருக்கு. தோத்தவன் நல்லதே பண்ணினாலும் அவனை யாரும் கண்டுக்கறதில்லை. பரீட்சை எழுதறப்போ விடை தெரியாம தலையைச் சொறியறவன் தோத்துடுவான். பிட்டு அடிக்கிறவன்தான் உலகத்தை ஜெயிப்பான். இதை நியாயமா, அறமான்னுலாம் கேட்காதீங்க. ஓட்டுக்கு துட்டு கொடுக்குற கட்சி ஜெயிக்கிற காலம் இது. யதார்த்தம் இதுதான். சரியா தவறான்னெல்லாம் என்னை கேட்காதீங்க.”

“காமெடியான கமர்ஷியல்தான் உங்க ரூட்டா?”
“பிளாக் & ஒயிட் காலத்துலே இருந்தே காமெடி படங்களுக்கு ரசிகர்களிடம் நல்ல மவுசு இருக்கு. இப்போ தமிழ் சினிமாவில் பேய் சீஸன் தான் டிரெண்டுன்னாலும், அதையும் காமெடியா கொடுத்தாதான் ஒர்க்கவுட் ஆகுது.  நான் இயக்கிய ‘இங்கிலீஷ்காரன்’, ‘சார்லி சாப்ளின்’, ‘மகாநடிகன்’, ‘என்னம்மா கண்ணு’, ‘கோவை பிரதர்ஸ்’ மாதிரி படங்களில் எல்லாம் காமெடி நல்லா எடுபட்டது.

 இதிலும் அந்த ஃபார்முலா தொடரும். சுமார் ரெண்டு வருஷமா இந்த ஸ்க்ரிப்டை வெச்சு தேய்தேய்ன்னு தேய்ச்சு பளபளப்பாக்கி இருக்கேன். நான் பண்ணின படங்களிலேயே மாஸ்டர்பீஸ்னு சொல்லுகிற அளவுக்கு ‘ஜெயிக்கிற குதிர’ அமையும்.”

- சுரேஷ்ராஜா