தாய்மையை போற்றும் கனவு!



தமிழில் இப்போது பல படங்களுக்கு வில்லன் சென்ஸார்தான். சகட்டுமேனிக்கு கட் கொடுக்கிறார்கள். எதிர்த்துப் பேசினால் ‘ஏ’ கொடுக்கிறார்கள். தன்னுைடய முதல் படத்துக்கு ‘க்ளீன் யூ’ வாங்கிய சந்தோஷத்தில் இருக்கிறார் ‘ஒரு கனவு போல’ படத்தின் இயக்குநர் வி.ஜி.விஜய்சங்கர். பிரமோஷன் வேலைகளில் ஜரூராக களமிறங்கி இருப்பவரை ‘வண்ணத்திரை’க்காக ஓரம் கட்டினோம்.

“தலைப்பே கவிதையா இருக்கு, கதை?”

“பொதுவா ஒரு ரசிகனை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒண்ணு, படம் பார்க்கும் பார்வையாளன். இன்னொண்ணு பங்கேற்பாளன். அந்த வகையில் இந்தப் படத்தை பார்க்கிறவர்கள் பார்வையாளனாக மட்டுமில்லாமல் பங்கேற்பாளராகவும் உள்ளே வந்துவிடுவார்கள். இது எமோஷனல் டிராமா. வாழ்வியல் சார்ந்த உளவியல் படம்னோ அல்லது உளவியல் சார்ந்த வாழ்வியல் படம்னோ சொல்லலாம்.

உள்ளத்தின் ஆழ் மனதில் வெளிப்படுத்தமுடியாத சில விஷயங்கள் இருக்கும். சில சமயம் அந்த விஷயங்கள் வெளிவந்துவிடுமோன்னு பயம் இருக்கும். அதைத் தவிர்த்து நல்ல விஷயங்களை மேலே கொண்டு வர வேண்டும் என்பதை சொல்லியுள்ளேன். மிருகம், மனிதன், தெய்வம் என்று மனிதனை மூன்று வகையாகப் பிரிக்கலாம் என்று சொல்லியிருக்கிறார் அறிஞர் பேட்ரிக் நீட்சே. மிருக நிலையில் இருந்து பார்த்தால் மனிதன் உயர்ந்த நிலையில் இருப்பான்.

மனித நிலையில் இருந்து பார்த்தால் துர்பாக்கிய நிலை என்று சொல்வார்கள். ஏன்னா, மனிதன் என்பவன் கடக்க வேண்டிய பாலம் என்பார்கள். ஒரு மனிதன் கடைசி வரை மனிதனாக இல்லாமல் தெய்வ நிலைக்கு போக வேன்டும்.அந்தவகையில் மனிதன் தனக்குள் தெய்வீக பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். அன்பு, உண்மை, நட்பு போன்ற உயர்ந்த குணங்கள்தான் தெய்வீக பண்புகளின் குறியீடு. அந்த பண்புகள் சார்ந்த கதைதான் இது.”
 “உங்க ஹீரோ ராமகிருஷ்ணன் மீட்டருக்கு மேல நடிப்பாரே?”

“இந்தப் படத்தில் அப்படி தெரியமாட்டார். நடராஜ் என்ற லாரி டிரைவராக ராமகிருஷ்ணன் வர்றார். இந்தப் படத்துக்குப் பிறகு அவரைப் பற்றிய மதிப்பீடு வேற லெவலில் இருக்கும். அதே மாதிரி பெர்ஃபாமன்ஸிலும் பிச்சி உதறியிருப்பார். இன்னொரு ஹீரோ செளந்தர்ராஜா பின்னணி பாடகரா வர்றார். ஜான் ஜோசப் என்ற கேரக்டர்ல வரும் செளந்தர்ராஜாவுக்கு இந்தப் படம் பெரிய திருப்புமுனையாக இருக்கும். முப்பது நாற்பது படம் பண்ணிய சீனியர் நடிக்க வேண்டிய ரோல் அது. இரண்டு ஹீரோவுக்கும் எந்த இடத்திலும் ஏற்றத் தாழ்வு இல்லாதளவுக்கு முக்கியத்துவம் இருக்கும்.”
“ஹீரோயின்?”

“புதுமுகம் அமலா. காலேஜ் ஸ்டூடன்ட். மலையாளப் படங்களில் உதவி இயக்குநராகவும் பணியாற்றுகிறார். சுமதி என்ற கேரக்டரில் வாழ்ந்து காட்டியிருக்கிறார் என்று சொல்லலாம். அவருடைய கேரக்டர் ஃப்ரெண்ட்ஷிப்புக்கு மகுடம் சூட்டுவது மாதிரி இருக்கும்.”
“வேற யாரெல்லாம் இருக்காங்க?”

“ஜாலி படத்துக்கு இசையமைத்த கவி பெரியதம்பி இசைக்குழு நடத்துபவராக வர்றார். அருள்தாஸ் வில்லன் மாதிரியும் இல்லாமல் நல்லவன் மாதிரியும் இல்லாமல் ஒரு வித்தியாசமான கேரக்டர் பன்ணியிருக்கிறார். லாரி ஓனராக சார்லி வர்றார். இயக்குநர் பேரரசு இயக்குநராகவே பண்ணியிருக்கிறார். சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது வாங்கியிருக்கும் பிரபல மலையாள இயக்குநர் மதுபால் முக்கியமான கேரக்டர் பண்ணியிருக்கிறார்.”
“இசை?”

“இதுக்கு முன்னாடி ‘கோழி கூவுது’ என்ற படத்துக்கு இசையமைத்த ராம் இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தை கமிட் பண்ணும் போது அவருக்கு இது இரண்டாவது படம். இப்போ பத்து படங்களுக்கு இசையமைத்து வருகிறார். அனைத்து பாடல்களும் கதை சூழலைக் கெடுக்காத மாதிரியும், கதையை நகர்த்துமளவுக்கும் இருக்கும். சுருக்கமாக சொல்வதாக இருந்தால் இளையராஜா பாடல்கள் போல் மனசுல நிற்கும்.”
“கேமரா?”

“ஒளிப்பதிவாளர் அழகப்பன் மலையாளத்தில் அறுபது படங்கள் பண்ணியவர். இந்தக் கதை மீது இருந்த நம்பிக்கையில் இரண்டு படங்களை தவிர்த்துவிட்டார். பிரியதர்ஷன், சத்யன் அந்திக்காடு போன்ற பெரிய இயக்குநர்களின் படங்களில் கேமராமேனாக வேலை பார்த்தவர். ஆறு முறை கேரள அரசின் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது வாங்கியவர். உலகளவில் நாற்பது விருதுகள் வாங்கியுள்ளார்.”
“படத்துல என்ன மெசேஜ் இருக்கு?”

“நட்புடன் பெண்ணியத்தைப் போற்றும் விதத்தில் திரைக்கதை அமைந்திருப்பது இந்தப் படத்தோட ஸ்பெஷல். பெண்ணியம் என்றதும் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமையை சித்தரித்திருப்பேன் என்று நினைக்க வேண்டாம். பெண்களின் மெல்லிய மன உணர்வுகளை இதில் காட்சிப்படுத்தியிருக்கிறேன்.

பெண்கள் எந்த விதத்தில் மதிக்கப்பட வேண்டும் என்பதை சொல்லியிருக்கிறேன். கடந்த ஒரு வருடத்தில் ஸ்வாதி உள்பட பத்துக்கும் மேற்பட்டவர்களை இழந்து இருக்கிறோம். எம்.ஜி.ஆர் காலத்தில் தாய்மையைப் போற்றி நிறைய படங்கள் வந்தது. அதன் பிறகு அதுபோன்ற விஷயத்தை சினிமா பதிவு பண்ணவில்லை. இந்தப் படத்தில் அதை நான் ஆரம்பித்து வைத்துள்ளேன்.”

“உங்க பின்னணியைப் பத்தி சொல்லவே இல்லையே?”
“சேரன் இயக்கிய ‘பாரதி கண்ணம்மா’, ‘ஆட்டோகிராப்’ உட்பட ஏராளமான படங்களில் முதன்மை இணை இயக்குநராக வேலை பார்த்திருக்கிறேன். சிம்பு தேவனுடன் ‘இரண்டாம் புலிகேசி’ உட்பட சில படங்களில் வேலை செய்திருக்கிறேன். சினிமா குரு என்றால் மறைந்த இயக்குநர் சோழராஜன். நல்ல படம், நல்ல சம்பளம் கிடைத்ததால் அப்படியே இணை இயக்குநராகவே செட்டிலாகிவிட்டேன்.

தயாரிப்பாளர் செல்வகுமார் கொடுத்த இன்ஸ்பிரேஷன்தான் இந்தப் படத்தை எடுக்க காரணமாக இருந்தது. இரண்டு பேருக்கும் சினிமாவில் அனுபவம் இருந்ததால் நட்பு ரீதியாக இணைந்திருக்கிறோம். ரொம்ப நாளைக்குப் பிறகு லேடீஸ் ஆடியன்ஸ் இந்தப் படத்துக்கு வருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.”

- சுரேஷ்ராஜா