கெழடு தட்டிப்போன ஹாலிவுட் சூப்பர் ஹீரோ!



ஒன்று, இரண்டு, மூன்று என்று ஒரு படத்தின் பல பாகங்கள் வருவது ஹாலிவுட்டில் சகஜம். ‘எக்ஸ்மென்: தி வால்வோரின்’ தொடர்படங்களுக்கு ஏகத்துக்கும் லைக்ஸ் விழுகிறது ஹாலிவுட் ரசிகர்களிடம். இந்த சீரிஸில் லேட்டஸ்ட் வரவு, ‘லோகன்’. இது எக்ஸ்மென் வால்வோரின் சீரிஸின் பத்தாம் பாகம். எக்ஸ்மென் என்போர் அபூர்வ சக்திகள் நிறைந்தவர்கள்.

இருபத்தைந்து வருடங்களாக புதிய எக்ஸ்மென் வருகையின்றி, கெழடு தட்டிப்போன ஜேம்ஸ் லோகன் / வால்வோரினுக்கு தனது உலோகத்தாலேயே உடலில் விஷம் ஏறுவதன் விளைவால், அவருடைய அபூர்வ சக்தியான காயம் பட்டால் உடல் தோல் உடனே மூடி விடும் சக்தியை இழந்து தவித்துக்கொண்டிருக்கிறார். மேலும் புரபஸர் எக்ஸ், காலிபன் மூவரும் ஊருக்கு வெளியில் லோகனின் ஓட்டுநர் வேலையில் கிடைக்கும் வருமானத்தில் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இதற்கிடையில் ஒரு பெண் லோகனை சந்தித்து உதவி கேட்கிறார். புதிய எக்ஸ்மென்கள் உள்ளனர். சட்டவிரோதமாக குழந்தைகள் எக்ஸ்மென்களாக மாற்றப்பட்டு வருகிறார்கள். அதில் ஒரு சிறுமி தன்னிடம் இருப்பதாகவும் கூறுகிறார்.

மேலும் அந்த சிறுமிக்கு உங்கள் பாதுகாப்பு வேண்டும் எனக் கூறி பணம் கொடுத்துவிட்டு இறந்துவிடுகிறார். இந்த குழந்தை யார், ஏன் லோகனிடம் வருகிறாள், இவளுக்கு என்ன சக்தி, மற்ற குழந்தைகள் எங்கே, அனைவரையும் லோகன் காப்பாற்றினாரா? - இப்படியான பல கேள்விகளுக்கு பரபர ஆக்ஷனில் ஜெனிடிக் பதில் வைக்கிறது கிளைமாக்ஸ்.

ஹ்யூக் ஜேக்மனுக்கு வயதாகிவிட்டது. கேன்சர் வேறு. இதையெல்லாம் தாண்டி மனிதர் நம் பிைழப்பே இங்கே ஊசலாடிக்கொண்டிருக்கிறது; இதில் இவள் வேற என்பது போல் சிறுமி லாராவிடம் (X-23) காட்டும் கண்டிப்பு, வெறுப்பு என அப்படி ஒரு நடிப்பு. இதில் சர்ப்ரைஸாக மற்றுமொரு யூத் ஹ்யூக் ஜேக்மன் வந்து இன்ப அதிர்ச்சி கொடுக்க அவர் ஹீரோ இல்லை, வில்லன் என அதிர்ச்சியும் தருகிறார்கள்.

புரபஸர் எக்ஸ், காலிபன் என ஆளுக்கொரு வியாதியுடன் வாழ்ந்துகொண்டிருக்க பறந்து அடித்து தலையைக் கொய்து உருளவிட்டு படத்தின் அதிரடி அத்தியாயத்தை ஆரம்பித்து வைக்கிறார் லாராவாக வரும் டெஃப்னே கீன். கையில் மட்டுமல்ல காலிலும் எனக்கு கத்தி உண்டு பாணியில் வில்லன் கூட்டத்தை கிழித்துப் போட நமக்கு சீட்டில் இதயம் வேகமாக துடிக்கிறது.

நிறைய நீளமான காட்சிகள், பயணங்கள் இதைத் தவிர்த்திருக்கலாம். ஆனால் எக்ஸ்மென் சீரிஸ்களில் முதல் முறையாக தலைமுறை பிரச்னையை பேசியிருக்கிறது லோகன். மேலும் சூப்பர் ஹீரோக்கள் படங்களிலேயே இதுவரை தலைமுறைகள் கடந்த காட்சிகள் கிடையாது என்பதால் இயக்குநர் ஜேம்ஸ் மேன்கோல்டுக்கு இந்தப் படம் முக்கியமான ஒன்று.  

ஹீரோ ஹ்யூக் என்றாலும் படத்தின் பல காட்சிகளில் ஆக்ஷன் வெறி காட்டி அசர வைப்பது டெஃப்னே கீன்தான். எமோஷனல் காட்சிகளிலும் சோடையில்லை. மொத்தத்தில் X-மென் சீரிஸ்களில் இது மிகச் சிறந்த படமில்லை என்றாலும், ஹாலிவுட் ஆக்ஷன் விரும்பிகளால் தவிர்க்க முடியாத படம். முக்கியமாக ‘தி வால்வோரின்’ புகழ் ஹ்யூக் ஜேக்மன் ரசிகர்களுக்கு இந்தப் படம் இன்னொரு மைல்கல்.

- ஷாலினி நியூட்டன்