“நம் மண்ணை கொண்டாடுங்கள்” பாரதிராஜா வேண்டுகோள்!



வெகுஜன மக்களுக்கு பயன்படக்கூடிய கண்டுபிடிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்கிற கருத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் படம் ‘கனவு வாரியம்’.

ஹாலிவுட்டில் பிரபலமான வார்னர் பிரதர்ஸ் வெளியிடும் முதல் தமிழ்ப்படம் இதுதான். சமீபத்தில் இப்படத்தின் ஆடியோ வெளியீடு நடந்தது. அதில் இயக்குநர் பாரதிராஜா ஆவேசமாகப் பேசினார். அவர் பேசியதாவது :

“தமிழ்த் திரையுலகில் கன்னாபின்னாவென்று வெளியிடப்படும் மாஃபியா படங்களுக்கு மத்தியில் மண்வாசனையோடு ‘கனவு வாரியம்’ உருவாகியிருக்கிறது. தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரத்தை பதிவு செய்யும் வகையில் இப்படம் எடுக்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது. நான் படம் இயக்கவந்த காலத்தில் ஸ்டுடியோ என்கிற குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டும் சினிமா போக்கினைக் கண்டு கோபப்பட்டேன்.

அதன் வெளிப்பாடாகத்தான் ‘16 வயதினிலே’ படத்துக்காக கேமராவைத் தூக்கிக்கொண்டு காடு, கழனியென்று அலைந்தேன். ‘கிழக்கே போகும் ரயில்’, ‘புதிய வார்ப்புகள்’ என்று அடுத்தடுத்து தமிழ் கிராமங்களை அசலாக பதிவு செய்தேன்.

நான் காட்டிய கிராமங்கள் இன்று நிஜத்திலேயே இல்லை என்பது வருத்தத்துக்குரியது. இயக்குநர்களை நான் வேண்டிக் கொள்வதெல்லாம் இதுதான். தமிழில் படம் எடுங்கள். அந்தப் படங்களில் தமிழ்க் கலாச்சாரத்தை பிரதிபலியுங்கள். நம் மண்ணை நாமே கொண்டாடவில்லை என்றால் வேறு யார்தான் கொண்டாடுவார்கள்?”

- தேவராஜ்