காஸி



கடல் யுத்தம்!

கடற்படையை கதை மாந்தர்களாக்கி, முழுக்க முழுக்க நீர்மூழ்கிக்கப்பலில் எடுக்கப்பட்ட முதல் இந்தியத் திரைப்படம் ‘காஸி’. அரபி மொழியில் ‘காஸி’ என்றால், ‘மதத்துக்காக போராடும் போராளி’ என்று அர்த்தம். 1971ல் இந்தியா - பாகிஸ்தான் போரின் போது, விசாகப்பட்டினம் கடலில் பாகிஸ்தான் நீர்மூழ்கிக்கப்பல் ‘பி.என்.எஸ். காஸி’, இந்திய நீர்மூழ்கிக்கப்பல் ‘ஐ.என்.எஸ். ராஜ்புத்’தால் மூழ்கடிக்கப்பட்டது. அந்த உந்துதலில் உருவானதே இந்தப்படம்.

தியேட்டர் ஆர்ட்டிஸ்டுகளை வைத்து, ஒருமணி நேர படமாக எடுத்து, யூ டியூபில் உலவவிடுவதற்காகவே கடலில் இறங்கினார் அறிமுக இயக்குநர் சங்கல்ப் ரெட்டி. பல முயற்சிகளுக்குப்பின் ராணாவும் அதுல்  குல்கர்னியும் இணைந்தவுடன் பெரிய பட்ஜெட்டில் தயாரிக்க தயாரிப்பாளர்கள் கிடைத்திருக்கிறார்கள். ஒரே நேரத்தில் இந்தி மற்றும் தெலுங்கில், அறுபது நாட்களில் உருவான ‘காஸி’ தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு திரைக்கு வந்திருக்கிறது.

இந்தியா - பாகிஸ்தான் என இரு நாடுகளைச் சார்ந்த தொழில்நுட்ப அறிவு மிகுந்த கமாண்டோக்கள் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தும் காட்சிகள் பரபரப்பும், விறுவிறுப்புமாக படம் முழுக்க பரவிக் கிடக்கின்றன. அத்தனை பேரும் நடித்தார்களா? நேவியில் ட்ரெயினிங் எடுத்துவந்து சாகஸம் புரிந்தார்களா என்ற சந்தேகம் வருகிறது.

ராணாவின் உயரமும் கம்பீரமும் உடல்மொழியும் அந்த கதாபாத்திரத்துக்கு பெருமை சேர்க்கிறது. வீரமும் விவேகமும் கலந்த வெகு நேர்த்தியான  கேரக்டர். கேப்டன் கே.கே.மேனனுடன் வாக்குவாதம் செய்வதிலும், தன்னைக் காப்பாற்றும் முயற்சியில்தான் அவர் உயிரிழந்தார் என அறிந்து கலங்கும்போதும் நடிப்பில் தனது கொடியை பறக்கவிடுகிறார்.

கேப்டனாக வரும் கே.கே.மேனன் முகபாவங்களால் முத்திரை படைக்கிறார். இயல்பான நடிப்பால் இதயத்தில் இடம்பிடிக்கிறார் அதுல்  குல்கர்னி.
குணால் கெளசிக், சத்யதேவ் கஞ்சரனா, நாசர், ஓம் புரி  என அத்தனை கதாபாத்திரங்களும் கச்சிதம். டாப்ஸி பன்னுவுக்கு அகதி கதாபாத்திரம். சொல்லும்படி ஒன்றுமில்லை.

பரபரப்பான கதைக்கேற்றபடி நேர்த்தியாக இசையமைத்துள்ளார் கே.கர் பிரசாத்தின் படத்தொகுப்பு வேகம்...வேகம்.ஒட்டுமொத்த கடலையும், நீர்மூழ்கிக்கப்பல்களையும் சாமர்த்தியமாக கேமராவுக்குள் சுருட்டிவந்திருக்கிறார்  ராசாமதி.தான் எழுதிய ‘ப்ளூ  ஃபிஷ்’ புத்தகத்திலிருந்து சில பகுதிகளைக் காட்சிப்படுத்தி, தேசப்பற்றை கட்டிக்காக்கும் படத்தை இயக்கியிருக்கும் சங்கல்ப் ரெட்டிக்கு ராயல் சல்யூட்!

- நெல்லை பாரதி