சூப்பர் ஸ்டாருக்கு 1000



திரைசரம்!

1934ல் கே.சுப்பிரமணியம் இயக்கிய ‘பவளக்கொடி’ படத்தில்தான் முதன்முறையாக ஹீரோவாக அறிமுகமானார் ‘ஏழிசை மன்னர்’ தியாகராஜ பாகவதர். தமிழ் சினிமாவின் முதல் சூப்பர்ஸ்டாரான இவர், அந்தப் படத்துக்காக அவர் வாங்கிய சம்பளம் ஆயிரம் ரூபாய் மட்டுமே. அதுவே அப்போது பெரிய தொகை என்று பேசப்பட்டது. இயக்குநர் வாங்கிய சம்பளம் எழுநூற்றி ஐம்பது ரூபாய்.

1980ல் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் ‘ஒருதலை ராகம்’. தமிழ் சினிமாவின் டிரெண்ட் செட்டர் மூவி என்று சொல்லப்படும் இந்தப் படத்துக்கு முதலில் டி.ராஜேந்தர் வைத்திருந்த தலைப்பு ‘தடை போடும் மேகங்கள்’. இலக்கியத் தரமாக இருந்தாலும், ஆன்ட்டி சென்டிமென்டாக இருக்கிறது என்று தயாரிப்பாளர் இ.எம்.இப்ராஹிம் தயக்கம் காட்டியதால், ‘ஒருதலை ராகம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டு வெளியாகி மகத்தான வெற்றி கண்டது.