மலர் டீச்சர் தமிழுக்கு வருகிறார்!கவுதம் வாசுதேவ் மேனன் படத்தில் விக்ரம் நடிக்கிறார் என்பது ஊரறிந்த செய்தி தான். இதையடுத்து ‘வாலு’ படத்தின் இயக்குநர் விஜய்சந்தர் இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். பக்கா சென்னை கேங்ஸ்டர் சப்ஜெக்ட்டாம்.

இந்தப் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக, மலையாள ‘பிரேமம்’ படத்தில் அறிமுகமாகி கேரளாவையே கலக்கிக் கொண்டிருக்கும் தமிழ்ப் பொண்ணு சாய்பல்லவி நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால், சாய்பல்லவி இதை உறுதி செய்யாத நிலையில், மற்றொரு கேரளத்துக் கிளியான மஞ்சிமா மோகன் (‘அச்சம் என்பது மடமையடா’ ஹீரோயின்) நடிக்கப் போகிறார் என்றார்கள்.

என்ன ஆயிற்றோ, ஏது ஆயிற்றோ தெரியவில்லை.இப்போது சாய்பல்லவிதான் விக்ரமோடு ஜோடி சேர்கிறார் என்று உறுதியாகவே சொல்கிறார்கள். தமிழில் சாய்பல்லவி நடிக்கப் போவது இதுதான் முதன்முறை. ‘பிரேமம்’ படத்தில் மலர் டீச்சராக நடித்த சாய்பல்லவி, ரஷ்யாவில் மருத்துவம் படித்தவர். டிவி நடன நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமாகி சினிமா வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருக்கும் இப்படத்துக்கு தமன் இசையமைக்க, சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.சீக்கிரமாக இந்தப் படத்தை முடித்துவிட்டு ஹரி இயக்கும் ‘சாமி-2’வுக்கு ரெடியாக ஆர்வமாக இருக்கிறார் விக்ரம்.

- தேவா