கண்டிப்பா லவ் மேரே ஜ்தான்!



‘பாப்பா’வின் ஃப்யூச்சர் ப்ளான்

ரெஜினா செசண்ட்ரா, சினிமாவில் நடிக்க வந்து பதினோரு ஆண்டுகள் ஆகிவிட்டன. 2005ல் ‘கண்ட நாள் முதல்’ படத்தில் லைலாவின் தங்கையாக அறிமுகமானார். ‘அழகிய அசுரா’, ‘பஞ்சாமிர்தம்’, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘நிர்ணயம்’, ‘ராஜதந்திரம்’ என்று தமிழில் ரொம்ப செலக்டடாகத்தான் நடித்தார்.

ஆந்திரா பக்கம் அலை அடித்ததால் அந்தப் பக்கமாக ஒதுங்கியிருந்த அவர், மீண்டும் தமிழில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார். சென்னை கிண்டியில் ‘சரவணன் இருக்க பயமேன்’ படப்பிடிப்பில் இருந்தவர், இரவு பத்து மணிக்கு டின்னருக்கு அழைத்து, அப்படியே நம்மிடம் பேசிக்கொண்டிருந்தார்.

“தமிழில் அடிக்கடி ‘கேப்’ விடுறீங்க. ஆடியன்ஸ் மறந்துட மாட்டாங்களா?”

“அழகும், திறமையும் இருக்குறவங்க இப்படி பயப்பட வேண்டியதில்லை. நான் பிஸியா இருக்கணும்னு எப்பவும் நினைச்சதில்லை. பேசப்படுற வேடங்கள் செய்தால் போதும்னு நெனைக்கிறேன்.

 ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ வந்து எவ்வளவு நாளாச்சி? இப்பவும் தமிழ்நாட்டில் ஏதோ ஒரு ஊரில் டிவியில் என்னோட முகத்தைப் பார்த்தாலே, அந்தப் படத்துலே நான் நடிச்ச கேரக்டரோட பேரை நினைவில் வெச்சி, ‘பாப்பா’ன்னு ஜனங்க அடையாளம் கண்டுக்கிறாங்க. இந்தப் பெயரை கடைசி வரை காப்பாத்திக்கணும். என்னை யாரும் சுலபமா மறக்கறமாதிரியான கேரக்டர்களை நான் செய்வதில்லை.”

“திடீர்னு நெறைய படம் தமிழில் கமிட் ஆகியிருக்கீங்க?”

“நிறைய நல்ல கேரக்டர்கள் வந்திருக்குன்னு அர்த்தம். செல்வராகவன் டைரக்‌ஷனில் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ முடிச்சிட்டேன். இதுலே எஸ்.ஜே.சூர்யா பிரமாதப்படுத்தி இருக்காரு. எழில் டைரக்‌ஷனில் உதயநிதி சாருக்கு ஜோடியா ‘சரவணன் இருக்க பயமேன்’, வழக்கமான ஜாலிக்கூத்தா இருக்கும். அப்புறம் நான் ஏற்கனவே முடிச்சிட்ட ‘மாநகரம்’ தமிழ், தெலுங்கு இரண்டிலும் ரிலீஸ் ஆகப்போவுது. இது தவிர்த்து ‘பாகுபலி’ ராணாவுக்கு ஜோடியா நடிக்கிற ‘மடை திறந்து’ படமும் ரெண்டு லேங்குவேஜிலும் வருது. அதர்வாவோட ‘ஜெமினி கணேசனும், சுருளி ராஜனும்’னு தமிழில் இப்போதைக்கு எங்கிட்டே அஞ்சு படம் இருக்கு. இது தவிர்த்து தெலுங்கிலும் சில பண்ணிக்கிட்டிருக்கேன்.”

“தெலுங்குலே காட்டு காட்டுன்னு கவர்ச்சி காட்டறீங்க... தமிழ் ரசிகர்களுக்கு மட்டும் ஏன் ஓரவஞ்சனை?”

“கேரக்டருக்கு ஏத்த கிளாமர்தான் செய்யறேன். ரொம்ப எக்ஸ்போஸ் பண்ணிக்கிறதில்லை. ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ முடிஞ்சப்புறம் எல்லாரும் தாவணி போடுற அதே வில்லேஜ் பொண்ணு கேரக்டர்ஸோடு வந்தாங்க. ஆனா, அப்போ தெலுங்குலே விதவிதமான கேரக்டர்கள் வந்தது. நான் நடிச்ச படங்கள் தொடர்ந்து அங்கே ஹிட்டானதாலே, அங்கேயே கொஞ்ச காலம் பிஸியா இருந்துட்டேன்.

ரெண்டு மொழிப்படங்களுக்கும் சில வித்தியாசங்கள் இருக்கு. தமிழில் ஹோம்லியா பண்ணா ரொம்ப ரசிப்பாங்க. தெலுங்குலே ஹோம்லி கேரக்டரா இருந்தாலும், அதிலும் லைட்டா கிளாமர் தெரியணும். இங்கே கேரக்டரோட முக்கியத்துவம் ஒரு நடிகையை பிரபலமாக்கும். அங்கே படத்தோட வெற்றிதான் நடிகையின் எதிர்காலத்தை தீர்மானிக்குது. மத்தபடி ஒர்க்கிங் ஸ்டைல் எல்லாம் ரெண்டு லேங்குவேஜிலும் ஒரே மாதிரிதான். தெலுங்கோ, தமிழோ என்னைப் பொறுத்தவரை மாடர்ன் டிரெஸ் ஓக்கே. வல்கரா தெரியக்கூடாது என்பதில்தான் கண்டிப்பா இருக்கேன்.”

“பாலிவுட்டிலும் கால் பதிக்கறீங்க போலிருக்கே?”

“அமிதாப், அனில்கபூர், அர்ஜுன் ராம்பால்னு பெரிய ஹீரோக்கள் சேர்ந்து நடிக்கிற ஒரு படத்துலே இருக்கேன். இதுதான் எனக்கு இந்தியில் அறிமுகம். ஜனவரியில் ஷூட்டிங் ஸ்டார்ட் ஆகுது. அங்கே படப்பிடிப்பெல்லாம் கொஞ்சம் ஸ்லோவா நடக்கும். சவுத் இண்டியாவில் எல்லாமே ரொம்ப ஸ்பீட். நாம எங்கே நடிக்கிறமோ அது அதுக்கு ஏத்தமாதிரி அட்ஜஸ்ட் ஆகிக்கணும். பாலிவுட்டில் படம் பண்ணாலும் என்னோட கண்ணு தமிழிலும், தெலுங்கிலும்தான்.”

“எப்பவும் கிசுகிசு ராணியா வலம் வர்றீங்க...?”

“பிஸியா இருக்கிறவங்களைப் பத்திதான் கிசுகிசு பேசுவாங்க. ரீசன்டா ஃபிரெண்டோட எடுத்துக்கிட்ட ஒரு போட்டோவை நெட்டுலே போட்டேன். அதுக்கு கண்ணு, காது, வாய், மூக்கெல்லாம் வெச்சி என்னோட ஒரு லவ்ஸ்டோரியை எல்லாரும் கிரியேட் பண்ணிட்டாங்க. கடுப்பாகிப் போய் அந்த போட்டோவை தூக்கிட்டேன். சமயத்தில் இதுமாதிரிதான் கிசுகிசு வெறுப்பேத்தும். ஆனா, அதையே நினைச்சி கவலைப்பட்டுக்கிட்டு இருந்தா வேலை பார்க்க முடியாது.”

“கல்யாணம் எப்போ பண்ணிக்கப் போறீங்க?”

“ஏன் சார், எனக்கென்ன வயசு ஆவுது? நிச்சயமா மேரேஜ் உண்டு. அதுவும் லவ் மேரேஜ். பேரன்ட்ஸ் அரேஞ்ச் செய்கிற மேரேஜ் செட்டாகலைன்னா நம்மோட கோபம் பேரன்ட்ஸ் மீதுதான் திரும்பும். அதைத் தவிர்க்கத்தான் லவ் மேரேஜ்னு ஐடியா பண்ணியிருக்கேன்.”

“மாப்பிள்ளை சினிஃபீல்டா?”

“ஏதாவது கிசுகிசு தேத்தலாம்னு ட்ரை பண்ணுறீங்க. நான் யாரையாவது லவ் பண்ண ஆரம்பிச்சதுமே சொல்லி அனுப்பறேன். அதுவரைக்கும் வெயிட் பண்ணுங்க. சத்தியமா ரகசியக் கல்யாணமெல்லாம் செஞ்சிக்க மாட்டேன்.”

- தேவராஜ்