எடுத்த எடுப்பில் ‘எஸ்’ சொன்னார் எஸ்.ஏ.சி!



மதுரை புதூரைச் சேர்ந்த அபி சரவணன், பள்ளிக்கூடக் காலத்திலேயே நாடகங்களில் நடித்து, சுற்றியிருந்தவர்களின் கைதட்டலைப் பெற்றார். பி.இ மற்றும் எம்.பி.ஏ படிக்கும்போதும், விப்ரோவில் மாதம் ஒருலட்ச ரூபாய் சம்பளம் வாங்கியபோதும் நடிப்பு ஆர்வம் அப்படியே இருந்தது. ஒரு கட்டத்தில் வேலையை உதறிவிட்டு, லோக்கல் சேனலில் வி.ஜேவாக வலம் வந்தார். அந்த அனுபவம், சன் மியூசிக்கில் எனிடைம் மியூசிக் நிகழ்ச்சியை இவருக்கு வாங்கிக் கொடுத்தது.

பத்திரிகையாளர்கள்  முருகன் மந்திரம் மற்றும்  கே.வி.ஆனந்த் நட்பு கிடைத்தபோது சரவணனுக்கு சினிமா வட்டாரம் நெருக்கமானது.‘அட்டகத்தி’ படத்தில் தினேஷ்க்கு நண்பராக நடித்து இவர் பேசிய  ‘இவன் சீன் போடறாண்டா’ என்கிற  முதல் டயலாக் கவனம் ஈர்த்தது. 

‘குட்டிப்புலி’ படத்தில்  ‘காதல்னா பாரதிராஜா, கம்போசிங்னா  இளையராஜா, இது ரெண்டும் சேந்ததுதாண்டா இந்த பப்புராஜா’  என்று டயலாக்கெல்லாம் இருந்தது. பின்னர் அது பாலசரவணன் கைக்கு மாறிவிட்டது. எஸ்.எஸ். குமரன் இயக்கத்தில் நாயகனாக நடித்த  ‘கேரள நாட்டிளம் பெண்களுடனே’ நல்ல வரவேற்பைப் பெற்றது.

தொடர்ந்து ‘அன்கட் டைமண்ட்’ மலையாளப் படத்தில் ஹீரோ வாய்ப்புக் கிடைத்தது. . ‘சாஹஸம்’ படத்தில் தியாகராஜன் இவருக்கொரு  நல்ல வாய்ப்பை வழங்கினார். ‘ப்ளஸ் ஆர் மைனஸ்’, ‘இறையாண்’, ‘வீரத்தேவன்’ ‘இவன் ஏடாகூடமானவன்’, ‘பட்டதாரி’, ‘எதிர்கொள்’, ‘விசிறி’ , ‘சாயம்’, ‘வச்சு செய்றோம்’, ‘மீனாட்சிபுரம்’, .‘நாகேஷ் திரையரங்கம்’  ஆகிய படங்களில் ஹீரோ, செகண்ட் ஹீரோ என படப்பட்டியலை நீட்டி வருகிறார் அபி சரவணன்.

எஸ்.ஏ.சந்திரசேகரன் நடித்த ‘டூரிங் டாக்கீஸ்’ படத்தில் சின்ன வயது எஸ்.ஏ.சியாக, இளம் நாயகனாக நடித்ததற்குப் பின்னால் உள்ள கதையைச் சொல்கிறார் அபி சரவணன்...‘‘ சினிமாக்காரர்கள் கண்ணில்படுவார்களா என்று பார்ப்பதற்காக சாலிகிராமத்திலுள்ள டீக்கடைக்குப் போவேன்.

அப்படி ஒருமுறை போகும்போது, ‘வீடு ஒழுகுகிறது. கொஞ்ச நாளைக்கு தங்குவதற்கு ஏதாவது ஏற்பாடு செய்யுங்கள்’ என்று ஒருவர், தன் நண்பரிடம் கேட்டுக் கொண்டிருந்தார். அவர்கள் பேசியதிலிருந்து, சினிமாக்காரர்கள் என்று தெரிந்துகோண்டேன்.

அவரிடம் பேசி என் அறைக்கு அழைத்து வந்தேன். அறையில் ‘கேரள நாட்டிளம் பெண்களுடனே’ போஸ்டரைப் பார்த்து, ‘நீங்கதான் அந்தப்படத்துல யங் ஹீரோவா?’’ என்றார். ஆமாம் என்றேன். சில நாட்களில் சென்று விட்டர். ஒருவருடம் கழித்து அவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.

வரச்சொன்ன இடத்துக்குப் போனேன். அது எஸ்.ஏ.சந்திரசேகரன் சார் ஆபீஸ். என்னைப் பார்த்ததும் எதுவும் பேசவில்லை. அவரிடம் ‘குட், இந்தப்பையனையே ஹீரோவா ஃபிக்ஸ் பண்ணிக்கோங்க’ என்றார். என்னை அழைத்துச் சென்றவர் எஸ்.ஏ.சியின் மேனேஜர் மோகன்.’’

- நெல்பா