தலை தீபாவளி நட்சத்திரங்கள்



‘தல’ படம் எதுவும் இந்த தீபாவளிக்கு வரவில்லையென்றாலும், நட்சத்திரங்களின் ‘தலை தீபாவளி’ வருடா வருடம் களை கட்டுகிறது. இந்த ஆண்டு தலை தீபாவளி கொண்டாடும் நட்சத்திரங்களை ‘வண்ணத்திரை’ வாசகர்கள் வாழ்த்த இங்கே விவரங்கள் தருகிறோம்.

ஜோதிடரீதியாக நட்சத்திரங்கள் இருபத்தியேழு. இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் நட்சத்திர ஜோடியினரின் பட்டியலும் இருபத்தியேழு என்கிற எண்ணிக்கையில் அமைந்தது யதேச்சையான ஆச்சரியம்.

ஜனவரி 15-ல், ‘இனிது இனிது’ படத்தில் நடித்த சரண்குமார், நேகா என்பவரைக் காதலித்து கரம்பிடித்தார். இதே மாதம் 23-ஆம் தேதி, ‘அரவான்’ மற்றும் ‘ஞான கிறுக்கன்’ படத்தில் நடித்த அர்ச்சனா கவி, தன்னுடன் இணைந்து நடித்த மலையாள காமெடி நடிகர் அபிஸ் மேத்யூவைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

பிப்ரவரி 3-ல் சங்கவியும், பெங்களூரு தனியார் சாஃப்ட்வேர் நிறுவன இயக்குனர் என்.வெங்கடேசும் திருமணம் செய்துகொண்டனர். இதே மாதம் 12-ஆம் தேதி, ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ மற்றும் ‘வாலிப ராஜா’ படத்தில் நடித்த டாக்டர் சேதுராமன், உமையாள் என்கிற உமாவைக் கரம்பிடித்தார்.

24-ஆம் தேதி கஜாலாவுக்கும், பாலிவுட் டி.வி நடிகர் மற்றும் போட்டோகிராபருமான பைசல் ரசா கானுக்கும் திருமணம் நடந்தது. இதுவும் காதல் திருமணம்தான். 28-ஆம் தேதி, நடிகை தேவயானியின் தம்பியும் நடிகருமான நகுல், தனியார் சினிமா நிறுவனத்தில் பணியாற்றும் ஸ்ருதி பாஸ்கரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இதே தேதியில், தமிழில் ‘உயிரே’ படத்தில் நடித்த பாலிவுட் நடிகை பிரீத்தி ஜிந்தா, ஜென் குட்எனஃப் என்பவரைக் காதலித்து கரம்பிடித்தார்.

மார்ச் 3-ஆம் தேதி, தமிழில் ‘சாணக்யன்’ மற்றும் ‘இந்தியன்’ படங்களில் நடித்த பாலிவுட் நடிகை ஊர்மிளா மடோன்ட்கர், காஷ்மீர் தொழிலதிபர் மோஷின் அக்தர் மிர் காதல் திருமணம் நடந்தது. 10-ஆம் தேதி ‘கயல்’ சந்திரனும், டி.வி நிகழ்ச்சித் தொகுப்பாளினி அஞ்சனாவும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.

28-ஆம் தேதி, ‘லண்டன்’ மற்றும் ‘தகதிமிதா’, ‘திரு ரங்கா’, ‘அம்புக் குறி’ படங்களில் நடித்த அங்கீதா (இவர்தான் அந்தக்கால ‘ரஸ்னா’ விளம்பரங்களில் இடம்பெற்ற ‘ஐ லவ் யூ ரஸ்னா’ பேபி, நினைவிருக்கிறதா?) தொழிலதிபர் விஷால் ஜெகதாப் என்பவரைக் காதலித்து கரம்பிடித்தார்.

ஏப்ரல் 22-ஆம் தேதி, ‘உறுமீன்’ படத்தில் நடித்தபோது ஏற்பட்ட காதலைத் தொடர்ந்து பாபி சிம்ஹாவும், ரேஷ்மி மேனனும் திருமணம் செய்துகொண்டனர். 30-ஆம் தேதி, தமிழில் ‘சச்சின்’ படத்தில் நடித்த பாலிவுட் நடிகை பிபாஷா பாசுவுக்கும், இந்தி நடிகர் கரண் சிங் குரோவருக்கும் திருமணம் நடந்தது. இதுவும் காதல் திருமணம்தான்.

மே 10-ஆம் தேதி, பாண்டியராஜன் மகனும், நடிகருமான பிருத்விராஜன், ஆஷா என்பவரைக் காதலித்து கரம்பிடித்தார். 26-ஆம் தேதி, தயாரிப்பாளர் வி.வினோத்குமாருக்கும், சிந்துவுக்கும் திருமணம் நடந்தது.ஜூன் 5-ஆம் தேதி, பின்னணி பாடகர் பென்னி தயாள், குறும்பட நடிகை கேத்தரின் காதல் திருமணம் செய்துகொண்டனர். 9-ஆம் தேதி, ‘பட்டாளம்’ மற்றும் ‘காதல் சொல்ல வந்தேன்’, ‘மெய்யழகி’ படங்களில் நடித்த பாலாஜி, பிரீத்தி என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

ஆகஸ்ட் 8-ஆம் தேதி, ‘வானம்’ படத்தின் இயக்குனரும், தெலுங்கில் பல படங்களை இயக்கியவருமான கிரிஷ், டாக்டர் ரம்யா திருமணம் நடந்தது. 18-ஆம் தேதி, தெலுங்கு நடிகரும், தமிழில் பல படங்களில் நடித்தவருமான ஜே.டி.சக்ரவர்த்தி, நடிகை அனுக்ருதி யைக் காதலித்து கரம்பிடித்தார். 19-ஆம் தேதி, ‘மகாபலிபுரம்’ மற்றும் ‘உயிர்மொழி’ படங்களில் நடித்த வித்திகா செரு, தெலுங்கு நடிகர் வருண் சந்தேஷ் காதல் திருமணம் நடந்தது.

செப்டம்பர் 4-ஆம் தேதி கோலிவுட்டில் ஏகப்பட்ட ஜோடிகளுக்கு கல்யாணம். விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ‘இன்று நேற்று நாளை’ படத்தின் இயக்குனர் ரவிக்குமார் திருமணம் செய்துகொண்டார். இயக்குநர் விக்ரம் கே.குமாருக்கும், ஏ.ஆர்.ரஹ்மானின் ரெக்கார்டிங் ஸ்டுடியோவில் பணியாற்றும் சவுண்ட் என்ஜினீயர் நிதிக்கும் திருமணம் நடந்தது.

இதுவும் காதல் திருமணம்தான். ‘ஜோக்கர்’ இயக்குநர் ராஜுமுருகன், டி.வி நிகழ்ச்சித் தொகுப்பாளினி ஹேமா சின்ஹா என்பவரைக் காதலித்து கரம்பிடித்தார். சுஜிதா என்ற பெயரில் கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய சுஜிபாலா - பிரனேஷ் திருமணம் நடந்தது. ‘தாவணிக்காற்று’ மற்றும் ‘பிச்சைக்காரன்’ பட ஹீரோயின் சாத்னா டைட்டஸ், திரைப்பட விநியோகஸ்தர் மற்றும் நடிகர் கார்த்திக் என்பவரை ரகசிய காதல் திருமணம் செய்துகொண்டார்.

அக்டோபர் 9-ஆம் தேதி நிகிதாவுக்கும், மும்பை தொழிலதிபர் ககன்தீப் சிங் மாகோ என்பவருக்கும் திருமணம் நடந்தது. இதுவும் காதல் திருமணம்தான். 19-ஆம் தேதி, ‘நானே எனக்குள் இல்லை’ படத்தில் ஹீரோவாக நடித்தவரும், இசையமைப்பாளரும், நடிகை ஜெயசித்ராவின் மகனுமான அம்ரேஷ் கணேஷ் - கீர்த்தி திருமணம் நடந்தது.

தவிர, ‘கல்லூரி’ மற்றும் ‘வால்மீகி’, ‘நந்தி’ உள்பட பல படங்களில் ஹீரோவாக நடித்த அகிலுக்கும், சுகாசினி என்பவருக்கும் ரகசிய திருமணம் நடந்தது. இவர்கள் காதல் விவகாரம், நெருங்கிய நண்பர்களுக்குக் கூட தெரியாது என்பதுதான் ஹைலைட்.
தலை தீபாவளி காணும் நட்சத்திரங்கள் அத்தனை பேருக்கும் ‘ஹேப்பி தலை தீபாவளி!’

தேவராஜ்