கொடி



விஜய் ரசிகர்கள் ஏற்றப்போகும் கொடி!


* கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி சார்பாக இயக்குநர் வெற்றிமாறன் தயாரிக்கும் படம் இது.

* வெற்றிமாறனிடம் உதவியாளராக இருந்த துரை.செந்தில்குமார் இயக்குகிறார். முன்பு அவர் இயக்கிய ‘எதிர்நீச்சல்’, ‘காக்கிசட்டை’ இரண்டுமே தனுஷ் தயாரித்ததுதான். மூன்றாவது படத்தில் தன்னுடைய முந்தைய படங்களின் தயாரிப்பாளரை, தன் குருநாதரின் தயாரிப்பில் இயக்குகிறார் செந்தில்குமார்.

* தனுஷுக்கு முதன்முறையாக இரட்டை வேடம். ‘கொடி’ என்கிற அரசியல்வாதியாகவும், ‘அன்பு’ என்கிற பேராசிரியராகவும் நடிக்கிறார்.

* திரிஷாவும் ‘ருத்ரா’ என்கிற அரசியல்வாதியாக நடிக்கிறார். மலையாள வரவு அனுபமா பரமேஸ்வரனின் கேரக்டர் பெயர் ‘முட்டை மாலதி’.

* ‘மாரி’யைத் தொடர்ந்து காளிவெங்கட் மீண்டும் தனுஷோடு காமெடி செய்கிறார்.

* காமெடியன்கள் ஹீரோவுக்கு அப்பா ஆகும் காலம் போல இது. ‘காஷ்மோரா’வில் விவேக் என்றால், ‘கொடி’யில் கருணாஸ்.

* ‘வேலையில்லா பட்டதாரி’க்குப் பிறகு மீண்டும் தனுஷுக்கு அம்மாவாக நடிக்கிறார் சரண்யா பொன்வண்ணன்.

* செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘புதுப்பேட்டை’ படத்தில் ஓரளவுக்குத்தான் அரசியல் இருக்கும். இந்தப் படம் முழுக்க அரசியல் காரசாரம்தான்.

* படத்தின் கதைக்களம் பொள்ளாச்சி என்பதால், அதைச் சுற்றியுள்ள இடங்களில் படப்பிடிப்பு முழுவீச்சில் நடந்திருக்கிறது.

* முதன்முறையாக இந்தப் படத்துக்காகத்தான் ஐம்பத்தியேழு நாட்கள் தொடர்ச்சியாக தனுஷ் கால்ஷீட் கொடுத்தாராம். மொத்தப் படப்பிடிப்பும் எண்பது நாட்களில் முடிவடைந்திருக்கிறது.

* இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரனுக்கு வெயிட்டான வில்லன் வேடமாம். இந்த தீபாவளிக்கு விஜய் படம் வெளிவராத சோகத்தில் இருக்கும் அவரது ரசிகர்கள், விஜய்யின் அப்பாவான எஸ்.ஏ.சி. நடித்திருக்கும் இந்தப் படத்துக்கு படையெடுக்க இருக்கிறார்களாம்.

* சந்தோஷ் நாராயணனின் இசை செம மாஸ்ஸாக வந்திருக்கிறதாம்.

* ‘மிருதன்’ படத்தில் ஒளிப்பதிவாளரான வெங்கடேஷ், ‘கொடி’க்கு வேலை பார்த்திருப்பதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இவர், தனுஷுக்கு நெருக்கமான இயக்குநர் கம் ஒளிப்பதிவாளர் வேல்ராஜிடம் வேலை செய்தவர்.

* மறைந்த எடிட்டர் கிஷோரின் உதவியாளர் பிரகாஷ் இதில் எடிட்டராக அறிமுகமாகிறார்.

* தெலுங்கிலும் ‘தர்மயோகி’ என்று டப் செய்து டப்பு பார்க்கப் போகிறார்களாம்.

சுரேஷ்ராஜா