நான் வெறும் கிளாமர் டால் கிடையாது! கீர்த்தி சுளீர்



‘சூப்பர் ஸ்டாரின் அடுத்த ஹீரோயின்’ என்று கோலிவுட்டில் சொல்லக்கூடிய அளவுக்கு கீர்த்திசுரேஷின் புகழ் கொடிகட்டிப் பறக்கிறது. சின்ன ரஜினி சிவகார்த்திகேயனோடு ‘ரஜினி முருகன்’, ‘ரெமொ’ என்று அடுத்தடுத்து ஹிட் அடித்தவர், தனுஷோடு ‘தொடரி’யிலும் முத்திரை பதித்தார்.

இப்போது இளைய தளபதியோடு ‘பைரவா’வுக்காக டூயட் பாடிக் கொண்டிருக்கிறார். ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் சூர்யாவோடு ஜோடி சேருகிறார். தெலுங்கு, மலையாளத்திலும் டிமாண்டு உள்ள ஹீரோயினாகியிருக்கும் கீர்த்தி, தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகள் பட்டியலில் மிகக்குறுகிய காலத்தில் இடம் பெற்று விட்டார். இவ்வாண்டு குஷியாக தீபாவளி கொண்டாடும் நடிகைகளில் கீர்த்திக்கே முதலிடம்.

“ஆனந்த அதிர்ச்சின்னு சொல்லுவாங்களே!  அந்த உணர்வில் இருக்கேன். நானே கொஞ்சமும் எதிர்பார்க்காத இடம் எனக்கு  கிடைச்சிருக்கு. இந்த இடத்தை தக்க வெச்சுக்கறதே பெரும் போராட்டம். இதையும்  தாண்டி இன்னும் வளரவும் செய்யணும்.

திடீர்னு கிடைச்சிருக்கிற இந்த  பாப்புலாரிட்டியை என்ஜாய் பண்ணுறதை விட்டுட்டு, இந்த இடத்துக்கான பொறுப்போடு நடந்துக்கணும் என்பதுதான் பர்ஸ்ட் ப்ரியாரிட்டி. இனிமேல் கீர்த்திகிட்ட இருந்து ‘பெஸ்ட்’ மட்டும்தான் வரும் என்கிற நம்பிக்கையை  ஏற்படுத்தணும்” என்று படபடப்பாக, குண்டுவிழிகளை உருட்டி, மிரட்டி பேச  ஆரம்பித்தார்.

“நீங்களும் மலையாள வரவுதானே?”

“இதிலென்ன சந்தேகம்? பிறந்தது கேரளாதான். ஆனா வளர்ந்தது சென்னையில். அப்பா சுரேஷ், சினிமா புரொடியூஸர். அம்மாவை தமிழ்நாட்டுக்கே தெரியும். எண்பதுகளின் பிரபலமான நடிகை மேனகா. அவங்க தமிழ்தான்.

ஃபிப்த் படிக்கிறப்போதான் முதன்முதலா சினிமா காத்து என் மேலே பட்டது. சுரேஷ்கோபி நடிச்ச ‘பைலட்’டுங்கிற படத்தை அம்மா தயாரிச்சாங்க. அதுலேதான் குழந்தை நட்சத்திரமா என்ட்ரி. அப்புறம் ஒரு ரெண்டு படம் பண்ணினேன்.

பத்து வருஷம் கழிச்சி ஹீரோயினா முதல் படமே பிரியதர்ஷன் டைரக்‌ஷனில் டபுள் ஆக்டிங்கா ‘கீதாஞ்சலி’யில் அறிமுகமானேன். தமிழில் கூட ‘சாருலதா’ன்னு பிரியாமணி நடிச்சி வெளிவந்ததே, அந்தப் படம்தான்.”

“குறுகிய காலத்தில் பெரிய ஹீரோக்களோடு நடிச்சிட்டீங்க...”
“ஆமாம். என்னோட ஹீரோக்கள் எல்லாமே திறமையானவர்கள். ‘இது என்ன மாயம்?’ படத்திலே விக்ரம்பிரபுவுக்கும் எனக்கும் கெமிஸ்ட்ரி பர்ஃபெக்டா அமைஞ்சது. கடலை, கலாய்னு ஜாலியான பர்சன். ‘ரஜினி முருகன்’ பண்ணுறப்போ எனக்கு தமிழ் சரியா பேச வராது. தட்டுத் தடுமாறி பேசுறப்போ சிவகார்த்திகேயனோட கிண்டலுக்கு அளவேயிருக்காது.

 இவரோடு ஷூட்டிங்கில் இருந்தா, காலேஜில் கிளாஸ் அட்டெண்ட் பண்ணுறமாதிரி ஜாலியா இருக்கும். தனுஷ் கிட்ட புரொஃபஷனலா நிறைய விஷயங்கள் கத்துக்கிட்டேன். நேஷனல் அவார்டெல்லாம் வாங்கின ஆக்டர். ஆனாலும் டவுன் டூ எர்த். ஷூட்டிங் சமயத்தில் ரொம்ப சீரியஸா இருப்பார். தேவையில்லாத அரட்டை அவர்கிட்ட கொஞ்சமும் இருக்காது.

விஜய் சாரோட இப்போதான் ‘பைரவா’ செய்யுறேன். என்னோட அம்மா, அவருக்கு ஃபேன். ஷாட் பிரேக்கில் ரொம்ப ரிலாக்ஸா இருப்பார். ஆனா ‘டேக்’குக்கு வந்துட்டா, கேமராவுக்கு முன்னாடி பிரிச்சி மேயறாரு.

இவரோட இருக்கிற சீனில் நாம எடுபடணும்னா மத்த படத்துக்கு கொடுக்கிற உழைப்பைக் காட்டிலும் டபுளாக் கொடுக்கணும். பாபிசிம்ஹாவும் நடிப்பு ராட்சஷன். பால் வடியுற முகத்தில எவ்வளவு ரியாக்‌ஷன் கொண்டுவர்றாரு! சூர்யா சார் பத்தி அடுத்த தீபாவளி ஸ்பெஷலுக்கு பேட்டி கொடுக்கறேன்.”

“உங்க அம்மா நடிச்ச படங்களில் பிடிச்ச படம்?”

“ரஜினி சாரோட அவங்க பண்ணின ‘நெற்றிக்கண்’ ரொம்பப் பிடிக்கும்.”
“கீர்த்தியை மாதிரி எப்பவுமே அழகா இருக்குறது எப்படின்னு எங்க
வாசகிகளுக்கு டிப்ஸ் தரமுடியுமா?”

“ஹலோ... ‘வண்ணத்திரை’க்கு வாசகிகளும் இருக்காங்களா என்ன? ஓக்கே. என்னோட டிப்ஸ் வாசகர்களுக்கும் பயன்படும். ஆள் பாதி ஆடை பாதி. நாம எந்த ஆடையில் அழகா இருக்கோம்னு மத்தவங்க சொல்லுறாங்களோ, அதையே நம்ம பர்மனென்ட் டிரெஸ்ஸா மாத்திக்கலாம். நான் ஃபேஷன் டெக்னாலஜி ஸ்டூடன்ட். அதனால ஆடைகள் நம்ம ஆளுமையை எப்படி தீர்மானிக்குதுன்னு எனக்குத் தெரியும். டார்க்கா இருக்கிறவங்க முடிஞ்சவரைக்கும் லைட் ஷேட் கலரில் டிரெஸ் பண்ணிக்கலாம்.

சிகப்பா இருக்கிறவங்க டல் கலர்ஸ் யூஸ் பண்ணா பளிச்சின்னு எடுபடும். அப்புறம், முகம் ரொம்ப முக்கியம். எப்பவும் பளிச்சின்னு தெரியணும்னா சும்மா சும்மா முகம் கழுவி பவுடர் அடிச்சிக்கிட்டே இருக்கணும்னு இல்லை.

எப்பவும் முகத்தில் லைட்டா ஒரு சிரிப்பு. மத்தவங்ககிட்டே பேசுறப்பவும் சிரிச்சிக்கிட்டே பேசணும். இதனால முகத்தில் மட்டும் அழகு கூடாது, மனசோட அழகும் கூடும். சிரிச்சிக்கிட்டே இருக்கணும்னு நீங்க பிராக்டிஸ் பண்ணி, அதுவே உங்களுக்கு பழக்கமாயிட்டா கோபமே வராது.”

“கிளாமர்?”

“எனக்கு கல்யாணமாகி, குழந்தைகள் பிறந்தப்புறம் நான் நடிச்ச பழைய படங்களைப் பார்க்குறப்போ நானோ, என் கணவர் குழந்தைகளோ நெளியக்கூடாது. இது என் அம்மா கொடுத்த அட்வைஸ். இதை என்னிக்கும் மறக்க மாட்டேன்.

அவங்க எப்படி நடிச்சாங்களோ, அதே மாதிரிதான் நானும் நடிப்பேன். பக்கத்து வீட்டுப் பொண்ணு லுக் என்பதுதான் என் அம்மாவோட ப்ளஸ். எனக்கும் அதுதான். எனக்கு சவுகரியமான ஆடையைத்தான் நான் உடுத்துவேன். எனக்கு கொடுக்கப்படுகிற கேரக்டருக்கு எது போதுமானதோ அதுவே போதும். நான் வெறும் கிளாமர் டால் கிடையாது!”

சுரேஷ்ராஜா