சிவகார்த்திகேயனுக்கு நான் வில்லனா? சீறுகிறார் விஜய் சேதுபதி



தமிழ் சினிமாவில் இப்போது விஜய் சேதுபதியின் காட்டில்தான் அடைமழை. ‘சேதுபதி’, ‘காதலும் கடந்து போகும்’, ‘இறைவி’, ‘தர்மதுரை’, ‘ஆண்டவன் கட்டளை’, ‘றெக்க’ என்று இந்த ஆண்டு மட்டுமே இதுவரை அரை டஜன் படங்கள் ரிலீஸ் ஆகியிருக்கின்றன. ‘மெல்லிசை’,

‘இடம் பொருள் ஏவல்’ இரண்டுமே ரிலீஸுக்கு ரெடி. இது தவிர்த்து வெற்றிமாறனின் ‘வடசென்னை’, ‘ஓரம்போ’ புஷ்கர் காயத்ரிக்கு ஒரு படம், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஒன்று, ‘ரேணிகுண்டா’ பன்னீர்செல்வத்தின் ஒரு படம் என்று சார் ரொம்ப பிஸி.
‘வண்ணத்திரை’ தீபாவளி மலருக்காக நேரம் ஒதுக்கி ரிலாக்ஸாகப் பேசினார்.

“மக்கள் செல்வன் ஆயிட்டீங்க...”
“அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை. சினிமா வாய்ப்பு தேடி அலைஞ்ச காலகட்டங்களில் யாருமே என்னை ஏறெடுத்துக்கூட பார்க்கலை. அப்படி இப்படி லோல்பட்டு லொங்கப்பட்டு சின்ன சின்ன வேஷமெல்லாம் செஞ்சி போராடிக்கிட்டு இருந்தப்போ என்மேலே நம்பிக்கை வெச்சி, ‘தென்மேற்கு பருவக்காற்று’ மூலமா ஹீரோவா அறிமுகம் செஞ்சது என்னோட நண்பன் சீனு ராமசாமி.

அப்படிப்பட்டவர் ‘தர்மதுரை’ படத்துக்காக டைட்டிலில் ‘மக்கள் செல்வன்’னு அவரா விருப்பப்பட்டு போட்டப்போ அதை மறுக்க மனசில்லை. நான் நல்லா இருக்கணும்னு நெனைக்கிறவரு, இப்படியொரு பட்டத்தை எனக்கு கொடுக்கறப்போ அதில் ஏதோ அர்த்தம் இருக்கும்னு சொல்லி அப்படியே ஏத்துக்கறேன்.”“நீங்க செலக்ட் பண்ணுற கதைகள் மட்டும் எப்படி ஹிட் ஆகுது?”

“மந்திர தந்திரமெல்லாம் ஒண்ணுமில்லைங்க. கவனத்தை சிதறவிடாம கதையை கேட்பேன். பிடிச்சிருந்தா அப்படியே ஒத்துப்பேன். இல்லைன்னா எனக்கு சரியில்லைன்னு தோணுற விஷயங்களை சுட்டிக் காட்டுவேன். அதை திருத்திக்கிட்டா ஓக்கே பண்ணிடுவேன். கதையைக் கேட்டதிலிருந்தே என்னோட கேரக்டருக்கு ஹோம் ஒர்க் பண்ண ஆரம்பிச்சிடுவேன்.

ஷூட்டிங் ஸ்பாட்டில் இன்னும் கொஞ்சம் மெருகேற்றி நடிப்பேன். கூட நடிக்கிற நடிக, நடிகையரும் அவங்கவங்க திறமையை வெளிப்படுத்தினாதான் நாம ஹைலைட் ஆவமுடியும். அதனால அவங்களுக்கும் ஊக்கம் கொடுப்பேன். ஒரு படத்துலே எல்லா சீனுமே நல்லா இருக்கணும்னு விரும்பறேன். எதுக்கு இவ்வளவெல்லாம் நீட்டி முழக்கணும்! செய்யுற வேலையை பர்ஃபெக்டா செஞ்சா சக்சஸ்தான்!”

“உங்களுக்கு ஹீரோயினாக யார் நடிக்க வேண்டும் என்று நீங்கள்தான் முடிவு செய்கிறீர்களாமே?”“எங்கே இருந்து இந்த மாதிரி நியூஸ் கிளம்புதுன்னே தெரியல. எப்பவுமே நான் இந்த விஷயத்தில் தலையிடறது இல்லை. அது இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரின் சாய்ஸ். இதுலே எல்லாம் ஈடுபட்டோம்னா தேவையில்லாத பிரச்னைகள் வரும். நமக்கு ஒரு பிரச்னைன்னா நாமளேதான் சந்திக்கணும். யாரும் உதவிக்கு வரமாட்டாங்க.

இதுவரை என்னோட நயன்தாரா, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், நந்திதா ஸ்வேதா, லட்சுமி மேனன், ரித்திகா சிங், காயத்ரின்னு முன்னணி நடிகைகள் நிறைய பேர் நடிச்சிருக்காங்க. இவங்க எல்லாருமே எங்கிட்டே நேர்மையா, மரியாதையா நடந்துக்கிட்டாங்க. என்னைப் பத்தி ஒருத்தரிடம்கூட தவறான எண்ணம் எதுவுமில்லை.

ஸ்பாட்டில் நான் தயாராக பதினைஞ்சு நிமிஷம் போதும். ஆனா, ஹீரோயினுக்கு ஹேர்ஸ்டைல், காஸ்ட்யூம், மேக்கப்புன்னு ஒரு மணி நேரத்துக்கும் மேலே ஆகும். என்னோட நடிச்ச ஹீரோயின்கள் அத்தனை பேருமே கடின உழைப்பாளிகள்!”“குறுகிய காலத்தில் இந்த அளவுக்கு நீங்க உயர்ந்ததற்கு அதிர்ஷ்டம்தான் காரணமா?”

“என்னோட வளர்ச்சிக்கு அதிர்ஷ்டம்தான் காரணம்னு சொல்லிட்டா, உழைப்புக்கும் விடா முயற்சிக்கும் மதிப்பே இல்லாம போயிடும். ஜூனியர் ஆர்ட்டிஸ்டா இருந்த ஒருத்தன் ஒரே வருஷத்துலே ஆறு படம் கொடுக்கற ஹீரோவா வளர்ந்ததற்கு பின்னாலே எவ்வளவு சிரமப்பட்டிருப்பான்னு கொஞ்சமாவது எண்ணிப் பார்க்கணும்.

எனக்குப் பின்னாடி வரப்போறவங்களுக்கும் நான் ரோல்மாடலா இருக்கணும்னு விருப்பப்படறேன்.”“கடந்த ரெண்டு வருஷமா நிறைய ரசிகர்கள் உங்களுக்கு உருவாகியிருக்காங்க...”

“உண்மைதான். சின்னச் சின்ன ஊர்களில் கூட எனக்கு ரசிகர் மன்றங்கள் திறந்திருக்காங்க. எது செய்யுறதா இருந்தாலும் ஆர்ப்பாட்டம் இல்லாம பண்ணுங்க. தேவையில்லாத விவாதமெல்லாம் வேணாம். அப்படி அலம்பல்தான் பண்ணுவோம்னா ரசிகர் மன்றத்தை மூடிடுங்கன்னுதான் அவங்க கிட்ட பேசுறப்போ எல்லாம் சொல்லுறேன்.

இன்னொரு நடிகரோட ரசிகர்களோட சண்டை போட்டுதான் எனக்கு பேனர் வைக்கணும்னு அவசியம் எதுவுமில்லை. பேனர் வைக்க, போஸ்டர் ஒட்ட யாராவது இடம் கேட்டா விட்டுக் கொடுத்துடணும் என்பதுதான் என் ரசிகர்களுக்கு நான் வைக்கிற முக்கிய வேண்டுகோள்.”

“உங்களை சமூகவலைத்தளங்களிலும் கொண்டாடுறாங்களே?”
“என்னோட ஃபேஸ்புக் பக்கத்தை மட்டும் 27 லட்சம் பேர் ஃபாலோ பண்ணுறாங்க. என்னோட எண்ணத்தை வெளியிட்டா உடனே அது லட்சக்கணக்கான மக்களைப் போய்ச் சேருது. அங்கே வம்பு தும்பு எதுவும் வெச்சுக்கறதில்லை. எல்லாருக்கும் நம்மள பிடிக்குதுன்னா அது சந்தோஷப்பட வேண்டிய விஷயம்தானே!”

“ஒரு மாதிரி மாற்று சினிமா ஹீரோவா இருந்தீங்க. இப்போ ‘றெக்க’ மாதிரி பக்கா கமர்ஷியலில் இறங்கிட்டீங்களே?”“விரும்பியேதான் செய்யுறேன். ‘றெக்க’ என்னை இன்னும் பல லெவல்களுக்கு கொண்டு போவுது. பத்து பேரு மட்டும் பாராட்டுற மாதிரி படம் செய்யுறதாலே ஒரு ஹீரோவுக்கு கமர்ஷியல் வேல்யூ நிக்காது.

நம்மை நம்பி தயாரிப்பாளர்கள் பெரிய பணத்தை முதலீடு செய்யுறாங்க. அவங்களுக்கு நஷ்டம் வந்துடக்கூடாதுங்கிற பொறுப்புணர்வு நமக்கு இருக்கணும். நான் நடிக்கிற படங்களுக்கு வியாபார எல்லை விரிவடைஞ்சிக்கிட்டு வருது. அதுக்கு ஏத்தமாதிரி நானும் மாறிக்கிட்டே இருக்கணும். ஆனா, பிரும்மாண்ட படங்களில் நடிக்கிறதா இருந்தாலும், நல்ல கதைக்களம் இருந்தா மட்டும்தான் ஏத்துக்கிறேன்.”

“என் வளர்ச்சியைத் தடுக்கிறாங்கன்னு சிவகார்த்திகேயன் கம்ப்ளைன்ட் செய்யுறாரு. அந்த வில்லன்கள் பட்டியலில் நீங்களும் ஒருவரா?”“அய்யோ. என்ன இப்படி கேட்குறீங்க? என்னோட சமகால சிறந்த நடிகனான சிவகார்த்திகேயனை உங்களை மாதிரியே நானும் கொண்டாடுறேன்.

இதைச் சொல்லுறதுல எனக்கு எந்த ஈகோவும் கிடையாது. அவரோடு எனக்கு மோதல் என்பது மாதிரி கிளப்பிவிட்டு யாரும் குளிர்காய நினைக்காதீங்க. என் படமும் ஓடணும். அவர் படமும் ஓடணும். திரையுலகம் ஆரோக்கியமா இருந்தாதான் அவர், நான், நீங்க எல்லாரும் நல்லா இருப்போம்.

எங்களை நம்பி பணம் போடற தயாரிப்பாளர் வயிறெரியக்கூடாது. எங்க படங்களோட வெற்றி தனிப்பட்ட விஜய்சேதுபதியோடதோ அல்லது சிவகார்த்திகேயனோடதோ இல்லை. சினிமாவை நம்பி வாழும் பல்லாயிரக் கணக்கான குடும்பங்களோட வாழ்வாதாரம் சம்பந்தப்பட்டது. எல்லாருக்கும் சினிமாதான் சோறு போடுது. இன்னொரு சினிமாக்காரன் நல்லா இருக்கக்கூடாதுன்னு நினைக்கிற சினிமாக்காரன், தான் செய்யும் தொழிலுக்கு துரோகம் செய்யுறான்னு அர்த்தம்.”

“மறக்க முடியாத கேரக்டர்?”

“ரசிகர்கள் எல்லோருக்கும் புடிச்ச ‘சுமார் மூஞ்சி குமாரு’ கேரக்டர்தான் எனக்கும் ரொம்பப் பிடிக்கும். என்னோட கேரியரில் மறக்க முடியாத கேரக்டர். இதில் நடிச்சாதான் என்னோட இயல்பான கூச்ச சுபாவம் போகும், நல்ல நடிகனா வெளிப்படுவேன்னு டைரக்டர் கோகுல் கிட்டே சொல்லிட்டே நடிச்சேன். என்னோட எதிர்பார்ப்பு வீண் போகலை. ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தோட இரண்டாம் பாகம் உருவாகுது. அதில் நடிக்கப் போகிற நன்னாளுக்காக ஆவலோடு காத்திருக்கேன்.”

“ஆசைப்பட்டதெல்லாம் கிடைச்சிடுச்சி. திருப்தியா இருக்கீங்களா?”

“மனுஷனுக்கு ஏதுங்க திருப்தி? ஒரு விஷயத்துக்கு ஆசைப்படுவோம். அது கிடைச்சதும் அதுக்கும் மேலே பெரிய விஷயத்துக்கு ஆசைப்படுவோம். இப்படி போயிக்கிட்டே இருக்கும். அதுதான் மனித இயல்பு. சினிமாவிலே இவ்வளவு பெரிய இடம் கிடைக்கும்னு நான் எதிர்பார்க்கல. கிடைச்சிடிச்சி. இதை தக்க வெச்சுக்கணும்னா, இதுக்கும் மேலே போகணும்.

அண்ணா நகர் ஜவுளிக்கடை, கோடம்பாக்கம் ஃபாஸ்ட் புட், துபாய்... மறுபடியும் சென்னை, சினிமா... இப்படியே ஆறு மாதிரி ஓடிக்கிட்டிருக்கு வாழ்க்கை. சொந்த வீடு கட்டுறதுதான் முதல்ல லட்சியமா இருந்தது. அதுக்கப்புறம்தான் கல்யாணம்னு இருந்தேன். ஆனா, லட்சியம் நிறைவேறுவதற்கு முன்னாடியே கல்யாணம் ஆயிடிச்சி. நடக்குறதெல்லாம் நம்ம கண்ட்ரோலிலா இருக்கு?

வாழ்க்கையை அதோட போக்கிலே ஓடவிட்டுக்கிட்டு இருக்கேன். அது என்னை நல்ல இடங்களுக்குத்தான் கொண்டு வந்துக்கிட்டிருக்கு. நான் சந்திச்ச கஷ்டங்களும், சோதனைகளும் அனுபவமா என்னை புடம் போட்டிருக்கு. நான் நிறைய மாறியிருக்கேன். இன்னும் மாறுவேன். மாற்றம் மட்டும்தானே மாறாதது?”