நண்பேன்டா தீபாவளி!காமெடி வெடி



“அம்மா, நம்ம பார்த்தாவோட பாட்டி ஊருலே எகிறிடிச்சாம். இந்த வருஷம் அவங்க வீட்டுலே தீபாவளி இல்லை. நம்ம வீட்டுக்கு வந்துதான் கொண்டாடப் போறானாம். சொல்ல சொன்னான்” சரவணன் அதிகாரமாக அம்மா செண்பகத்திடம் சொன்னான்.“அப்படியாடா சரவணா? அய்யங்கார் வூட்டுப் பையன். அவங்க வீட்டுல தீபாவளிக்கு பலகாரமெல்லாம் செய்வாங்க.

நாமளும் ருசியா அவனுக்கு செஞ்சு போடணும்டா” படித்துக் கொண்டிருந்த காலேஜ் கைடுகளை ஓரமாக வைத்துவிட்டு உடனே சமையலறைக்குள் ஓடினார் செண்பகம்.பார்த்தாவுக்கு போன் போட்டான் சரவணன். “மச்சான், மனசை தளர உட்டுடாதே. பாட்டி போனா என்ன, நான் வக்கிறேன்டா உனக்கு பார்ட்டி. இந்த தீபாவளி உனக்கு எங்க வீட்டுலதான். தூள் கிளப்பறோம்.”எதிர்முனையில் உணர்ச்சிவசப்பட்ட பார்த்தசாரதி, “நண்பேன்டா!” என்று கூவுகிறான்.

தீபாவளியன்று விடிகாலை நாலேமுக்கால் மணிக்கு தன்னுடைய ஓட்டை லாம்ப்ரெட்டா ஸ்கூட்டரில் வந்து சேர்ந்தான் பார்த்தசாரதி.

“முதல்ல கங்கா ஸ்நானம். எங்களுக்கும் தீபாவளியோட ரூல்ஸ் & ரெகுலேஷன்ஸ் தெரியுமில்லே?” என்று எண்ணெய்க் கிண்ணத்தையும், சீயக்காய் நிரம்பிய பாத்திரத்தையும் கொடுக்கிறான் சரவணன்.

“நண்பேன்டா!” என்று தனக்கேயுரிய பாணியில் சொல்லிவிட்டு அவற்றை வாங்கிக் கொண்டு பாத்ரூமுக்கு போகிறான் பார்த்தா.ஐந்தே நிமிடத்தில் உள்ளே இருந்து சத்தம் கேட்கிறது. “பீப்... பீப்... நண்பேன்டா பீப்... கண்ணு எரியுதே பீப்... தாங்க முடியலையே பீப்...”

“டேய் சரவணா, என்னாடா இது உள்ளே பார்த்தா இப்படி கெட்டவார்த்தை சொல்லி அலறுறான், வெளியே உட்கார்ந்து நீ வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்கே” என்றாள் செண்பகம்.

“அம்மா! பாத்ரூமுலே பாட்டு பாடறான்மா. ஏதோ சிம்பு படத்தோட புது பாட்டு போலிருக்கு...”நனைந்து போய் தலைவிரிகோலமாக இடுப்பில் கட்டிய துண்டோடு வெளியே வருகிறான் பார்த்தா.

“டேய் சரவணா, என்ன எழவைடா கொடுத்து தேச்சிக்க சொன்னே. கண்ணு, காது, மூக்கு, கண்ட கண்ட எடங்கள்லே எல்லாம் எரியுதுடா.”அப்போதுதான், “இட்லிக்கு தொட்டுக்க மிளகாய்தூளிலே எண்ணெய் ஊத்தி தனியா வச்சிருந்தேன். எங்க போச்சின்னு தெரியலையே?” என்று கிச்சனில் இருந்து செண்பகத்தின் குரல் கேட்கிறது.

திடுக்கிட்ட சரவணன், சீயக்காய் தூள் கலந்து வைத்திருந்த பாத்திரத்தை தேடிக் கண்டுபிடித்து எடுத்து வந்து கொடுக்கிறான்.“குட் மதர், வெரிகுட் சன்” என்று அலுத்தவாறே மீண்டும் பாத்ரூமுக்கு கங்காஸ்நானம் செய்யப் போகிறான் பார்த்தா.குளித்துவிட்டு வந்த பார்த்தாவுக்கு பலகாரங்களை எடுத்து டைனிங் டேபிளில் வைக்கிறார் அம்மா.

முறுக்கை எடுத்து கடிக்கிறான். அவன் முகத்தையே ஆவலுடன் பார்க்கிறார் செண்பகம். ‘என் ராசாவின் மனசிலே’ ராஜ்கிரண், எலும்பு கடிப்பது பாணியில் முரட்டுத்தனமாக கடித்தும் வேலைக்கு ஆகவில்லை.“இதென்ன முறுக்கா? இல்லேன்னா டிஸ்கான் முறுக்குக் கம்பியா?”
“உனக்கு எப்பவும் குறும்புதான்டா...” என்று சொன்னபடியே தட்டில் இருந்த மைசூர்பாக்கை எடுத்து பார்த்தா மீது எறிந்துவிட்டு, மீண்டும் சமையலறைக்குள் செல்கிறாள் செண்பகம்.

மைசூர்பாக் தலையில் பட்டு, பார்த்தாவுக்கு ரத்தம் வழிகிறது. நடுங்கிப் போய் ‘தில்லுக்கு துட்டு’ பேய் மாதிரி உட்கார்ந்திருப்பவனை, குளித்துவிட்டு தலை துவட்டியபடியே வரும் சரவணன் பார்க்கிறான்.“என்னடா தலையிலே தக்காளி ஜூஸை கொட்டிக்கிட்டு சின்னப் பையன் மாதிரி விளையாட்டு” என்று சொல்லியபடியே அவன் ரூமுக்குள் செல்கிறான்.

சரவணனின் அப்பா வரதராஜன், ‘தினகரன் தீபாவளி மலர்’ புத்தகத்தை புரட்டியபடியே வருகிறார்.“செண்பகத்தோட தீபாவளி பலகார விளையாட்டா? டேய், பார்த்தா. ஒரு ரகசியம் சொல்லுறேன் கேட்டுக்கோ. தீபாவளி ஸ்வீட்டுக்கு ஆசைப்பட்டு உசுர விட்டுடாதேடா... முப்பது வருஷ அனுபவஸ்தன். சொல்லுறதை சொல்லிட்டேன். அப்புறம் உன் இஷ்டம்” என்கிறார்.

“கொலைகார குடும்பமா இருக்கும் போலிருக்கே? நாய் வாலிலே ஹண்ட்ரட் வாலா சரத்தை கட்டிட்டு நெருப்பு வெச்சி விளையாடுற மாதிரி என் வாழ்க்கையில் விளையாடுறாங்களே?” என்று வாய்விட்டு புலம்புகிறான் பார்த்தா.“நண்பேன்டா!” என்று துள்ளல் குரலோடு புது டிரெஸ் போட்டு, கூலிங் கிளாஸ் மாட்டிக்கொண்டு உற்சாகமாக வருகிறான் சரவணன், அவனது கையில் மஞ்சப்பை ஒன்று இருக்கிறது.

“என்னடா மச்சான், மளிகை சாமான் வாங்கிட்டு வர்றியா?” என்று கேட்ட பார்த்தாவின் முன்பாக பையை தலைகீழாக கவிழ்க்கிறான் சரவணன்.தரைமுழுக்க ஊசிப்பட்டாசுகள். “நீ வெடிக்கிறதுக்கு தான்டா ஸ்பெஷலா இந்த அணுகுண்டையெல்லாம் வாங்கி வெச்சிருக்கோம். எனக்கு பட்டாசுன்னாலே பயம்” என்றான் சரவணன்.

“மச்சான், எனக்கு குழந்தை மனசுதான்டா. அதுக்குன்னு நானே குழந்தையில்லேடா” என்று சொன்ன பார்த்தா, ஸ்டைலாகத் தான் பின்பக்கம் மறைத்து வைத்திருந்த சீனப்பட்டாசு பாக்கெட்டுகளை கையில் எடுக்கிறான்.பீர்பாட்டிலை மோந்து பார்த்ததுமே மட்டையாகும் சரவணன், அதே எஃபெக்டோடு சீனத்துப் பட்டாசுகளைப் பார்த்ததுமே அலறி ஓடுகிறான்.

பட்டாசோடு தெருவுக்கு வரும் பார்த்தா, ஒரு பட்டாசை திரி கொளுத்துகிறான்.“டமால்....”
உடலெல்லாம் தீய்ந்துபோய், சட்டை கிழிந்து, மூக்கு, வாயெல்லாம் புகைவழிய பரிதாபமாக நிற்கிறான் பார்த்தா.“என்னடா ஆச்சி?” என்று சரவணன் ஓடிவருகிறான்.

“சைனாக்காரன் ரொம்ப அட்வான்ஸ்டு. நெருப்பு வைக்காம, திரியைக் கிள்ளினாலே வெடிக்கிற மாதிரி வெடியைத் தயாரிச்சிருக்கான்” என்கிறான் பார்த்தா.“விடு மச்சான். ஏழு கழுதை வயசுலே பட்டாசெல்லாமா வெச்சி தீபாவளி கொண்டாடுவாங்க. உனக்குன்னு ஸ்பெஷல் அயிட்டம் வெச்சிருக்கேன்” என்று துண்டு போட்டு மூடி வைத்திருக்கும் ஓர் அயிட்டத்தை எடுக்கிறான் சரவணன்.பிரித்துப் பார்த்தால் முழுசாக ஒரு பீர் பாட்டில்.

“நண்பேன்டா” என்றவாறே, அப்படியே ஸ்டைலாக பல்லால் மூடியைத் திறந்து பாட்டிலைக் கவிழ்த்துக் கொள்கிறான் பார்த்தா. குடித்து முடித்ததுமே “பீப்... பீப்... நண்பேன்டா பீப்... சரவணா பீப்... ஹேப்பி பீப்... தீபாவளி பீப்...” என்று கத்தியவாறே தரையில் மயங்கிச் சரிகிறான்.


உள்ளே இருந்து செண்பகத்தின் குரல் கேட்கிறது. “பாத்ரூமிலே வெச்சிருந்த பெனாயில் பாட்டிலை காணோம்டா சரவணா. நீ பார்த்தே?”மயங்கிவிழுந்த பார்த்தா சட்டென்று கண்களை மட்டும் திறந்து பார்த்துவிட்டு, “ஹேப்பி தீபாவளி மச்சான்!” என்று சொல்லிவிட்டு, மீண்டும் மயங்குகிறான்.

அயன்புரம் த.சத்தியநாராயணன்