ஒரு நடிகனின் கதை! சினிமா சிறுகதை



சுரேஷுக்கு என்னைவிட ஆறு அல்லது ஏழு வயது அதிகமிருக்கலாம். நல்ல சிவந்த நிறம். உயரமானவர் என்று சொல்லமுடியாவிட்டாலும் நடுத்தரத்துக்கு சற்றே அதிகமான உயரம். சரத்பாபு பாணியில் மெல்லிய ஃப்ரேம் போட்ட மூக்குக் கண்ணாடி. தலையில் கேசம் கொஞ்சமாக அப்போது அவருக்கு கொட்ட ஆரம்பித்திருந்தது.

தலைமுடியை பாதுகாக்க நிறைய மூலிகைத் தைலம், சிகிச்சை என்று ஆயிரக்கணக்கில் செலவு செய்துகொண்டிருந்தார். டீக்காக ட்ரெஸ் செய்வார். தோற்றப் பொலிவில் அவர் காட்டிய முக்கியத்துவத்துக்கு ஒரு காரணம் இருந்தது. அவர் ஒரு நடிகனாக ஆசைப்பட்டார். குறிப்பாக ‘பாண்டி நாட்டு தங்கம்’ கார்த்திக் மாதிரி.

தினமும் காலையில் கண்ணாடி முன் நின்று பல பாவனைகளில் நடித்துப் பார்ப்பார். ஆக்‌ஷன், சென்டிமென்ட் காட்சிகளில் நடிக்க ஒரு மணி நேரமாவது பயிற்சி எடுப்பார். குறைந்தபட்சம் டிவி மெகாசீரியல்களிலாவது நுழைந்து, படிப்படியாக திரையுலகுக்குள் நுழைந்துவிட முயற்சித்துக் கொண்டிருந்தார்.

சுரேஷுக்கு மட்டுமல்ல, அலுவலகத்தில் அட்டெண்டராகப் பணிபுரிந்த அந்தோணிக்கும் நடிகனாகும் ஆசை இருந்தது. பல உப்புமா மேடை நாடகங்களில் ஏதாவது ஒரு காட்சியில் வந்து ”அம்மா போஸ்ட்டு” என்று சொல்லி கடிதம் கொடுத்துவிட்டு போவது போன்ற குறிப்பிடத்தக்க கதாபாத்திரங்களில் நடித்த அனுபவம் அந்தோணிக்கு உண்டு.

என்ன, ஆளுதான் கொஞ்சம் குள்ளம். ஏறுநெற்றி, கருப்பு என்று கூட சொல்லிவிட முடியாத அண்டங்கருப்பு நிறம் என்றிருப்பார். சினிமாவில் நடித்தால் நிறைய அழகழகான துணை நடிகைகளோடு பழகமுடியும் என்பதால் மட்டுமே சினிமா நடிகனாக விரும்பினார் அந்தோணி.

அந்தோணியை அவ்வப்போது நக்கலடிப்பது சுரேஷுக்கு பிடித்தமான பொழுதுபோக்கு. “டேய் என்னோட கலரு, பர்சனாலிட்டி இதெல்லாம் பாருடா. எனக்கே இன்னும் சான்ஸு கிடைக்கலை. உனக்கு எப்படிடா கிடைக்கும்?” சுரேஷை விட நான்கைந்து வயது மூத்தவரான அந்தோணியை சுரேஷ் ‘டேய்’ போட்டுப் பேசுவது எனக்கு தர்மசங்கடமாக இருக்கும்.

அந்தோணி அதற்கெல்லாம் கோபித்துக் கொள்ளமாட்டார். “இல்ல சுரேஷு. நீ ஹீரோவா ட்ரை பண்ணுறே. நான் காமெடியனா ட்ரை பண்ணுறேன். காமெடியனுக்கு எதுக்கு பர்சனாலிட்டி, பாடி, கலரு எல்லாம்” என்று தன்மையாக பதில் சொல்லுவார்.

படவாய்ப்புகளை தேடி படையெடுத்துக் கொண்டிருந்ததால் அடிக்கடி அலுவலகத்துக்கு லீவு போடவேண்டியிருந்தது அந்தோணிக்கு. முக்கியமான நாளொன்றில் அந்தோணி லீவு போட்டதால் கோபமடைந்த மேனேஜர் அந்தோணியின் சீட்டை கிழித்து அனுப்பிவிட்டார். அதற்கப்புறம் அந்தோணி என்ன ஆனார் என்று தெரியவில்லை. எங்கள் தொடர்பில் அவர் இல்லை.

சுரேஷுக்கு நடிகனாகும் ஆசை தானாக வந்துவிடவில்லை. அவருக்கு பத்தொன்பது வயதிருக்கும்போது, யாரோ ஒரு சாலையோர வழிப்போக்கன் ஏற்படுத்திய ஆசை அது. ஒரு தீபாவளி நாளில் சாலையில் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தாராம் சுரேஷ். அப்போது அவருக்கு மூக்குக்கண்ணாடி எல்லாம் இல்லை. தலைமுடி கருகருவென்று இருக்கும்.

சாலையோரம் சென்று கொண்டிருந்த ஒரு தாடிக்காரர் (பார்க்க அக்மார்க் சினிமா இயக்குனர் லுக்) திடீரென பாரதிராஜா போல இரு கைகளையும் விரித்து சுரேஷை சுற்றிச் சுற்றி வந்து கண்களால் ஷாட்ஸ் எடுத்திருக்கிறார்.சாலையில் போன யாரோ ஒருவர் திடீரென தன்னை ஏடாகூடமாக சுற்றி வருவதைக் கண்ட சுரேஷ் திகைப்படைந்திருக்கிறார்.

“சார்! யாரு சார் நீங்க?”

“ஒரு நிமிஷம். அப்டியே லெப்டுலே திரும்பு!”
லெப்டில் லைட்டாக திரும்பி “நீங்க...?”
“லைட்டா ஸ்மைல் பண்ணு!”
லைட்டாக ஸ்மைல்லி... “?????”

“அடுத்த அஜீத் நீதான்டா. அப்படியே ‘அமராவதி’யில் இருந்த தல மாதிரியே இருக்கே!”

“சார் நீங்க யாரு?”

“இந்தா அட்வான்ஸ் பிடி. என்னோட விசிட்டிங் கார்டு இது. நாளைக்கு காலைலே பத்து மணிக்கு ஆபீஸ் வந்து பாருய்யா. என் பேரு இயக்குநர் இளவேனில்!” இருபத்தியொரு ரூபாயும், ஒரு விசிட்டிங் கார்டும் சுரேஷ் கையில் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்டது.மறுநாள் காலை, விசிட்டிங் கார்டில் குறிப்பிட்டிருந்த முகவரிக்கு சுரேஷ் கனவுகளோடு சென்றிருக்கிறார்.

சைதாப்பேட்டை ஜெயராஜ் தியேட்டருக்கு அருகில் ஒரு டொக்கில் இருந்த பத்துக்கு பத்து ரூம் அது. அதன்பெயர் தான் ஆபீஸ். ஒரே ஒரு காக்கி டவுசர் பையன் இருந்திருக்கிறான். அவன் இயக்குநருக்கு எடுபிடியா அல்லது உதவி இயக்குநரா என்று தெரியவில்லை. அங்கிருந்த ஒரே ஒரு சோபாவில் சுரேஷ் உட்கார வைக்கப்பட்டிருக்கிறார்.

சுவற்றில் கேமரா கோணம் பார்ப்பது போல இளவேனிலின் பெரிய படம் ஒன்று கான்வாஸ் செய்யப்பட்டிருந்தது. ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், சரத்குமார், பார்த்திபன், விஜய், அஜீத் என்று தமிழ் சினிமாவின் சகல நடிகர்களோடும் இளவேனில் தனித்தனியாக எடுத்துக்கொண்ட படங்கள் வரிசையாக மாட்டி வைக்கப்பட்டிருந்ததை கண்டதும் சுரேஷுக்கு கொஞ்சம் நம்பிக்கை வந்திருக்கிறது.

பதினொரு மணிக்கு இயக்குநர் வந்திருக்கிறார். சுரேஷைக் கண்டதும் கட்டிப்பிடித்து “நீதான்யா நம்ம ப்ராஜக்ட்ல ஹீரோ!” என்று சொல்லி கைகுலுக்கியிருக்கிறார். சுரேஷின் தனிப்பட்ட தகவல்களை எல்லாம் கேட்டறிந்த இளவேனில், “அடுத்த திங்கட்கிழமை ஷூட்டிங் ஸ்டார்ட் பண்ணிடலாம். காஸ்ட்யூம்ஸுக்கு ஒரு ஃபைவ் தவுசண்ட் அரேஞ்ச் பண்ணிட்டு வந்துடு” என்றிருக்கிறார்.

“சார்! எனக்கு கொடுக்கப்போற சம்பளத்துலேருந்து அந்த பணத்தை கழிச்சிக்க முடியாதா?”

“சம்பளமா? யோவ் முதல் படத்துக்கு ஹீரோவுக்கு சம்பளமெல்லாம் கொடுக்க மாட்டாங்கய்யா. ‘நாளைய தீர்ப்பு’ படத்துக்கு விஜய்க்கு சம்பளமா கொடுத்தாங்க? ரெண்டாவது படத்துலேருந்து நீ லட்ச லட்சமா சம்பாதிக்கலாம்!”‘நாளைய தீர்ப்பு’ விஜய்யின் அப்பா சந்திரசேகரின் சொந்தத் தயாரிப்புதானே என்று நினைத்துக்கொண்டு சுரேஷ் கொஞ்சம் தயங்க, “ஒரு ஹாஃப் அன் அவர் வெயிட் பண்ண முடியுமா?” என்றிருக்கிறார் இயக்குநர்.

இந்த ஹாஃப் அன் அவரில் இயக்குநர் ஏதோ மேஜிக் செய்யப் போகிறார் என்று நம்பி சுரேஷ் சம்மதித்துக் காத்திருந்தார். அந்த ஹாஃப் அன் அவரில் நிறையபேரிடம் இளவேனில் போனில் பேச சுரேஷுக்கு பிரமிப்பு தாங்கமுடியவில்லை.

தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர், விநியோகஸ்தர், பைனான்ஸியர் என்று யார் யாரிடமோ இளவேனில் பேசியிருக்கிறார். அவர் பேசியதை வைத்து பார்க்கும்போது கோடிக்கணக்கான பணம் அந்தப் படத்தில் முதலீடு செய்யப்பட்டிருந்தது சுரேஷுக்கு தெரியவந்தது.

இயக்குநர் ஸ்டைலாக சுரேஷிடம் திரும்பி, “சன் பிக்சர்ஸில் பேசிட்டேன். ரிலீஸில் தொடங்கி சேட்டிலைட் வரைக்கும் மொத்தமா எங்களுக்கே கொடுத்துடுங்கன்னு கெஞ்சுறாங்க...”கொஞ்ச நேரத்தில் ஷார்ட் மிடி அணிந்து ஃபுல் மேக்கப்பில் ஒரு பெண் இயக்குநரைக் காண வந்திருக்கிறார்.

“இவரு பேரு சுரேஷ். இவரு தான் நம்ம படத்துல ஹீரோ. ஸ்க்ரீன் நேம் ஸ்டைலா மாத்தலாம்னு இருக்கேன்” என்று சுரேஷை அந்தப் பெண்ணுக்கு அறிமுகப்படுத்த, அந்தப்பெண் உடனே சுரேஷின் பக்கத்தில் வந்து நெருக்கமாக அமர்ந்து கைகுலுக்கியிருக்கிறாள்.“இந்தப் பொண்ணுதான் நம்ம படத்துலே ஹீரோயின். பேரு வினிஷா!”

வினிஷாவின் வாசனையான பெர்ஃப்யூமை முகர்ந்த சுரேஷ், அப்போதே முடிவெடுத்துவிட்டார், “ஐயாயிரம் என்ன... அஞ்சு லட்சம் செலவு ஆனா கூட இந்தப் படத்துல நாம நடிக்கிறோம்!”எப்படியோ ஐயாயிரத்தை புரட்டி இளவேனிலிடம் தந்திருக்கிறார் சுரேஷ்.

“நேரா ஷூட்டிங் போறோம். பூஜையே இல்லை. சன் பிக்சர்ஸிலே படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் பண்ண ஷெட்யூல் பண்ணியிருக்காங்க. சீக்கிரம் எடுத்துக் கொடுங்கன்னு அவசரப்படுத்துறாங்க. வளசரவாக்கத்துலே ஒரு பங்களாவிலே ஷூட்டிங்” என்று சுரேஷிடம் ஷூட்டிங் ஸ்பாட் அட்ரஸைக் கொடுத்து குறிப்பிட்ட நாளில் வரச் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

காஸ்ட்யூமுக்கு ஏற்கனவே பணம் தந்துவிட்டதால் சுமாரான ஒரு உடை அணிந்து குறிப்பிட்ட நாளன்று குறிப்பிட்ட முகவரிக்கு சுரேஷ் சென்றிக்கிறார். ஒரு படுக்கை அறையில்தான் ஷூட்டிங்காம். இவர் தந்த ஐயாயிரத்துக்கு பர்த்டே காஸ்ட்யூம் மட்டுமே தயாரிப்பு தரப்பில் தரமுடிந்திருக்கிறது.

உடன் நடிக்க வேண்டிய நடிகை ஏற்கனவே கிட்டத்தட்ட அந்த காஸ்ட்யூமுடன் தயாராக இருக்க, “ஆஹா, சிக்க வெச்சிட்டானுங்களே சிங்கத்தை... இது வேற லெவல் படம் போல” என்று நொந்து, பின்னங்கால் பிடரியிலடிக்க தப்பித்து ஓடி வந்திருக்கிறார் சுரேஷ். சன் பிக்சர்ஸெல்லாம் சும்மா டூமாங்கோலி என்று அப்போதுதான் அவருக்குப் புரிந்திருக்கிறது.

அந்த ப்ராஜக்ட் ஃபெய்லியர் ஆகிவிட்டாலும் சுரேஷின் மனசுக்குள் ‘நடிகன் ஆகவேண்டும்’ என்ற விதையை மட்டும் இளவேனில் ஆழமாக விதைத்து விட்டார். பின்னே, அவர் ‘அமராவதி’ அஜீத்குமார் ஆயிற்றே? எல்டாம்ஸ் சாலை குருவிக்கூடு அறைகளில் ‘ஆஸ்கர்’ கனவுகளோடு வாழ்ந்து கொண்டிருந்த எதிர்கால இயக்குநர்களைத் தேடித்தேடி சந்திப்பார் சுரேஷ்.

“எனக்காக நீங்க கதை பண்ணுங்க. உங்களுக்காக நான் தயாரிப்பாளர் தேடுறேன்” என்ற அக்ரிமென்டோடு அடிக்கடி லீவு போட்டு சுற்றிக் கொண்டிருப்பார். சுரேஷின் அப்பா ஒரு பிரபலமான பழைய இயக்குநருக்கு கார் டிரைவராக இருந்தவர். எனவே சில சினிமா புள்ளிகள் அவர் மூலமாக ஏற்கனவே சுரேஷுக்கு அறிமுகமானவர்களாக இருந்தார்கள்.

சிவாஜி, எம்.ஜி.ஆர், கமல், ரஜினி போன்றவர்களின் புகழ்பெற்ற கெட்டப்புகளில் சுரேஷ் போட்டோ எடுத்து வைத்திருந்தார். அவற்றை ஒரு பெரிய ஆல்பமாக இரண்டு, மூன்று காப்பி எடுத்து பாதுகாத்தார். அவர் வசம் எப்போதும் ஒரு ஆல்பம் இருக்கும். சினிமா சம்பந்தப்பட்டவர்களாக இல்லாமல் இருந்தாலும் கூட நேரில் யாரைப் பார்த்தாலும் ஆல்பத்தை விரித்துக் காட்ட ஆரம்பித்து விடுவார்.

“கட்டபொம்மன் கெட்டப்பு இது. இது ஆக்‌ஷன் போஸ். இது ஒரு சென்டிமென்ட் சீன்” என்று ஒவ்வொரு போட்டோவாக விவரித்து எல்லோருடைய கழுத்தையும் அறுப்பார். கழுத்தில் ரத்தம் சொட்ட சொட்ட அவனவன் தலைதெறித்து ஓடுவான்.

எனக்குத் தெரிந்து சுமார் ஐந்தாண்டுகளுக்கும் மேலாக வாய்ப்பு தேடி அலைந்துகொண்டிருந்தார் சுரேஷ். எனக்கு பணிமாற்றம் ஏற்பட்ட பின்னர் சுரேஷோடு தொடர்பு கிட்டத்தட்ட அறுந்துவிட்டது. எப்போதாவது ஏதாவது படம் பார்க்கும்போது அதில் சுரேஷ் துணை கதாபாத்திரத்திலாவது வருகிறாரா என்று தேடுவேன்.

ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு நாள் இரவு ஏதோ ஒரு தொலைக்காட்சியில் காமெடி நிகழ்ச்சி ஒன்றைப் பார்த்துக் கொண்டிருந்தேன். வடிவேலுவோடு, ஜிப்பா போட்ட, காந்தி கண்ணாடி அணிந்த, கொஞ்சம் வழுக்கைத்தலை ஆசாமி ஒருவர் சிரிக்க வைக்க முயற்சித்துக் கொண்டிருந்தார். ‘எங்கோ பார்த்த முகமாக இருக்கிறதே?’ என்று யோசித்து, யோசித்து மண்டை காய்ந்தேன்.

கொஞ்சம் குளோசப்பில் அவர் முகத்தைக் காட்டும்போது லைட்டாக இருந்த தெத்துப்பல்லை பார்த்ததும் தான் சடாரென புரிந்தது. “அட நம்ப அந்தோணி!”.எப்படியோ அந்தோணியின் காமெடியன் கனவு நனவாகிவிட்டது என்றதும் எனக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. அடுத்தடுத்து சில படங்களில் குறிப்பிடத்தக்க வேடங்களில் அந்தோணியைக் காணமுடிந்தது.

அவரது தொடர்பு எண்ணோ, முகவரியோ இல்லாததால் அவரை தொடர்புகொள்ளும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அவர் என்ன பெயரில் படங்களில் நடிக்கிறார் என்றும் தெரியவில்லை. திரையுலக நண்பர்கள் சிலரிடம் ‘அந்தோணி’ என்று பெயர் சொல்லி விசாரித்தபோது அவர்களுக்கும் தெரியவில்லை. ஒருவேளை பெயரை மாற்றிக் கொண்டிருக்கலாம்.

இரண்டாண்டுகளுக்கு முன்பாக என் கல்யாணத்துக்காக நண்பர்களுக்கு தேடித்தேடி அழைப்பிதழ் கொடுத்துக் கொண்டிருந்தேன். பல பேர் முகவரி மாறியிருந்ததாலும், தொடர்பு எண் இல்லாததாலும் ரொம்பவும் சிரமப்பட்டு அவர்களைக் கண்டறிந்து சந்தித்தேன். சுரேஷை எப்படியாவது கண்டுபிடித்து அவருக்கு அழைப்பிதழ் தந்துவிட முயற்சித்தேன். ‘அமராவதி’ அஜீத், நம்ம கல்யாணத்துக்கு வந்தால், அது நமக்கும் மாமியார் வீட்டுப் பக்கம் கவுரவத்தை உசத்துமில்லையா?

என்னோடும், சுரேஷோடும் பணிபுரிந்த ஒரு நண்பர் மூலமாக அவர் எங்கிருக்கிறார் என்பதைக் கண்டறிய முடிந்தது. பல சிரமங்களுக்குப் பின்னர் சுரேஷை தி.நகரில் உள்ள ஒரு பிரபல ஜவுளிக்கடையில் சந்தித்தேன். அடையாளம் தெரியாமல் மாறியிருந்தார். முன்பகுதி முழுக்க வழுக்கை. பாதியாக இளைத்திருந்தார். கொஞ்சம் கறுத்தும் இருந்தார். டக்-இன் செய்து டை அணிந்திருந்தார்.

“சுரேஷு, எப்படி இருக்கீங்க?”

“வாய்யா. எப்படி இருக்கே? என்னை எப்படி கண்டுபிடிச்சே? அதிருக்கட்டும், என்ன விசேஷம்?” எதிராளியை பேசவே விடாமல் கேள்வி மேல் கேள்வி கேட்பது சுரேஷின் ஸ்டைல்.விசேஷத்தை சொன்னவுடன், “என்ன கொடுமை சார் இது?” என்று நையாண்டி செய்தார். சில பல நல விசாரிப்புகளுக்குப் பின்னர், “சுரேஷ், உங்களுக்கு கல்யாணம் ஆயிடிச்சா?”

“ப்ச்.. இல்லை.. வயசு முப்பத்தி மூணை கிராஸ் ஆயிடிச்சி. இந்த வருஷம் தங்கச்சிக்கு முடிச்சிட்டு அப்புறம் தான் பார்க்கணும்!”“சினிமா?”“மசுரே போச்சி. அப்புறம் என்ன சினிமா?” முன்வழுக்கையைத் தடவிக்கொண்டே சொன்னார்.

கண் கலங்கினார். அவர் என்னிடம் சொன்ன கடைசி வாக்கியமே எல்லாவற்றையும் புரியவைத்ததால் விரிவாக எதுவும் பேச இயலா மனநிலையில் விடைபெற்றேன். அதுதான் கடைசியாக சுரேஷை நான் பார்த்தது. தி.நகரில் எப்போதாவது பட்டுப்புடவை எடுக்க நீங்கள் சென்றால் உங்கள் முன் புன்னகையோடு புடவைகளை விரித்துப் போடுபவர் ‘அமராவதி அஜீத்’ சுரேஷாகக் கூட இருக்கலாம்.