ஒவ்வொரு மலையாள நடிகையின் லட்சியமும் தமிழில் நடிப்பதுதான்!



தூர்தர்ஷனில் செய்தி வாசிப்பாளராக இருந்து, சின்னத்திரை சீரியல்களில் நடித்து, சினிமாவில் ஹீரோவானவர் கிருஷ்ணகுமார். தமிழ், மலையாளத்தில் 130 படங்களில் நடித்துள்ளார். சன் டி.வியில் ஒளிபரப்பான ‘தங்கம்’ தொடரில் ரம்யா கிருஷ்ணனுக்கு ேஜாடியாக நடித்து தமிழ் நாட்டு மக்களுக்கு நன்கு அறிமுகமானவர் கே.கே என்கிற கிருஷ்ணகுமார்.

அவரது மகள் அஹானா கிருஷ்ணா இப்போது நிவின் பாலி ஜோடியாக மலையாளத்தில் நடிக்க இருக்கிறார். ‘பிரேமம்’ டீமுடன் இணைந்து அல்டாப் இயக்கும் இந்த படத்தில் நடிப்பதன் மூலம் மலையாள மீடியாக்களில் ஓவர் நைட்டில் இடம் பிடித்திருக்கிறார் அஹானா...

சென்னை வைஷ்ணவா கல்லூரியில் விஸ்காம் படித்த அஹானாவின் நாவில் தமிழ் தாண்டவமாடுகிறது. டிகிரி வாங்கிய கையோடு நிவின் பாலிக்கு ஜோடியாக நடிக்க கிளம்பியவரைப் பிடித்தோம்....“நிவின் பாலி ஹீரோயினாகி ஒரே நாளில் மலையாள மீடியாக்களில் இடம்பிடித்துவிட்டீர்களே..?”“எனக்குமே அது ஆச்சர்யம்தான். விஸ்காம் படிச்சது மீடியா மேல இருந்த ஆர்வத்தில்தான்.

ஆனால் சினிமாவில் நடிக்கும் எண்ணமெல்லாம் இல்லை. இடையில் ‘ஞான் ஸ்டீவ் லோப்’ என்ற  படம் வந்தது. அப்போது விஸ்காமில் சினிமா ஒரு சப்ஜெக்டாக இருந்தால் படிப்புக்கு உதவியாக இருக்குமே என்று நடிச்சேன். அதன் பிறகு மீண்டும் படிப்பில் பிசியாகி விட்டேன். படித்து முடித்த கையோடு இந்த வாய்ப்பு... எல்லாம் கடவுள் செயல்.”“குடும்பம் பற்றி...?”

“அப்பா கேகே. தமிழ்நாட்டு மக்களும், கேரள மக்களும் அறிந்த நடிகர். அவர் மகள் என்பதற்காக நடிக்க வரவில்லை. அவரும் என்னை நடிப்பு பக்கம் திருப்பவில்லை. இது நானே தேர்வு செய்தது.

நடிக்கப் போகிறேன் என்றதும் அவர் உன் விருப்பம், ஆனால் சாப்பாடு சப்ளை பண்ற கேன்டீன் பாயிலிருந்து தயாரிப்பாளர் வரைக்கும் மரியாதை தரணும், நேரத்துக்கு படிப்பிடிப்புக்கு போகணும், கேரக்டரை புரிஞ்சு நடிக்கணும்னு அட்வைஸ்தான் பண்ணினார். நாங்க நான்கு பேர் சகோதரிகள். நான்தான் மூத்தவள். எங்களை வளர்க்கவே அம்மாவுக்கு நேரம் சரியாக இருக்கிறது. நான் நடிப்பதில் அம்மாவுக்கும் சந்தோஷம்தான்.”

“நான்கு சகோதரிகள் என்றால் லலிதா பத்மினி, ராகினி சகோதரிகள் மாதிரி வர வாய்ப்பிருக்கிறதா?”“கேட்கிறதுக்கே நல்லாத்தான் இருக்கு. தங்கைகளுக்கும் சினிமால ஆர்வம் இருக்கு. ஆனா அவுங்க சின்ன புள்ளைங்க. வளர்ந்த பிறகும் இதே ஆர்வம் இருந்தால் அஹானா சிஸ்டர்சுக்கும் வாய்ப்பிருக்கு.”“உங்க பிளஸ், மைனஸ் என்ன?”

“தன்னம்பிக்கை பிளஸ். இதுவரை எதுக்காகவும் தயங்கினதில்ல, பயந்ததில்ல. மைனஸ் கொஞ்சம் முன்கோபக்காரி. பேசக்கூடாதுன்னு தெரியும், ஆனா பேசிடுவேன். தமிழ்நாட்டுல வாயாடின்னு சொல்வாங்களே அதுமாதிரி. ஆனா எல்லாமே கொஞ்ச நேரத்துக்குத்தான். அஹானாவோட அகங்காரம் சீக்கிரமே தணிஞ்சிடும்.”“தமிழ்ப் படத்தில் நடிக்கும் ஆர்வம் இருக்கா?”

“மலையாளத்தில் நடிக்கிற ஒவ்ெவாரு நடிகையின் லட்சியமே தமிழ்ல நடிப்பதுதானே. எனக்கு மட்டும் இருக்காதா. எனக்கு பிடிச்ச ஹீரோக்கள் எல்லாமே இங்கதான் இருக்காங்க. இயக்குனர்களும் இங்கேதான் இருக்காங்க. சென்னையில் 3 வருஷம் இருந்தேன். தினமும் தமிழ் சினிமா பார்த்து சினிமாவையும், தமிழையும் கத்துக்கிட்டேன். இன்னும் கொஞ்சநாள் இருந்திருந்தா ரசிகர் மன்றமே ஆரம்பிச்சிருப்பேன்.”
“உங்கள் நடிப்பு நயன்தாரா ஸ்டைலா, ரேவதி ஸ்டைலா?”

“இரண்டும் கலந்த நித்யா மேனன் ஸ்டைல். சேச்சியை எனக்கு ரொம்ப பிடிக்கும். செலக்டிவா படம் பண்ணுவாங்க. பிரமாதமாக நடிக்கவும் செய்வாங்க. அவுங்க நடிச்ச படம் ஓடுதோ இல்லையோ படம் கட்டாயம் நல்லா இருக்கும்.”சீக்கிரம் தமிழுக்கும் வாங்க அஹானா... வீ ஆர் வெயிட்டிங்!

- மீரான்