வயசு அறுவத்தெட்டு, மனசு பதினெட்டு!



ஊடு கட்டி அடிக்கிறார் அறிமுக இயக்குநர்

ஓர் இயக்குநருக்கு முதல் படம் இயக்க எத்தனை வயதில் வாய்ப்பு கிடைக்கும்?
முன்பெல்லாம் முப்பது பிளஸ். இப்போது இருபது பிளஸ்ஸில் இயக்குநராகி விடுகிறார்கள். ‘மாயா’ படத்தை இயக்கிய அஸ்வின் சரவணனுக்கெல்லாம் வயசு இருபத்து நாலோ என்னவோதான்.

அவ்வளவு ஏன்? உலகிலேயே மிகக்குறைந்த வயதில் சினிமா இயக்குநர் ஆனதாக கின்னஸ் புத்தகம் பதிவு செய்திருக்கும் கிஷன் ஸ்ரீகாந்த்கூட (படம் ‘சாதனை, c/o ப்ளாட்ஃபார்ம்’, 2006ல் இப்படத்தை இயக்கியபோது அவருக்கு வயது பத்து) பெங்களூர்காரர்தான்.

அப்படியிருக்க, முதன்முதலாக படம் இயக்கும் சந்திர கண்ணையனுக்கு வயது இப்போது அறுபத்தெட்டு. ‘மேற்கு முகப்பேர் ஸ்ரீ கனக துர்கா’ என்கிற படத்தை இயக்கியிருக்கும் இவரை ‘வண்ணத்திரை’க்காக சந்தித்தோம்.“பொதுவா உங்க பத்திரிகையில் இளமையான நடிகைகளைத் தான் பேட்டியெடுப்பீங்க. ஒரு மாற்றத்துக்காக என்னை சந்திச்சி பேசுறீங்கன்னு நெனைக்கிறேன். படம் வெளியாகிற நேரத்தில் நீங்க போடுற என் பேட்டியைப் பார்த்துட்டு கொஞ்சம் பேர் கூடுதலா தியேட்டருக்கு வருவாங்கன்னு நம்பறேன்” என்று ஆரம்பித்தார்.

“அறுபத்தெட்டு வயசுலதான் முதல் படம் இயக்குற வாய்ப்பு உங்களுக்கு கிடைச்சிருக்கு. எப்படி ஃபீல் பண்ணுறீங்க?”“இதென்ன கேள்வி! சந்தோஷமாதான் ஃபீல் பண்ணுறேன். நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் அரியலூர் பக்கத்துலே ஒரு சின்ன கிராமம். சினிமான்னா உயிரு. பார்க்க சாடையிலே ஜெமினி கணேசன் கணக்கா அழகா இருப்பேன். கூட்டாளிங்கல்லாம் உசுப்பி விட்டதாலே ஹீரோவாயிடலாம்னு மெட்ராஸுக்கு வந்துட்டேன். இங்கே வந்து பார்த்தா தெருவுக்கு நாலு ஜெமினி கணேசன் இருக்காங்க.

ஹீரோவாக முடியாதுன்னு தெரிஞ்சது. ஆனா, சினிமாவில் ஏதோ வேலை பார்க்கணும்னு ஆசைப்பட்டேன். எம்.ஜி.ஆரையே டைரக்ட் பண்ண யோகானந்த், பிரபல இயக்குநர் பி.மாதவன் போன்ற ஜாம்பவான்களிடம் உதவி இயக்குநரா தொழில் கத்துக்கிட்டேன்.தனியா படம் இயக்குற முயற்சியில் இருந்தப்போதான் எனக்கு கல்யாணம் ஆச்சி.

அப்போவெல்லாம் உதவி இயக்குநர்களுக்கு சம்பாத்தியம் ரொம்ப கம்மி. குடும்பத்தை காப்பாத்தணுமே என்கிற கட்டாயத்துலே நிரந்தர வருமானத்துக்கு வழி பார்த்துட்டு, சினிமா எடுக்கலாம்னு யோசிச்சிக்கிட்டிருந்தேன். அந்த வருஷம் 1975. அப்போதான் கரெக்டா தூர்தர்ஷன் தன்னோட ஒளிபரப்பை சென்னையில் தொடங்கிச்சி. சினிமாவில் வேலை பார்த்த அனுபவத்தை வெச்சி புரோகிராம் ஆபீஸரா வேலைக்கு சேர்ந்தேன்.

டிவி வேலைகளில் பிஸியாகிட்டதாலே சினிமா இயக்குற கனவு தள்ளிக்கிட்டே போச்சி. ஆனா, ஓய்வு நேரங்களில் உட்கார்ந்து சினிமா பற்றியேதான் யோசிப்பேன். நான் யோசிச்சதையெல்லாம் ‘ஒரு திரைப்படம் உருவாகிறது’ன்னு நூலா எழுதினேன். சினிமாவுக்கு வர நினைக்கிறவர்களுக்கு கைடா அந்த நூல் உதவிச்சி. தமிழக அரசும் சிறந்த நூலுக்கான விருது கொடுத்து கவுரவம் செஞ்சாங்க. இப்போகூட கொஞ்ச நாள் முன்னாடி ‘டிஜிட்டல் ஃபிலிம் மேக்கிங்’னு ஒரு புக்கு எழுதியிருக்கேன்.

ரிட்டயர்மென்ட் ஆனபிறகு மறுபடியும் நாற்பது வருஷத்துக்கு முன்னாடி விட்ட இடத்துலேருந்து என் வாழ்க்கையை வாழ ஆசைப்பட்டேன். உடம்புக்கு வயசு அறுபத்தெட்டுன்னாலும் என் மனசுக்கு பதினெட்டு வயசுதாங்கிறது எங்க வீட்டுலே இருக்குறவங்களுக்கு தெரியும்.

காலையில் அஞ்சு மணிக்கு எழுந்தேன்னா பரபரன்னு ஏதாவது செஞ்சிக்கிட்டே இருப்பேன். எல்லாரும் என்கரேஜ் பண்ணதால் படம் இயக்கியிருக்கேன்.”
“சார், நீங்க ஃபீல்டுல இருந்தப்போ அம்மன் படங்கள் டிரெண்டிங்கில் இருந்திருக்கலாம். இப்போ தமிழ் சினிமாவில் பேய்ப்படம்தான் டிரெண்டு. தெரியுமா?”

“நான் எப்பவுமே அப்டேட் ஆயிக்கிட்டே இருக்கேன் தம்பி. ‘மேற்கு முகப்பேர்  கனகதுர்கா’ என்பது அம்மனும், பேயும் கலந்த சினிமா. ரெண்டு ஹீரோ, ரெண்டு ஹீரோயின்.சின்ன வயசுலேயே ஹீரோவுக்கும், ஹீரோயினுக்கும் பெரியவங்க பரிசம் போட்டுடறாங்க. அவங்க மனசளவில் கணவன் - மனைவியாவே வளர்றாங்க. ஆனா, கல்யாணம் பண்ணிக்க வேண்டிய வயசுலதான் தெரியும், ரெண்டு பேருக்கும் ஜாதகரீதியா ஒத்துவராது, தோஷம் இருக்குங்கிறது. தெரிஞ்சே எப்படி கல்யாணம் பண்ணி வெக்கிறதுன்னு பெரியவங்க தயங்குறாங்க.

எதிர்ப்பை மீறி இவங்க கல்யாணம் பண்ணிக்கிறாங்க. இதனாலே ஹீரோவுக்கு உடல்நலம் பாதிக்குது. ஹீரோயின், அம்மனுக்கு விரதமிருந்து ஹீரோவைக் காப்பாத்துறாங்க என்பது ஒரு கதை.ஹனிமூனுக்கு ஜாலியா போகிற ஒரு தம்பதியை ‘பலான’ விஷயம் மட்டும் நடக்க விடாம ஒரு பேய் தடுத்துக்கிட்டே இருக்கு. பாதிக்கப்பட்ட இந்த தம்பதிகள் அம்மன்கிட்டே முறையிட்டு பேயோட தொந்தரவிலிருந்து தப்பிக்கிறாங்க என்பது இன்னொரு கதை.

ரெண்டு கதையும் கிளைமேக்ஸில் ஜாயின் ஆகிறப்போ தியேட்டருலே பக்தி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். ரசிகர்கள் ருத்ரதாண்டவம் ஆடுவாங்க. எழுதி வெச்சிக்குங்க. இது நடக்கத்தான் போவுது. கதை எப்படி? சூப்பர்தானே? நான் ஜெயிச்சிடுவேனில்லே?”
“அதிருக்கட்டும் சார். முற்றிலும் புதுமுகங்களை வெச்சி வேலை வாங்கியிருக்கீங்களே?”

“மகி, சரவணன் ரெண்டு பேரும் ஹீரோஸ். இதுலே சரவணன், கூத்துப்பட்டறை தயாரிப்பு. ஹீரோயின்ஸா திவ்யா நாகேஷ், ஜான்விகா நடிச்சிருக்காங்க. இவங்களுக்கு கேமரா எக்ஸ்பீரியன்ஸ் ஏற்கனவே இருந்ததாலே ஈஸியா வேலை வாங்கிட்டேன். பெரிய நடிகர்களை வெச்சி பிரும்மாண்டமா எடுக்கணும்னு ஆசைதான். பட்ஜெட்டில் அதுக்கு இடமில்லாததாலே, என் கதைக்கு செட்டாகிற புதுமுகங்களை வெச்சி தேத்திட்டேன். ஆஹா ஓஹோன்னு சொல்ல மாட்டேன். ஆனா, ஆவரேஜா பண்ணி சமாளிச்சிட்டாங்க.”

“உங்க முதல் படத்துக்கே தேவா சார் மியூசிக் பண்ணியிருக்காரே?”
“என் படத்தோட பெரிய ஸ்டாரே அவர்தான். தேவா, நாற்பது வருஷத்துக்கு முன்னாடியே எனக்கு நெருங்கிய நண்பர். அப்போ அவரு, சந்திரபோஸோட சேர்ந்து நிறைய கச்சேரி, டிராமான்னு கலக்கிட்டிருந்தாரு. அப்புறமாதான் அவரும் தூர்தர்ஷனில் ஃப்ளோர் இன்சார்ஜா வேலைக்கு சேர்ந்தார்.

என்னைப் பொறுத்தவரைக்கும் பக்திப்பாடல்களுக்கு மியூசிக் போடுறதில் அவரு கிங். என் படம் அவரோட ஹோம் கிரவுண்டுங்கிறதாலே ஃபோர், சிக்ஸுன்னு புகுந்து விளையாடியிருக்காரு. மொத்தம் அஞ்சு பாட்டு. ‘நாகம்மா நாகம்மா அஞ்சுதலை நாகம்மா’ பாட்டுதான் இனிமே நம்ம ஊர் திருவிழாக்களில் ஒலிக்கப்படப் போவுது. செம அதிரிபுதிரியா வந்திருக்கு.”

“இந்த வயசுலே உங்களை இயக்குநராக்கிய தயாரிப்பாளரின் தைரியத்துக்கு சல்யூட் வைக்கணும் சார்!”“உண்மைதான் தம்பி. நான் இந்தப் படத்தை டைரக்ட் மட்டும்தான் பண்ணுறேன். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி தயாரிப்பது ஜெயபால் சுவாமி. மத்திய அரசு வேலையில் இருந்தவர்.

ஆன்மீகம் மேலே பெரிய ஈடுபாடு. சென்னை மேற்கு முகப்பேரில்  கனகதுர்கா கோயிலை அவர்தான் நிர்மாணித்தார். பத்தடி உயரத்துலே இருக்கிற அம்பாள் சிலைதான் அந்தக் கோயிலோட தனிச்சிறப்பு. அந்த அம்பாளின் புகழ் பரப்பக்கூடிய படமாதான் இது வந்திருக்கு.”

- எஸ்ஸார்