அருண்விஜய்க்கு தோள் கொடுக்கும் அஜீத் ரசிகர்கள்!



‘என்னை அறிந்தால்’ ஹிட்டுக்குப் பிறகு தல ரசிகர்கள், அருண் விஜய்க்கும் ரசிகர்களாக மாறியிருக்கிறார்கள். எனவேதான் அருண்விஜய் நடிக்கும் படங்களுக்கு இப்போது அஜீத் ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

அஜீத்தின் தீவிர ரசிகரான சேலம் சிவா ஒரு படி மேலாக போய், அருண் விஜய், கார்த்திகா நடித்திருக்கும் ‘வா டீல்’ படத்தின் தமிழ்நாட்டு உரிமையையே பெரும் தொகை கொடுத்து வாங்கியிருக்கிறார்.

சேலம் மாவட்ட அஜீத் ரசிகர் மன்ற மாவட்டச் செயலாளர் பொறுப்பில் நீண்டகாலமாக இருந்து பல்வேறு நற்பணிகளை செய்திருப்பவர் இவர். ஒரு கட்டத்தில் ரசிகர் மன்றங்களை அஜீத் கலைத்துவிட்டாலும், இன்றுவரை அவரது பிறந்தநாளை விமரிசையாக சேலத்தில் கொண்டாட சேலம் சிவா தவறியதே இல்லை. அன்று பத்திரிகைகளில் பிறந்தநாள் வாழ்த்து விளம்பரம், பேனர்கள், போஸ்டர், நற்பணி வேலைகள் என்று சிவா தலைமையில் ஏகத்துக்கும் சேலம் அமர்க்களப்படும்.

அந்த ஏரியாவின் முன்னணி வினியோகஸ்தராக இருக்கும் சிவா, ‘ஆரம்பம்’, ‘வேதாளம்’, ‘என்னை அறிந்தால்’ என்று தல படங்களாக வினியோகித்து அதகளப்படுத்தியவர். இருந்தும் அவருக்கு தளபதி மீது அலர்ஜி எல்லாம் இல்லை. ‘கத்தி’, ‘தெறி’ படங்களையும் வினியோகித்திருக்கிறார். ‘7ஆம் அறிவு’, ‘அஞ்சான்’, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘எதிர்நீச்சல்’, ‘ரஜினிமுருகன்’ என்று சிவா வினியோகித்த படங்களின் பட்டியல் இன்னும் நீளம்.

ஆனால், அருண் விஜய் படத்தை அஜீத் ரசிகரான இவர் தமிழகம் முழுக்க வெளியிடுகிறார் என்கிற தகவல் பரவியதும் அஜீத் ரசிகர்கள் பரபரப்படைந்திருக்கிறார்கள். ட்விட்டர், பேஸ்புக், வாட்ஸப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ‘தல’ படத்தைப் போலவே தலயின் ஆசி பெற்ற அருண்விஜய் படத்தின் ரிலீஸையும் தெறிக்கவிட வேண்டும் என்று பிரச்சாரத்தைத் தொடங்கியிருக்கிறார்கள்.

மேலும், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களில் இருக்கும் தியேட்டர் உரிமையாளர்களிடம், ‘வா டீல்’ படத்தை திரையிட்டே ஆகவேண்டும் என்று வற்புறுத்தவும் தொடங்கியிருக்கிறார்கள்.

- எஸ்