காஷ்மோரான்னா என்ன?



‘ஜோக்கர்’ படத்துக்கு கிடைத்த உற்சாக வரவேற்பில் குஷியாக இருக்கிறார்கள் தயாரிப்பாளர்களான ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு ஆகிய இருவரும். இதே பிக்கப்பில் தங்களின் அடுத்த தயாரிப்பான கார்த்தி நடிக்கும் ‘காஷ்மோரா’ படத்தின் புரமோஷன் வேலைகளை ஜரூராக தொடங்கியிருக்கின்றனர்.

நயன்தாரா, ஸ்ரீதேவி ஆகியோர் ஹீரோயின்களாக நடித்திருக்கும் இந்தப் படத்தில் முக்கியமான வேடம் ஒன்றில் விவேக் நடித்திருக்கிறார். படத்தை இயக்குபவர் ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தின் டைரக்டர் கோகுல். ‘வண்ணத்திரை’யிடம் பிஸியான பணிகளுக்கு இடையே பேசினார்.“படத்தின் டைட்டில் சமஸ்கிருதமா?”

“அது படம் பார்த்தாதான் உங்களுக்கு தெரியும். இப்பவே டைட்டிலுக்கு என்ன அர்த்தம்னு கேட்காதீங்க. ஹாரர், காமெடி, ஆக்‌ஷன், பீரியட்டுன்னு ஏராளமான களங்களில் பயணிக்கும் படம் இது. அனேகமாக தமிழ் சினிமாவில் இத்தகைய வகைப்படமா இதுதான் பர்ஸ்ட் வருது. ‘காஷ்மோரா’வுக்கு முன்னுதாரணமே கிடையாது.”

“கார்த்தியோட ஸ்பெஷல் அவரோட அழகான ஹேர்ஸ்டைல். அவருக்கு மொட்டையடிக்க உங்களுக்கு எப்படி மனசு வந்தது?”“ஒண்ணுக்கு ஒண்ணு தொடர்பில்லாத மூணு வித்தியாசமான கேரக்டரை கார்த்தி செஞ்சிருக்காரு. இந்தப் படத்தோட கெட்டப் அவரை இந்திய அளவில் பேசவைக்கும்.

சுமார் ஐம்பது விதமான தோற்றங்களை, ஏழு மாசத்துக்கும் மேலாக பரிசீலனை பண்ணி, கடைசியா இந்த மூணு கெட்டப்பை ஃபைனலைஸ் செய்திருக்கோம். இதை திரைக்கு கொண்டுவர கார்த்தி எடுத்துக்கொண்ட முயற்சியும், அர்ப்பணிப்பும் பிரமிக்கத்தக்கது.”
“முழுக்க கிராஃபிக்ஸா?”

“எது கிராஃபிக்ஸ், எது செட்டிங்குன்னு படம் பார்க்குறவங்களாலே ஈஸியா சொல்லிட முடியாது. படத்தில் இடம்பெறும் பீரியட் காட்சிகளுக்காக சென்னை புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் மிகப்பிரும்மாண்டமான அரங்குகளை அமைத்து படமாக்கி இருக்கோம்.

‘பென்ஹர்’ மாதிரி ஹாலிவுட் படங்களுக்கு நிகரான பிரும்மாண்டத்தை நீங்க திரையில் உணரலாம். படத்தோட பட்ஜெட்டில் மெஜாரிட்டி போர்ஷன், இந்த அரங்க செலவுகளுக்கும், செட் பிராப்பர்ட்டீஸ் ரெடி பண்ணுறதுக்குமே சரியா போயிடிச்சி.”

“எப்போ ரிலீஸ்?”
“இந்த தீபாவளிக்கு ‘காஷ்மோரா’தான் சரவெடியா வெடிச்சித் தள்ளப் போவுது. ஒளிப்பதிவாளர் ஓம்பிரகாஷ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ரெண்டு பேரும் இல்லைன்னா ‘காஷ்மோரா’ என்கிற எங்கள் கனவு நனவாகியிருக்காது. நானே பேசிக்கிட்டிருக்கேன். படத்தை பார்த்துட்டு நீங்களும் பேசுங்க. உங்க அத்தனை பேரின் விமர்சனத்துக்காகவும் நாங்க ஆவலா வெயிட் பண்ணிக்கிட்டிருப்போம்.”

- எஸ்