இட்லி வடைக்கு ஆசைப்படும் இந்தி ஹீரோ!



இருநூறு படங்களுக்கு மேல் நடித்திருக்கும் ஜாக்கி ஷெராஃப், இந்தியில் மிகப்பெரிய நடிகர். அவர் நடித்த ‘ஹீரோ’, அந்தக்கால இளைஞர்களை இந்தியாவெங்கும் மயக்கிய திரைப்படம். ஜாக்கியின் மகன், டைகர் ஷெராஃப் இப்போது இந்தியில் இளம் ஹீரோவாக கலக்கிக் கொண்டிருக்கிறார்.

தயாரிப்பாளர் சி.வி.குமார் இயக்குநராக அறிமுகமாகும் ‘மாயவன்’ படத்தில் நடிப்பதற்காக சென்னைக்கு வந்து, அவரது போர்ஷனை முடித்துவிட்டு மும்பைக்கு ஃபிளைட் ஏறும்போது ஜாக்கியை விமானநிலையத்திலேயே பிடித்தோம்.

“அடிக்கடி சென்னை பக்கமா வர்றீங்க போலிருக்கே?”
“தமிழில் ‘ஆரண்ய காண்டம்’, ‘கோச்சடையான்’ படங்களுக்குப் பிறகு ‘மாயவன்’ படத்தில் மிலிட்டரி மேஜர் ரோல் செய்கிறேன். ‘ஆரண்ய காண்டம்’ படத்தை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா சிபாரிசு செய்ததால், கதையைக்கூட கேட்காமல் ஒப்புக் கொண்டேன்.

 பதினைந்து நாட்கள் என் சம்பந்தமான காட்சிகள் படம் பிடிக்கப்பட்டிருக்கிறது. வித்தியாசமான கதை என்பதாகத்தான் தோன்றுகிறது. தொடர்ச்சியாக நான் தமிழில் காலூன்ற இந்தப் படம் எனக்கு மிகப்பெரிய அளவில் கைகொடுக்கும்.”

“சென்னையில் உங்களுக்கு என்ன பிடிக்கும்?”
“முப்பத்தைந்து வருடமாக சினிமாவில் இருக்கிறேன். பதினோரு மொழிப் படங்களில் நடித்திருக்கிறேன். எனவே இந்தியாவில் நான் போகாத ஊரே இல்லை. அந்த உரிமையில் சொல்கிறேன்.

சென்னை எனக்கு மிகவும் பிடித்த ஊர். உங்கள் ஊர் இட்லியும், வடையும் என்ன டேஸ்ட் தெரியுமா? கொத்தமல்லி சட்னியைத் தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் ஆஹா. அடிப்படையில் நான் ஒரு சமையல்காரன். புதிது புதிதாக ஏதாவது சமைத்துக் கொண்டே இருப்பேன். உங்கள் இட்லி, கொத்தமல்லிச் சட்னிக்கு இணையான சுவை ரொம்ப ரொம்ப அரிதானது.”“அறுபது வயதை எட்டப் போகிறீர்கள். ஆனால், உடற்கட்டு அப்படியே ஜம்மென்று இருக்கிறதே?”

“உடற்பயிற்சியும், மனப்பயிற்சியும்தான் காரணம். எவ்வளவு வேலை இருந்தாலும், உடற்பயிற்சிக்கான நேரத்தை மட்டும் குறைத்துக் கொள்ளவே மாட்டேன். தேவையில்லாத விஷயங்களை மனதில் போட்டுக் குழப்பிக் கொள்ளக்கூடாது. நம் உடலையும், மனதையும் இளமையாக வைத்துக்கொள்ள இதைத்தவிர வேறு மார்க்கம் இருப்பதாகத் தெரியவில்லை.”

“தமிழ்நாட்டை உங்கள் மனசுக்கு நெருக்கமாக உணர்கிறீர்கள்.படப்பிடிப்புக்காக அடிக்கடி இங்கே வந்திருக்கிறீர்கள். இன்னமும் தமிழ் பேச வரவில்லையே?”“உண்மைதான். தமிழ்ப் படங்களில் நடிக்கும்போது எனக்கே சங்கடமாக இருக்கிறது.

 உதவி இயக்குநரை வசனம் பேசச் சொல்லி பிராம்ப்டிங் முறையில்தான் நடிக்கிறேன். ஸ்க்ரீனில் பார்க்கும்போது எந்த வேறுபாடும் தெரியாது. ஆனால், நிறைய படங்களில் வாய்ப்பு கிடைத்தால் தமிழ் பேச கற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.”

- தேவராஜ்