‘அந்த’ மாதிரி கதை வேணாம்! பிரகாஷ் அலறல்



முன்பு வெள்ளிக்கிழமை ஹீரோ என்று ஜெய்சங்கரை சொல்வார்கள். வாராவாரம் வெள்ளிக்கிழமை அவர் நடிப்பில் ஒரு படம் வெளியாகுமாம். இப்போது அதுபோல பேர் எடுத்துவிடுவார் போலிருக்கிறது ஜி.வி.பிரகாஷ். ஏ.ஆர்.ரகுமான் இவருக்கு தாய்மாமன். பிரபலமான இசையமைப்பாளராக பெயரெடுத்து விட்டார். இருந்தாலும், இப்போது அது எல்லாவற்றையும் விட நடிகராகத்தான் அதிகம் அறியப்படுகிறார்.

ஜி.வி.பிரகாஷிடம் யதேச்சையாக போனில் பேசும்போது சொன்னார்.“ஒரே நேரத்துலே நிறைய படங்களில் நடிப்பது ஒரு குற்றம் என்பது மாதிரி நிறைய பேர் சொல்லுறாங்க. ஒவ்வொரு படமாக கவனமா தேர்வு செய்துதான் நடிக்கிறேன். இதுவரை என்னால் கால்ஷீட் பிரச்சினை வந்ததுன்னு யாரையாவது சொல்லச் சொல்லுங்க பார்க்கலாம்.

என்னோட லிமிட், கெப்பாசிட்டி என்னன்னு எனக்குத் தெரியும். ஜாலியான கதைகளில் தொடர்ச்சியா கமர்ஷியலா பண்ணணும்னுதான் ஆசைப்படுறேன். ஆனா, ‘அந்த’ மாதிரி கதைன்னா, பிரகாஷ் நடிப்பாருன்னு இப்போ நிறைய பேரு அப்படிப்பட்ட கதைகளா எடுத்துக்கிட்டு வர்றாங்க.

ஆடியன்ஸ் என்னை நம்பி தியேட்டருக்கு வரணும்னு ஆசைப்படறேன். இனி என் வயசுக்கு மீறிய வில்லங்கமான கேரக்டர்கள் எதுவும் செய்யமாட்டேன். மிடில்கிளாஸ், நெக்ஸ்ட் டோர் பாய் கேரக்டர்களாதான் செய்ய ஆசை. அது மாதிரி கதைகளைத்தான் தேடுறேன்.

என் நடிப்பில் ‘புரூஸ்லீ’ செப்டம்பரிலும், ‘கடவுள் இருக்கான் குமாரு’ தீபாவளிக்கும் ரிலீஸ் ஆகப்போவுது. ராஜீவ் மேனன் டைரக்‌ஷனில் நான் நடிக்கும் படத்துக்கு என்னுடைய மாமா ஏ.ஆர்.ரகுமான், மூணு பாட்டு ரெக்கார்ட் பண்ணிக் கொடுத்திருக்காரு. அனேகமா, அந்தப் படத்துலே மலையாளத்தில் ‘பிரேமம்’ படம் மூலமா பிரபலம் அடைஞ்ச சாய்பல்லவி எனக்கு ஜோடியா நடிப்பாங்கன்னு நெனைக்கிறேன்” என்று பிரகாஷ் சொன்னார்.

- தேவராஜ்