எனக்கு இன்னொரு பேர் இருக்கு



கிண்டல் ராஜ்ஜியம்!

ஹாலிவுட்டில் ‘ஸ்பூப்’ ரக படங்கள் ரொம்ப பிரபலம். பெரிய வெற்றி பெற்ற படங்களை கிண்டலடித்து, அப்படங்களில் இடம்பெற்ற காட்சிகளை காமெடியாக உல்டா அடித்து கலாய்ப்பதே ஸ்பூப். தமிழில் அவ்வகையில் ‘தமிழ்ப்படம்’ மாதிரி அரிதாகவே ஸ்பூப் படங்கள் எடுக்கப்படுகின்றன. ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’, தாதா படங்களை கிண்டலடிக்கும் ஸ்பூப் ரகம்.

குறிப்பாக சர்வதேச அளவில் எவர்க்ரீன் ஹிட்டான ‘காட் ஃபாதர்’ திரைப்படத்தை அக்குவேறு ஆணிவேறாக ஜாலியாக போஸ்ட்மார்ட்டம் செய்திருக்கிறார் இயக்குநர் சாம் அண்டன். ‘காட் ஃபாதர்’ படத்துக்கு மரியாதை செய்யும் விதமாக எடுக்கப்பட்ட ‘நாயகன்’ உள்ளிட்ட நம்மூரின் பிரபலமான கேங்ஸ்டர் படங்களும் சாம் ஆண்டனின் கலாய்ப்புக்கு தப்பவில்லை. ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ என்கிற தலைப்பே ‘பாட்ஷா’வை கிண்டலடிப்பதுதானே? ஆரோக்கியமான கிண்டலாக இருப்பதால் ரசிகர்கள் கரகோஷத்தோடு ரசிக்கிறார்கள்.

ராயபுரத்தின் டான் பதவியை ‘நைனா’ என்கிறார்கள். இந்த நைனா பதவிக்கு எப்போதுமே தாதாக்கள் மத்தியில் பெரும் போட்டா போட்டி நடக்கும். கெத்தான இந்தப் பதவிக்கு ஒரு சப்பை யதேச்சையாக தேர்ந்தெடுக்கப்படுவதே படத்தின் கதை.ரத்தத்தைக் கண்டாலே வித்தியாசமாக கழுத்து வலித்துக் கொள்ளும் கேரக்டர் ஜி.வி.பிரகாஷுக்கு.

அவரை டான் என்று தவறாகக் கருதி தன் மகள் ஆனந்தியை கட்டிக் கொடுத்து, அடுத்த வாரிசு ஆக்க நினைக்கிறார் சரவணன். இந்த முயற்சிக்கு முட்டுக்கட்டையாக முன்பு எப்போதோ டானாக இருந்து, சரவணனால் கொல்லப்பட்ட பழைய நைனாவின் மகன் ஒருவன் புதியதாக முளைக்கிறான். கூட்டு முயற்சியில் அவனை அப்புறப்படுத்தி பிரகாஷ் எப்படி நைனா ஆகிறார் என்பது கிளைமேக்ஸ்.

இன்னும் ரிலீஸ் ஆகாத ‘கபாலி’யைக் கூட விட்டுவைக்காமல் கிண்டல் அடித்திருக்கிறார்கள் என்பதிலிருந்தே இப்படத்தின் நோக்கம், சீரியஸ் அல்ல, சிரிப்புதான் என்று புரிந்துவிடுகிறது. எனவே, ஆங்காங்கே இடிக்கும் லாஜிக்குகளை மூட்டை கட்டிவிட்டு மகிழ்ச்சியான மனநிலைக்கு மாற்றிக் கொண்டால் மட்டுமே இப்படத்தை ரசிக்க முடிகிறது.

ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் வழக்கம் போல பிரமாதம். படத்தின் ஆரம்பக் காட்சிகள் மெதுவாக நகர்வதை தவிர்த்திருந்தால் நறுக்கென்று இருந்திருக்கும்.