“நான் வழக்கமான ஹீரோ அல்ல!”அப்புக்குட்டி சொல்கிறார்



‘மன்னாரு’ படத்தில் ஹீரோவாக நடித்த அப்புக்குட்டிக்கு மீண்டும் அப்படியொரு வாய்ப்பு ‘காகிதக் கப்பல்’ மூலம் கிடைத்திருக்கிறது. ஹீரோயின் தில்லிஜா. பவர்ஸ்டார் சீனிவாசனும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.“ஒன்பது வயதிலிருந்து குப்பை பொறுக்கி உழைப்பால் உயர்ந்து, நேர்மையும் சேமிப்புமே குறிக்கோளாக வாழ்கிறான் ஹீரோ.

பாமரனான அவனது வாழ்வில் திடீரென குறுக்கிடுகிறாள் நன்கு படித்த ஹீரோயின். தவிர்க்க முடியாத நிர்ப்பந்தத்தின் காரணமாக இருவரும் மணம் முடிக்கின்றனர். ஒழுங்காக நடந்துகொண்டிருக்கும் தாம்பத்யத்தில் ஹீரோயினின் ஒரு வித்தியாசமான ஆசையால் அவர்களது வாழ்க்கை எப்படி ‘காகிதக் கப்பல்’ போன்று அலைபாயத் தொடங்குகிறது என்பதை காமெடியாக சொல்லியிருக்கிறேன்” என்கிறார் இயக்குநர் சிவராமன்.எஸ்.
“கேரக்டர் ரோல்தான் என்னோட சாய்ஸ்.

அழுத்தமான கதையம்சம் இருப்பதால் மட்டுமே இந்தப் படத்தில் ஹீரோவா நடிக்க சம்மதிச்சேன். ‘காகிதக் கப்பல்’ மாதிரி வாய்ப்புகள் வர்றப்போ அதை மிஸ் செய்யுறதில்லை. வழக்கமான கமர்ஷியல் படமில்லை இது. நாலு ஃபைட், அஞ்சு பாட்டுன்னு டெம்ப்ளேட்டும் கிடையாது. ரசிகர்கள் விரும்பிப் பார்க்கிற அளவுக்கு வித்தியாசம் இதில் நிச்சயமா இருக்கும்” என்கிறார் ஹீரோ அப்புக்குட்டி.

- ரா