தண்ணியில்லே, தம்முமில்லே..



‘ஃபீல்குட்’ படம் எடுக்கிறார் ஜெயமுருகேசன்!

‘பன்னீர் புஷ்பங்கள்’, ‘துள்ளுவதோ இளமை’ என்று ஒவ்வொரு தலைமுறைக்கும் பள்ளி வாழ்க்கையை மையமாகக் கொண்ட திரைப்படங்கள் நீங்காமல் நினைவில் பதிந்திருக்கும். இதோ அடுத்த தலைமுறையின் எதிர்கால மலரும் நினைவுகளுக்காக ‘நட்சத்திர ஜன்னலில்’ படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் ஜெயமுருகேசன். படத்தின் ஃபைனல் டச் வேலைகளில் பிஸியாக இருந்தவரை ஒரு கும்பிடு போட்டு டிஸ்டர்ப் செய்தோம்.
“படத்தோட தலைப்பு சூப்பர்?”

“இருக்காதா பின்னே.. கவிவேந்தர் மு.மேத்தாவோட வரியாச்சே இது? எனக்கு மட்டுமில்லை. தமிழர்கள் எல்லாருக்கும் பிடிச்ச ஒரு பாடலோட முதல் வரி. என் கதைக்கு பொருத்தமாக இருந்ததால், கதையைச் சொல்லி அவரோட அனுமதியைப் பெற்று இந்தத் தலைப்பை வெச்சிருக்கேன்.”
“அப்படி என்னதான் கதை?”

“அப்பா இல்லாத பையன். அம்மா கஷ்டப்பட்டு வளர்க்கிறார். பையனும் அம்மாவோட சிரமத்தைப் புரிஞ்சிக்கிட்டு நல்ல மாணவனா வளர்கிறான். அப்போ திடீர்னு காதல் கிறுக்கு பிடிச்சிக்குது. அதுக்கப்புறம் அவனோட வாழ்க்கை எப்படி திசைமாறுதுன்னு யதார்த்தமா பதிவு பண்ணியிருக்கேன்.”“ஹீரோ.... ஹீரோயின்?”

“அபிஷேக் குமரன் ஹீரோ. ஹீரோயின் அனுப்ரியா. ரெண்டு பேருமே ரொம்ப பிரமாதமா பண்ணியிருக்காங்க. போஸ்வெங்கட்டுக்கு அரசியல்வாதி வேஷம். பின்னியிருக்காரு.”“உங்க பின்னணியை சொல் லுங்க...”“பாண்டிச்சேரிதான் நான் பிறந்த மண். பள்ளி நாட்களில் கவிதையெல்லாம் எழுதுவேன். அகில இந்திய வானொலியில் ‘இளையபாரதம்’ நிகழ்ச்சியில் பங்கெடுத்து நிறைய புரோகிராம் பண்ணியிருக்கேன்.

நடுத்தரக் குடும்பம்தான். அவங்க சக்திக்கு மீறி என்னை படிக்க வெச்சாங்க. காலேஜில் சோஷியாலஜி மெயின் சப்ஜெக்ட். திடீர்னு நாம் ஏன் சினிமாவில் சேரக்கூடாதுன்னு தோணிச்சி. வீட்டில் தயங்கிக்கிட்டே சொன்னேன். அவங்க கிட்டே எந்த எதிர்ப்புமில்லாதது எனக்கு பெரிய ஆச்சரியம்.

சென்னைக்கு வந்து பன்னிரெண்டு வருஷம் ஆகுது. முதலில் ‘தமிழன்’ மஜீத்திடம் வேலை பார்த்தேன். அப்புறம் இயக்குநர் ஞானமொழியிடம் ‘வீரன் மாறன்’, ‘மாணவன் நினைத்தால்’, ‘திரைப்பட நகரம்’ மாதிரி படங்களில் வேலைபார்த்து சினிமா கத்துக்கிட்டேன். விடாமுயற்சியும், அனுபவமும்தான் என்னை இப்போ டைரக்டர் ஆக்கியிருக்கு.”

“முதல் சான்ஸ் எப்படி கிடைச்சது?”
“இந்தப் படத்தோட இணைத் தயாரிப்பாளர் புதுவை சிவப்பிரகாசம் என்னோட நண்பர்தான். தயாரிப்பாளர் எஸ்.டி.முத்துக்குமரன் அவருக்கு நண்பர். நட்புதான் எனக்கு வாய்ப்பு கொடுத்திருக்கு. அவங்க என் மேலே வெச்சிருக்கிற நம்பிக்கைக்கு கைமாறா நல்ல படத்தை எடுத்து, அவங்க நஷ்டம் ஆகாம தப்பிக்கணும்னு ஹார்ட் ஒர்க் பண்ணியிருக்கேன்.”

“நீங்களும் பாட்டு எழுதியிருக்கீங்களாமே?”

“ஆமா.  உதயன் இசையமைக்கிறார். ‘மன்னார்’ உள்ளிட்ட நிறைய படங்களுக்கு  பண்ணியிருக்கிறார். அட்டகாசமா அஞ்சு பாட்டுக்கு டியூன் போட்டார். யுகபாரதி,  மு.மேத்தா, சிவப்பிரகாசம் ஆகியோரோடு நானும் ஒரு பாட்டு எழுதியிருக்கேன். ஆனா, நான் எழுதின பாட்டு படத்தில் வராது. ஆடியோ சிடியில் மட்டும்தான்  இருக்கு. மு.மேத்தாவோட ‘பாதை எதுவரை போகும் என்று பார்வை அறிவதில்லை.  பார்வை எதுவரை போகும் என்று பாதை அறிவதில்லை’ பாட்டு ரொம்ப நாட்களுக்கு  ரசிகர்கள் முணுமுணுக்கக்கூடியதா இருக்கும்.”
“படத்துலே பள்ளிப் பாடம் மட்டும்தான் உண்டா?”

“பள்ளியறைப் பாடம் இல்லையான்னு கேட்க வர்றீங்க. நீங்க எதிர்பார்க்கிற ஏடாகூடமெல்லாம் எதுவும் என் படத்தில் கிடையாது. தண்ணி அடிக்கிற சீன், தம்மு அடிக்கிற சீன், ஐ லவ் யூ சொல்லுற சீனெல்லாம் கூட இல்லவே இல்லை. இந்தப் படம் ரொம்ப உணர்வுபூர்வமா ஃபீல் குட் மூவியா இருக்கும்.”

- சுரேஷ்ராஜா