மீண்டும் சின்னி!



இயக்குநர் மகேந்திரனின் ‘கை கொடுக்கும் கை’ படத்தில் வில்லத்தனமான வேடத்தில் அறிமுகமானாலும், தொடர்ச்சியாக அவர் அறியப்பட்டது என்னவோ காமெடியனாகத்தான். ஒரு காலத்தில் கல்லூரி படிக்கும் ஹீரோவுக்கு நண்பன் என்றால் அது சின்னிஜெயந்த்தான்.

நாற்பது வயதைத் தாண்டியும் கூட கல்லூரி மாணவனாகவே வலம் வந்து கொண்டிருந்த சின்னி ஜெயந்த் படம் தயாரிக்கவும், இயக்கவும் தொடங்கியபிறகு திரையில் வருவது அரிதாகிவிட்டது.

அவர் தயாரித்த ‘சின்னபுள்ளே’, இயக்கிய ‘உனக்காக மட்டும்’, ‘கானல் நீர்’, ‘நீயே என் காதலி’ போன்ற படங்கள் வணிகரீதியாக சரியாகப் போகவில்லை.இப்போது அடுத்த இன்னிங்ஸை ஆரம்பித்திருக்கிறார் சின்னி.

‘ரூபாய்’, ‘தொடரி’ ஆகிய படங்களில் குணச்சித்திர வேடங்களை ஏற்று நடித்திருக்கிறார். காமெடி ரோல் என்றாலும் ஓக்கேதான் என்கிற சின்னி ஜெயந்துக்கு படங்கள் மீண்டும் குவிய ஆரம்பித்திருக்கின்றன.

- தேவ்