வாரிக் கொடுக்கும் வள்ளல்!



ஹீரோயினிஸம்

ராஜபாளையம் அருகில் ஒரு கிராமத்தில் மருது படப்பிடிப்பு. மாலை ஆறு மணிக்கு படப்பிடிப்பு முடிந்ததும் ராஜபாளையத்தில் தான் தங்கியிருந்த ஓட்டலுக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார் ‘ஊதா கலரு ரிப்பன்’ ஸ்ரீதிவ்யா. செல்லும் வழியில் கூட்டமாக சிலர் எப்போதாவது வரும் டவுன் பஸ்சிற்காக காத்திருக்கிறார்கள். கார் அவர்களைக் கடக்கும் போது கண்ணாடி வழியாக இவர் பார்க்கிறார்.

அந்தக் கூட்டத்துக்கு நடுவே ஒரு கர்ப்பிணிப் பெண் இடுப்பு வலியால் துடித்துக் கொண்டிருக்கிறார். காரை நிறுத்தச் சொல்லி இறங்கியவர் நேராக அவர்களிடம் செல்கிறார்.
 ஸ்ரீதிவ்யாவைப் பார்த்ததும் அவர்கள் கர்ப்பிணியை மறந்து “ஏய் இங்க பாரு வருத்தப்படாத வாலிபர் சங்கத்து பொண்ணு. நல்ல செக்க செவேர்னு அழகா இருக்குல்ல” என்று ஆச்சர்யப்பட்ட கூட்டத்தை ஒரு முறை முறைத்துவிட்டு, “ஆஸ்பத்திரிக்குத்தானே போகணும்.

வாங்க நான் டிராப் பண்றேன்” என்று சொல்லி, அந்தப் பெண்ணையும், உடன் வந்த சிலரையும் அழைத்துக் கொண்டு ராஜபாளையம் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்றார். சினிமாவில் ஹீரோக்கள் மட்டுமே செய்யக்கூடிய இந்த மனிதாபிமான செயலை, சினிமாவுக்கு வெளியே ஒரு ஹீரோயின் செய்திருப்பது திரையுலகில் இப்போது பரபரப்பாகவும், ஆச்சரியத்தோடும் பேசப்படுகிறது.

இன்னொரு நாள். ‘மருது’ படப்பிடிப்பு முடிந்ததும் விஷாலும், திவ்யாவும் ஒரே காரில் ராஜபாளையத்துக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். மாலை மங்கிய நேரம். சாலையோரம் பெண்கள் வரிசையாக நிற்கிறார்கள். கார் கடந்து சென்றதும், அவர்கள் உட்காருகிறார்கள். அந்தச் சாலையோரம்தான் அப்பெண்களின் திறந்தவெளி கழிப்பிடம். இந்தக் காட்சியைக் கண்டு இருவரும் ஒரு நிமிடம் அதிர்ச்சியடைந்தார்கள்.

மறுநாள் இருவரும் அதே ஊருக்குச் செல்கிறார்கள். “பொம்பளைங்களுக்கு மட்டும் ஒரே ஒரு கக்கூஸ் கட்டிக்கொடுங்க தம்பி, போதும்” என நடிகர் சங்க செயலாளர் விஷாலிடம் அந்த ஊர் மக்கள் கோரிக்கை வைக்கிறார்கள். விஷாலோ “ஆண்களுக்கும் சேர்த்து ஒன்றுக்கு நான்காக கட்டித் தருகிறேன்” என்று வாக்குறுதி கொடுக்கிறார். திரும்பி வரும்போது திவ்யா சொல்கிறார். “இதுக்கு மொத்தமா ஆகிற செலவில் பாதி என்னோடது.” விஷால் நெகிழ்ந்துவிட்டார்.

சென்னையில் பேய் மழை பெய்து நகரமே மூழ்கிப் போயிருந்த ேநரம். ஒரு வார காலத்துக்கு சென்னை மக்கள் சொந்த மண்ணிலேயே அகதிகளாக கிடைத்த இடத்தில் தங்கி வாழ்ந்த அவலமான நாட்கள்.

மழை ஒய்ந்த பிறகும் மீட்புப் பணிகள் நடந்து கொண்டே இருக்கின்றன. தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும், தன்னார்வலர்களும் களத்தில் இறங்கி பணி செய்கிறார்கள். சிலர் நன்கொடைகளை அரசுக்கு அனுப்பிக் கொண்டிருந்தார்கள். தென்னிந்திய நடிகர் சங்கம், ‘முதல்வர் நிவாரண நிதிக்கு பணம் தாருங்கள்’ என்று வேண்டுகோள் விடுக்கிறது.

மறுநாளே நடிகர் சங்கப் பொருளாளரின் கையில் பத்து லட்சத்துக்கான காசோலை ‘ஸ்ரீதிவ்யா’ என்ற கைெயழுத்தோடு போய்ச் சேர்ந்தது.அதன்பிறகுதான் சூப்பர் ஸ்டாரே பத்து லட்சம் கொடுத்தார். மற்றவர்களும் கொடுக்க ஆரம்பித்தார்கள். படத்துக்கு பத்து கோடி முதல் நாற்பது கோடி வாங்குகிறவர்களும் பத்து லட்சம்தான் கொடுத்தார்கள்.

படத்துக்கு நாற்பது லட்சம் மட்டும் சம்பளம் வாங்கிய ஸ்ரீதிவ்யாவும், அதே பத்து லட்சம் ரூபாயைக் கொடுத்து தன் வள்ளல்தன்மையை நிரூபித்தார். நூறு, இருநூறு படம் முடித்தவர்களே கூட அதற்கும் குறைவாகத்தான் கொடுத்தார்கள். வெறும் நான்கே நான்கு படங்களில் மட்டுமே நடித்த ஸ்ரீதிவ்யாவும் அதே அளவு பணத்தைக் கொடுக்கிறார் என்றதுமே மக்கள் நெகிழ்ந்து போனார்கள். “தமிழ்நாட்டு மக்கள் எனக்குத் தந்த பணத்தை அவர்களுக்கு திருப்பித் தருகிறேன்” என்றார் ஸ்ரீதிவ்யா.

- மீரான்