சந்தானம் என்றாலே சந்தோஷம்!



சந்தோஷப்படுகிறார் டைரக்டர்

‘மாசாணி’, ‘ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி’ படங்களைத் தொடர்ந்து ‘நான் அவளை சந்தித்தபோது’ படத்தை இயக்குகிறார் எல்.ஜி.ரவிச்சந்தர். சினிமா பிளாட்ஃபார்ம் வி.டி.ரித்தீஷ்குமார் தயாரிப்பு. ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தின் ஹீரோ சந்தோஷ் பிரதாப், சாந்தினி, பிரபல மலையாள நடிகரான இன்னசன்ட் ஆகியோர் நடிக்கிறார்கள். இயக்குநரை சந்தித்தோம்.
“டைட்டில் ரொம்ப பழசா இருக்கே?”

“ஆனா கதை புதுசு. உண்மையான காதல் கதை ஒண்ணை அடிப்படையா வெச்சி எடுக்கறேன். சினிமா டைரக்டராகணுங்கிற லட்சியத்தோட வாழுற ஹீரோ, ஹீரோயினை சந்திச்சப்புறம் என்னவா ஆகுறார்ங்கிறதை காதல் கனிரசம் பிழிஞ்சி சொல்லியிருக்கேன். இந்தக் கதையோட சிறப்பம்சம் என்னன்னா இந்த பாத்திரங்கள் இப்பவும் ரத்தமும் சதையுமா வாழ்ந்துக்கிட்டிருக்காங்க.

அவங்க கிட்டே பர்மிஷன் வாங்கிதான் பண்ணுறேன். படத்தோட ஆடியோ ரிலீஸின் போது அவங்களை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்துவேன். நிஜக்கதையில் என்னென்ன கேரக்டர்கள் இருந்ததோ, அதே கேரக்டர்கள்தான் படத்திலும். திரைக்கதைக்காக புனைவு ரொம்ப கலக்கலை. அதனாலே படம் ரொம்ப யதார்த்தமா இருக்கும்.”“ஸ்டில்ஸை பார்க்குறப்போ பீரியட் ஃபிலிம் ஃபீல் வருதே?”

“இருபது வருஷத்துக்கு முன்னாடி பீரியட் படம். 1996லே கதை நடக்குது. இப்போதான் செல்போனெல்லாம். அப்போ பேஜர்தான் ஃபேமஸ். அந்தக் காலகட்டத்தை கண்ணுக்கு கொண்டுவரணும்னா சீனில் செல்போன் டவரெல்லாம் வந்துடக் கூடாது.

அப்படியொரு லொக்கேஷனை செலக்ட் பண்ணுறதுக்காக தமிழ்நாடு முழுக்க டிராவல் பண்ணேன். தென்காசி, குற்றாலம், பாபநாசம், மாயவரம்னு சில இடங்களில் படப்பிடிப்பு நடத்தினோம். ஆர்ட் டைரக்டர் ஜெய்காந்த், இந்த வேலையை சவாலா எடுத்துக்கிட்டு அப்படியே அந்தக் காலத்தை கண் முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்காரு.”
“ஹீரோயின் சாந்தினி?”

“ஹீரோவை கேட்காம ஹீரோயினை விசாரிக்கிறீங்க பாருங்க, அதுதான் ‘வண்ணத்திரை’. குமாரின்னு ஒரு வில்லேஜ் கேர்ள் கேரக்டர். நேஷனல் அவார்டு வாங்குற லெவலுக்கு திறமையை வெளிப்படுத்தி இருக்காங்க.

நாங்க எதிர்பார்க்கிறதைவிட அதிகமா அவங்க கிட்டே இருந்து வேலை வாங்க முடியுது. ஒரு சீனை எக்ஸ்ப்ளெயின் பண்ணிட்டோம்னா, உடனே அந்த மூடுக்கு செட் ஆயிடுறாங்க. இதுக்கு முன்னாடி ரெண்டு ஹீரோயினை வேலை வாங்கியிருக்கேன். சாந்தினி, அதுக்கும் மேலே. என் படத்தோட ஹீரோயினை புகழுறேன்னு நெனைச்சுக்காதீங்க. நெஜத்தை சொல்லித்தான் ஆகணுமில்லையா?”

“உங்களைப்பத்தி சொல்லுங்க...”“இயக்குநர் பூபதிபாண்டியனிடம் ‘மலைக்கோட்டை’ மாதிரி படங்களில் இணை இயக்குநரா வேலை பார்த்திருக்கேன். ஏற்கனவே ரெண்டு படம் டைரக்ட் பண்ணிட்டு, இது மூணாவது படம். அடுத்து சந்தானத்தோடு ‘தில்லுக்கு துட்டு’ ஒர்க் பண்ணுறேன்.”
“சந்தானம் எப்படி?”

“அவரு சினிமாவில்தான் காமெடியன். நிஜத்தில் அறிவுஜீவி. சினிமா பற்றி அவரிடம் மணிக்கணக்கில் பேசிக்கிட்டே இருக்கலாம். நிறைய தகவல்களை ஃபிங்கர் டிப்பில் வெச்சிருப்பாரு. அவரும் சந்தோஷமா இருப்பார். அவரோட இருக்குறவங்களையும் சந்தோஷமா வெச்சிருப்பார். சந்தானம் என்றாலே சந்தோஷம் என்று அகராதியை மாத்தி எழுதலாம்.”

- சுரேஷ்ராஜா