ரஜினியும், அஜித்தும்தான் எனக்குப் போட்டி!



எகிறுகிறார் எவர்ஸ்டார்

வின்னிங் ஸ்டார், ஸ்டைலிஷ் ஸ்டார், பவர் ஸ்டார் என்று சினிமாவில் அட்ராசிட்டிகளுக்கு குறைவில்லை. இப்போது கோடம்பாக்கத்துக்கு லேட்டஸ்டாக வந்திருப்பவர் எவர்ஸ்டார். தனக்குத்தானே இந்தப் பட்டத்தை தூக்கி சுமந்துகொண்டு ‘ஆய்வுக்கூடம்’ படம் மூலமாக டாலடிக்கும் இந்த நட்சத்திரம், தன்னுடன் எப்போதும் பாடிகார்டாக நான்கு பேரை சேர்த்துக் கொண்டு சினிமா ஏரியாக்களில் அலப்பறை செய்து வருகிறார்.

“பேட்டி வேணும்” என்று எஸ்.எம்.எஸ். அனுப்பியதுமே உடனே போன் அடித்துவிட்டார். “தெய்வமே, நீங்க எங்க இருக்கீங்களோ, அங்கேயே இருங்க. அஞ்சு நிமிஷத்துலே வந்துடறேன்” என்றவர் நம்மை அரைமணி நேரம் சென்னையில் தெறிக்க வைக்கும் நூறு டிகிரி வெயிலில் நிறுத்தினார். கடுப்பில் இருந்த நம்மை கூல் செய்ய கூல்ட்ரிங்க்ஸ் பாட்டில்களோடு வந்து ஆஜரானார்.

“யாருங்க நீங்க? இவ்வளவு நாளு எங்கிருந்தீங்க? பாம்பேலே என்னதான் செஞ்சுக்கிட்டிருந்தீங்க. உண்மையை மரியாதையா சொல்லிடுங்க...”
“ஹலோ, ஹலோ. ‘பாட்ஷா’ மாணிக்கம் ரேஞ்சுக்கு எனக்கு பில்டப் கொடுக்காதீங்க. அதை நானே கொடுத்துக்கறேன். மாம்பழத்துக்கு பேமஸான சேலம்தான் சொந்த ஊரு. எம்பேரு ராஜகணபதி. டெக்ஸ்டைல் டெக்னாலஜி என்னோட படிப்பு. உங்களுக்கு ஒரு தத்துவம் சொல்லுறேன், நோட் பண்ணிக்குங்க..... ஒவ்வொரு பிறப்புக்கும் ஒரு காரணம் இருக்கும். என்னோட பிறப்புக்கு சினிமாதான் காரணம்.

ஷாக் ஆவாதீங்க. உங்களுக்கு என்னைப் பார்த்ததுமே அதிர்ச்சியும், ஆச்சரியுமுமா இருக்கு. அதைப்பத்தி எனக்கு கவலை இல்லை. வேலையிலே நைட்ஷிப்ட் முடிஞ்சதும் வெறித்தனமா டிவிடியில் படம் பார்ப்பேன். அமிதாப்பச்சன் தொடங்கி அஜ்மல் வரைக்கும் ஒருத்தரையும் விடாம பார்த்தேன். எல்லாரும் ஃபேமிலி பர்ஸ்ட், சினிமா நெக்ஸ்ட்டுன்னு சொல்லுவாங்க. எனக்கு சினிமா பர்ஸ்ட், சினிமா செகண்ட், சினிமாதான் தேர்ட். என் உடல், பொருள், ஆவி அனைத்தும் சினிமாவுக்கே சொந்தம்.”

“ரகளையாப் பேசுறீங்க. ஒண்ணும் புரியலை”“புரிஞ்சுட்டா நான் டம்மி பீஸ் ஆயிடுவேன். ஏதோ தத்துவார்த்தமா நான் பேசுறதா நீங்க நினைச்சுக்கற வரைக்கும்தான் நான் எவர் ஸ்டார். என் பேச்சு வெறும் மொக்கைன்னு நீங்க கண்டுபுடிச்சிட்டீங்கன்னா நான் புவர் ஸ்டார்.”
“நீங்களே ‘ஆய்வுக்கூடம்’ படத்தை தயாரிச்சி நடிச்சிருக்கீங்க?”“ஆமாம். வேற என்ன பண்ணச் சொல்லுறீங்க? நியாயமா பார்த்தா தமிழ் மக்களே காசு போட்டு படம் தயாரிச்சி என்னை ஹீரோ ஆக்கியிருக்கணும். அதுக்கு அவங்க தயாரில்லாத பட்சத்தில் நான் இந்த விஷப்பரீட்சையில் இறங்க வேண்டியதாயிடிச்சி.

மெட்ராசுக்கு வந்த புதுசில் சினிமாவில் நடிக்கணும்னு வெறித்தனமா ஸ்டில் எடுத்து, சினிமா கம்பெனிகளுக்கு அனுப்பி இயக்குநர்களை தெறிக்க விட்டேன். யானைப் பசிக்கு சோளப்பொறி மாதிரி தம்மாத்தூண்டு கேரக்டர்கள்தான் கிடைச்சுது. பாக்யராஜ் சார்தான் ‘சித்து +2’, ‘பாரிஜாதம்’ மாதிரி படங்களில் நம்ம முகம் நாலைஞ்சு நொடியாவது தெரியுற மாதிரி கவுரவமான கேரக்டர்கள் கொடுத்தார். அதுக்கப்புறம் பெருசா சான்ஸ் இல்லாம ஈ ஓட்ட ஆரம்பிச்சேன்.

சோடா குடிச்சாலும் தீராத கலைத்தாகம் என்னோடது. எனவே சினிமாதான் வேலைக்காகலைன்னு நாடகங்களில் நடிச்சேன். ஒய்.ஜி.மகேந்திரன் நிறைய சான்ஸ் கொடுத்தார். என்னோட குரல் தனித்துவமானது. அவர் நான் டயலாக் பேசினதை பார்த்து பயந்துபோய் சர்ட்டிஃபிகேட்டும் கொடுத்தார். நாளொரு மேனியும் பொழுதொரு சினிமாவுமா என்னோட ஆர்வத்தீ கொழுந்துவிட்டு எரிஞ்சது. எப்படியும் நம்ம சொத்தை காவு வாங்காம இது அணையாதுன்னு புரிஞ்சது.

எவ்வளவு கடன்காரனா ஆனாலும் பரவாயில்லைன்னு சொல்லிட்டு நானே ‘ஆய்வுக்கூடம்’ படத்தை தயாரிச்சி நடிக்கறதுன்னு மோசமான முடிவுக்கு தயாராயிட்டேன். வந்தவன், போனவனெல்லாம் என் ஆர்வத்தை பயன்படுத்தி சுரண்டல் லாட்டரி மாதிரி சுரண்டிக்கிட்டு போயிட்டான். அது தனிக்கதை. சொந்தக்கதை. சோகக்கதை. இந்தப் பேட்டிக்கு அது வேணாம் தெய்வமே.”

“படத்துலே வித்தியாசமான கெட்டப்புகளில் ரசிகர்களை மிரள வெச்சுட்டீங்களே?”“பைத்தியம், ஃபைட்டர்னு செம எக்ஸ்ட்ரீமான டபுள் ரோல். பைத்தியம் கேரக்டரில் ‘அந்நியன்’ விக்ரமுக்கு சவால் விடுற அசால்டான ஃபெர்பாமன்ஸை கொடுத்தேன். படம் பார்த்தவனெல்லாம் தியேட்டரில் தலையைப் பிச்சிக்கிட்டான். ஃபைட்டர் கேரக்டரில் ஹாலிவுட் ஹீரோ அர்னால்டுக்கு டஃப் பைட் கொடுத்திருக்கேன்.

நான் கொடுத்த அடியிலே தியேட்டரில் முன்வரிசையில் உட்கார்ந்திருந்தவனுக்கு எல்லாம் மூக்குச்சில்லு எகிறிடிச்சி. என்னோட இந்தப் படத்தில் சீனியர் ஆக்டர் பாண்டியராஜன் நடிச்சிருந்தார். ஷூட்டிங்கில் என்னைப் பார்த்ததுமே அவர் ஏன் அப்பப்போ ஜெர்க் ஆனார் என்கிற ரகசியத்துக்கு மட்டும் இன்னும் விடை கிடைக்கலை.”

“உங்களோட பேசுற நாங்களே ஜெர்க்தான் ஆவுறோம். அதிருக்கட்டும், ‘எவர் ஸ்டார்’ பட்டத்துக்கு எவ்வளவு செலவு?”“என்னோட படம் வந்ததும் தெரியலை, போனதும் தெரியலை. ஆனா, எப்படியோ எனக்கு லட்சக்கணக்குலே ரசிகர்கள் மட்டும் உருவாகிட்டாங்க.

எனக்குத் தெரியாமலேயே அகில உலக எவர்ஸ்டார் மன்றம் ஆரம்பிச்சிட்டாங்க. அவங்க அன்புக்கு நான் அடிமை என்பதால் அவங்க அன்போடு கொடுத்த பட்டத்தை மறுக்க இஷ்டமில்லை. அதனாலே அது ஒரு ஓரமா நம்ம இனிஷியல் மாதிரி இருந்துட்டு போவட்டும்னு அப்படியே விட்டுட்டேன்.”

“சூப்பர் ஸ்டார் மாதிரி எவர் ஸ்டார் ஆயிட்டீங்க. கடுமையான விமர்சனங்கள் வருமே. எப்படி சமாளிக்கிறீங்க?”“என் காதுபடவே தண்ணி மாதிரி பணத்தை செலவழிக்கிறான்னு சினிமாக்காரங்க பேசிக்கிறாங்க. என்னை புண்படுத்தணும்னு யாரும் நினைக்காதீங்க. நான் பண்படத்தான் செய்வேன் (சட்டென்று எழுந்து நின்று தொடை தட்டுகிறார்). பொதுவாழ்க்கைக்கு வந்துட்டேன். விமர்சனமெல்லாம் சகஜம். அதை கேட்டு வீணாயிடமாட்டேன்.”

“உங்களுக்கு ரோல் மாடல்?”
“எனக்கு வேற யாரு ரோல் மாடலா இருக்க முடியும்? என்னை மாதிரி யாரையாவது வரலாற்றுலே இதுக்கு முன்னாடி பார்த்திருக்கீங்களா? இனிமேலும் பார்க்க முடியாது. எனவே, எனக்கு நானேதான் ரோல் மாடல். ஆனா, பிடிச்ச நடிகர்கள் இருக்காங்க. சுருளிராஜன், கலாபவன் மணி, விவேக், வடிவேல், பிரகாஷ்ராஜ் ஆகியோர் இருக்காங்க.”

“எந்த மாதிரி கேரக்டர் பண்ண விரும்பறீங்க?”
“பிரகாஷ்ராஜ் பாதி, வடிவேல் மீதின்னு டெர்ரரான ரோல்ஸ் செய்யணும்னு ஆசை. இப்படி யாருமே யோசிச்சிருக்க மாட்டாங்க. ஏன் என் டேஸ்ட் இவ்வளவு சப்பையா இருக்குன்னு நெனைக்காதீங்க. நான் ஒரு களிமண். என்னை வெச்சி எப்படி வேணும்னாலும் டைரக்டர்கள் பானை செஞ்சிக்கலாம்.”

“உங்க படமெல்லாம் ஓடுமா?”“அந்த கவலை எனக்கு எதுக்கு? என்னை வெச்சி படம் எடுக்குற தயாரிப்பாளர்களோட தலைவிதிப்படி அது நடந்துக்கட்டும். ஆனா, வெற்றிக்காக இந்த எவர் ஸ்டார் என்ன விலை வேணும்னாலும் கொடுப்பான்.

என் படம் பார்க்க தியேட்டருக்கு ஆளு வரலைன்னா என்னோட நண்பர்கள், ரசிகர்கள், உறவினர்கள் மற்றும் சினிமா மீது ஆர்வம் கொண்ட கலாரசிகர்கள் அத்தனை பேரையும் பிரியாணி, ஜூஸ் கொடுத்தாவது தியேட்டருக்கு கொண்டுவரலாம்னு ஒரு அதிரடி திட்டம் வெச்சிருக்கேன். அது மட்டுமில்லாமே என் படம் ஓடும் தியேட்டர்களில் திருவிழா நடத்தி கூட்டம் சேர்க்கலாங்கிறது ரகசிய ப்ளான்.”

“பவர்ஸ்டார்தான் உங்களுக்கு போட்டியா?”
“என் ரேஞ்சுக்கு போட்டின்னா அது ரஜினியும், அஜீத்தும்தான். ஏன்னா, இவங்க ரெண்டு பேரும்தான் என்னை மாதிரி கஷ்டப்பட்டு தங்கள் திறமையால் முன்னுக்கு வந்தவங்க. எனக்கு சினிமாவில் எதிரிகள் யாரும் கிடையாது. துரோகிகள் மட்டும்தான். அவங்களாலே என் வளர்ச்சிக்கு எந்த சேதாரமும் வந்துடக்கூடாதுன்னு அவங்களை மன்னிச்சி ஒதுங்கிட்டேன்.”

“மணிரத்னம், ஷங்கர் போன்ற பெரிய இயக்குநர்களின் படங்களில் நீங்கள் நடிக்கலாமே?”“நடிக்கலாம்தான். ஆனா, அவங்க என்னை கூப்பிடணுமே. அதுவுமில்லாம பெரிய டைரக்டர்கள் படங்களில் நடிச்சா பெரிய நடிகராகிடலாம்னு கருதமுடியாது. அப்படிப் பார்த்தா ‘ஜென்டில்மேன்’ படத்தில் நடிச்ச வினீத், ‘கடல்’ படத்தில் நடிச்ச கவுதம் கார்த்திக்கெல்லாம் எங்கேயோ போயிருக்கணுமே?”
“என்னதான் சார் உங்க ஐடியா?”

“ஜனங்களை சிரிக்க வைக்கணும், சிந்திக்க வைக்கணும்னு நோக்கம். என்னைப் பார்த்து யாராவது சிந்திப்பாங்களான்னு தெரியாது. ஆனா நிச்சயமா சிரிப்பாங்க. உயிர் மூச்சு இருக்குற வரைக்கும் நடிச்சிக்கிட்டே இருப்பேன். பார்க்குறதும், பார்க்காததும் உங்க தலையெழுத்து. என்னை யாரும் சினிமாவிலிருந்து துரத்தவே முடியாது. துரத்த நினைக்கிறவங்க தொலைஞ்சுடுவாங்க. இது சத்தியம்!”எக்குத்தப்பு எவர்ஸ்டார்தான் என்னோட ஹீரோ. எல்லாம் என் தலைவிதி

- சுரேஷ் ராஜா