விசாரணை



Must watch movie!

தமிழுக்கு உலகளவில் திரைப்பட விழாக்களில் கவுரவம் சேர்த்திருக்கும் வெற்றிமாறனின் ‘விசாரணை’ ஒருவழியாக தமிழர்கள் தரிசிக்க திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. வெனிஸ் திரைப்பட விழா உள்ளிட்ட ஏராளமான விழாக்களில் சிறந்த படமாக இப்படம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.

படத்தின் முதல் ஃப்ரேமிலிருந்தே மொத்தத் திரையரங்கமும் குண்டூசி விழுந்தால் ஒலி கேட்கும் வண்ணம் சைலண்ட் மோடுக்கு மாறுவது ஆச்சரியம். படத்தின் எண்ட் கார்ட் விழும்போது கரகோஷத்தில் அதிர்கிறது அரங்கம். இதுவரை பெற்றவை குறைவு. ‘விசாரணை’ பெறவேண்டிய விருதுகள் இன்னும் ஏராளம் என்கிற எண்ணம்தான் ஏற்படுகிறது.

சீமாந்திராவின் குண்டூர் நகர், ஒரு சிறிய காவல்நிலையம், விசாரணை அதிகாரிகள், அவர்களது வில்லங்கமான பழக்கங்கள், ஒரு பாவமும் அறியாத அப்பாவி இளைஞர்கள், அவர்களது வறுமை, நேர்மை, லட்சியம், ஏமாற்றம், நட்பு, உண்மையென்று இப்படம் விரியும் தளங்கள் ஏராளம்.

ஊர் விட்டு ஊர் வந்து மளிகைக்கடை ஒன்றில் வேலை பார்க்கும் தினேஷ். நட்புக்கு சில நண்பர்கள். பலசரக்குக் கடையுமில்லாமல் பெட்டிக்கடையுமாக இல்லாமல் இருக்கும் அக்கடையில் குறைந்த சம்பளத்துக்கு இவர் வேலை பார்க்கிறார். இரவில் பூங்காவில் படுத்து உறங்கி வாடகைப் பணத்தை சேமிக்கிறார். அதே பகுதியில் வீட்டு வேலை செய்யும் ஆனந்தி மீது தினேஷுக்கு மையல். வேலை நேரம் போக மீதி நேரங்களில் காதலை வளர்க்கிறார்.

தான் உண்டு, தன் ஏழ்மை உண்டு, ஒருதலைக் காதலும் உண்டு என்று வாழும் தினேஷின் வாழ்வில் திடீர் திருப்பம். வழக்கம்போல ஒரு நாள் கடையைத் திறக்கிறார் தினேஷ். சிறிது நேரத்தில் ஒரு போலீஸ்காரர் இவரையும் இவரது நண்பர்களையும் கொத்தாக அள்ளிக்கொண்டு போய் லாக்கப்பில் வைக்கிறார். காரணமே தெரியாமல் அல்லது காரணமே இல்லாமல் ஸ்டேஷனுக்கு வந்துபோகும் காக்கிகள் அத்தனை பேரும் இவர்களை நையப்புடைக்கிறார்கள். இனிமேலும் அடிவாங்குவதற்கு உடலில் வலுவில்லை. மேலும் முதலாளி விசுவாசம் காரணமாக அவரது குடும்பத்தைக் காப்பாற்றும் வண்ணம், செய்யாத குற்றத்தை ஒப்புக் கொள்கிறார்கள் தினேஷும், அவருடைய நண்பர்களும்.

குற்றவாளிகள் என்று குற்றம் சுமத்தப்பட்டு நீதிபதி முன் இவர்களை ஆஜர்படுத்துகிறார். எல்லாம் முடிந்தது என்று நினைக்கும்போது, வேறொரு வழக்கு விஷயமாக அதே கோர்ட்டுக்கு வரும் போலீஸ் அதிகாரி சமுத்திரக்கனி சாட்சி சொல்லி தண்டனையிலிருந்து இவர்கள் தப்புகிறார்கள். இந்த உதவிக்கு உபகாரமாக ஒரு குற்றவாளியைக் கடத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறார் சமுத்திரக்கனி. இதற்குப் பிறகு கதையில் நடக்கும் சம்பவங்கள் காவல்துறையின் சுயநல அராஜகப் போக்கு, கருப்பு அரசியல் பக்கங்களை கலங்கவைக்கும் காட்சிகளோடு யதார்த்தமாக நம் கண்களுக்கு காட்சியாக வைக்கப்படுகிறது.

கூழானாலும் குளித்துக் குடி என்கிற கொள்கையோடு அதிகாலைக் குளிரில் குளித்துக்கொண்டே நடுங்கும் தினேஷ், அந்த நடுக்கத்தை படம் முழுக்க பார்வையாளனுக்கு கடத்துகிறார். தென்னை மட்டையால் போலீஸ் அடி வாங்கும் காட்சியில், அடி அவ்வளவுதானா என்று நிமிர்ந்து நிற்கும்போது இருக்கையிலிருந்து நம்மை நிமிர வைக்கிறார்.

நேர்மையான போலீஸ் அதிகாரி வேடத்துக்கு சமுத்திரக்கனி கச்சிதம். இறுதிக்காட்சியில் மிகச்சிறப்பான நடிப்பில் நெகிழவைக்கிறார். அந்தரங்கத்தில் தொங்கும் காட்சிக்காகவே கிஷோருக்கு ஆஸ்கர் விருதே வழங்கலாம். கிடைக்கும் சிறுசிறு சந்தர்ப்பங்களில் எல்லாம் சிரிப்பு கோல் அடிக்கிறார் ‘ஆடுகளம்’ முருகதாஸ். ‘கயல்’ ஆனந்திக்கு விரல்விட்டு எண்ணும் காட்சிகள்தான் என்றாலும், விழிகளால் பேசி ஈர்க்கிறார்.

ஜி.வி.பிரகாஷின் இசை நம் மனசின் அடி ஆழத்தை ஊடுருவுகிறது. சாதாரண கண்களுக்கே கூட பழகமுடியாத இருளைக்கிழித்துக்கொண்டு அழுக்கு மனிதர்களின் வாழ்வியல் களத்தை அப்பட்டமாக பிரதிபலிக்கிறது ராமலிங்கத்தின் கேமிரா. இவ்வளவு அற்புதமான படத்தொகுப்பை ஷாட் பை ஷாட்டாக செதுக்கி, அதற்குரிய பாராட்டுகளைப் பெறாமலேயே இறந்துவிட்டாரே எடிட்டர் கிஷோர் என்று நம் நெஞ்சம் விம்முகிறது.

எழுத்தாளர் சந்திரகுமார் எழுதிய ‘லாக்கப்’ என்கிற நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படம் இது. எந்த இடத்திலும் யாருக்காகவும் சமரசம் செய்துகொள்ளாமல் கதை, பாத்திரங்களுக்கு மரியாதை அளித்து திரைக்கதை அமைத்து செல்லுலாய்ட் சித்திரமாக உருவாக்கியிருக்கும் வெற்றிமாறன், ‘விசாரணை’ மூலமாக உலகப்பட இயக்குநர்களின் வரிசையில் கம்பீரமாக அமருகிறார்.விசாரணை, தமிழ் சினிமாவின் பெருமை!