பரணிக்கு சிக்கிய வெள்ளைத்தோல் ஃபிகர்!



‘செம்மொழிப்பூங்கா பக்கம் போகலியா? ‘நாடோடிகள்’ பரணி, நச்னு ஒரு வெள்ளைத்தோல் ஃபிகரோட செம ஜாலியா ஆட்டம்  போட்டுக்கிட்டு இருக்கார்’ என்றார் ஒரு சகா. இருக்கிற வேலையை எல்லாம் ஓரங்கட்டிவைத்துவிட்டு, செம்மொழிப் பூங்காவில் போய் நின்றோம்.
 
கோட்- சூட் என ரேஞ்சே மாறிப்போயிருந்தார் பரணி. பாரதிராஜா படத்தின் பாடல்காட்சி தேவதையைப்போல இருந்த அலீஸா கான், அவரோடு இணைந்து ஒரு பூங்கொத்தைப் பிடித்துக்கொண்டிருந்தார். ‘கிரைம் கதைன்னு சொன்னாங்க. பேருக்கு ஏத்தமாதிரி இது என்ன ‘தகிடுதத்தோம்’னு இருக்கு?’ என்றதும், ‘‘அதெல்லாம் சஸ்பென்ஸ் சார்! படத்துல பாத்துக்கோங்க’ என்று நழுவினார்.



பரணியைப் பிடித்தோம். ‘சார்! இந்த சீனுக்கே ஃபீல் பண்றீங்களே, நானும் அலீஸாவும் பீச்ல போட்ட ஆட்டத்த பாத்துருக்கணுமே, காதுல புகை வந்துருக்கும்’ என்றார். ‘சரி, அன்று மிஸ் பண்ணிவிட்டேன். அந்த ஸ்டில்ஸையாவது காட்டுங்கள்’ என்று வாங்கிப்பார்த்தால், உண்மையிலேயே காதில் புகை வந்தது.

‘கதை என்னன்னு சொல்லுங்க?’ என்றதும், ‘‘ஒரு அனாதை ஆசிரமத்தின் இடத்தை காலி செய்ய வைப்பதற்காக  ஒரு முக்கிய புள்ளிக்கு ஐந்துகோடி ரூபாய் கிடைக்கிறது. அந்தப் பணம் திடீர் என்று காணாமல் போகிறது. அதை யார் எடுத்திருப்பார்கள் என்கிற விசாரணையில் ஒரு கணவன் மனைவி, ஒரு கேங்ஸ்டர் குழு, ஒரு அப்பாவி அனாதை ஆசிரம இளைஞன் ஆகியோரை சந்தேகப்பட்டு வாட்டி எடுக்கிறார்கள். அந்தப் பணத்தை எடுத்தது யார்? பணத்தின் பின்னணி என்ன? அந்த ஆசிரம இடம் என்ன ஆகிறது? என்பது  கதை’’ என்று விளக்கம் சொன்னார் இயக்குநர் ஜெய்கிருஷ்ணன்.



‘ஒவ்வொரு காட்சியிலும் முடிச்சுக்கு மேல் முடிச்சு போட்டு, சஸ்பென்ஸ் நிறைந்த, யூகிக்க முடியாத பரபரப்பான திரைக்கதையுடன், விறுவிறுப்பான படமாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஜெய்கிருஷ்ணன்’ என்கிறது படக்குழு. படப்பிடிப்பு சென்னையைச் சுற்றி பல இடங்களில் நடந்துள்ளது. கேரள மாநிலம் கொச்சியில் உள்ள இயற்கை எழில் நிறைந்த பகுதிகளில் பாடல் காட்சிகளை படமாக்கியுள்ளனர்.

ரஸ்டிக் டேய்ல்ஸ் என்டர்டெய்ன்மென்ட் பட நிறுவனம் சார்பில் அஜய் வாசுதேவ் பணிக்கர் தயாரிக்கும் இந்தப்படத்தில்,.‘சூது கவ்வும்’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்த யோக் ஜேப்பி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். விளம்பரப் படங்களில் நடித்த மும்பை அழகி அலீஸா கான், ‘நாடோடிகள்’ பரணி, பிரமிட் நடராஜன், எம்.எஸ்.பாஸ்கர், கராத்தே ராஜா, ஆர்யன், கோவை சந்தானம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். அல் ஆலீஜ் இசையமைக்கிறார். டாக்டர் ராஜேஷ்.வி பாடல்கள் எழுத, எம்.ஜி.காளிதாஸ், உன்னி பாலடு இரட்டையர் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.

  -நெல்பா