தமனின் ஆசை!



‘பாய்ஸ்’ மூலம் நடிகராக அறிமுகமானார் தமன். நடிப்பு தனக்கு சோறு போடாது என்பதை விரைவிலேயே புரிந்துகொண்டார். சிறுவயதிலிருந்தே இசை மீது அதிக நாட்டம் கொண்ட அவருக்கு ஆண்டவன் இன்னொரு கதவைத் திறந்து விட்டான். அதுதான், திடீரென்று இசையமைப்பாளராக மாற காரணமாக அமைந்தது. தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பிஸியாக இருக்கும் அவர், தமிழில் ‘சாஹசம்’, ‘வா டீல்’ படங்களுக்கு இசையமைக்கிறார்.



“இதுவரை நான் 60 படங்களுக்கு இசையமைத்துள்ளேன். ‘பாய்ஸ்’, ‘அய்யனார்’ படங்களுக்குப் பிறகு நடிப்பில் ஆர்வம் குறைந்து விட்டது. சல்மான்கான் நடித்த ‘கிக்-2’ படத்தின் மூலம் பாலிவுட்டிலும் அறிமுகமாகிவிட்டேன்” என்ற தமன், நிறைய நடிகர், நடிகைகளை தனது இசையில் பாட வைத்திருக்கிறார். ஜூனியர் என்.டி.ஆர்., ரவிதேஜா, சிம்பு, ஜெயம் ரவி, விவேக், தேவா, இமான், அனிருத், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன், மம்தா மோகன்தாஸ், ரம்யா நம்பீசன் ஆகியோர் அவரது இசையில் பாடியுள்ளனர். தவிர, தனது இசையில் அமிதாப் பச்சனையும், கமல்ஹாசனையும் பாட வைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.

- தேவ்