ரெண்டு ஹீரோ... மூணு ஹீரோயின்! ‘வில் அம்பு’ விவரங்கள்!!



நண்பனை இயக்குனராக்கி அழகு பார்த்திருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன். ‘வில் அம்பு’ மூலம் உருவெடுத்திருக்கும் ரமேஷ் சுப்பிரமணியம், “இந்தப் படத்தோட கதையை சொன்னதுமே, இது கதை அல்ல, வாழ்க்கைன்னு தயாரிப்பாளர்கள் சொன்னது இன்னும் காதில் ஒலிச்சிக்கிட்டிருக்கு” என்று உற்சாகமாக ஆரம்பித்தார்.

“படத்தோட கதை இருக்கட்டும். உங்க கதையை சொல்லுங்க...”

“கோயமுத்தூரிலிருந்து சென்னைக்கு வந்து பதினேழு வருஷம் ஆகுது. சுசீந்திரனும், நானும் ரூம் மேட்ஸ். உதவி இயக்குனர்களாக வேலை பார்த்துக்கிட்டே வாய்ப்பு தேடிக்கிட்டிருந்தோம். அவரு இயக்குனரா அறிமுகமான ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தில் நானும் வேலை பார்த்தேன். தனி பட வாய்ப்பு தள்ளிக்கிட்டே போனது. அதனாலே வாய்ப்பு வர்றப்போ வரட்டும்னு கல்யாணம் பண்ணி வெச்சிட்டாங்க. மனைவி பெயர் சினி. ஒரே மகள் சனா துர்கா. எனக்கு பெரிய பேக்கிரவுண்டு எதுவுமில்லை. அப்படி ஒண்ணு இருக்குன்னு சொல்லணும்னா நண்பன் சுசீந்திரனைத்தான் சொல்லுவேன்.”




“சரி. படத்தைப் பத்தி சொல்லுங்க...”


“டபுள் ஹீரோ சப்ஜெக்ட். ஆனா, வழக்கமான டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டா இருக்காது. ஹரீஷ் கல்யாண், ஸ்ரீ இருவரும் நாயகர்களாக வர்றாங்க. கதையை விட திரைக் கதைக்கு கூடுதலா முக்கியத்துவம் இருக்கும். இரண்டு ஹீரோவும் ஒரே ஏரியாவில் இருந்தாலும் இருவருக்குமான சந்திப்பு இருக்காது. கஷ்டப்படுறப்போ ‘எல்லாம் என் தலைவிதி’னு தலையில் அடிச்சிப்போம் இல்லையா? அந்த விதியை எழுதுறது கடவுள். அதுமாதிரி இந்தப் படத்தோட ஹீரோக்களின் தலைவிதி என்னன்னு தீர்மானிக்கிற பொறுப்பு ஆடியன்ஸ் கிட்டே இருக்கும். இரண்டு ஹீரோவும் வெவ்வேறு சமயங்களில் பாதிக்கப்படுகிறார்கள். அந்த வகையில் நம் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வின் பின்னணியிலும், இன்னொருவருக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்பு இருக்கிறது என்பதுதான் படத்தோட மெசேஜ்.”



“மூணு ஹீரோயின். சமாளிக்கிறது கஷ்டமாச்சே?”

“வண்ணத்திரை’க்கே உரிய குறும்பு. நான் குடும்பஸ்தன் சார். அப்படி இப்படி எழுதி வம்பு தும்புலே மாட்டிவிட்டுடாதீங்க. சிருஷ்டி டாங்கே, சாந்தினி, சம்ஸ்கிருதி மூணு பேருக்கும் ஈக்குவல் கேரக்டர்தான். சிருஷ்டி, சமஸ்கிருதி ரெண்டு பேரும் ஸ்டூடண்ட்ஸ். சாந்தினி, சேரியில் வசிக்கும் பெண்ணாக வர்றாங்க. படத்துல மூணு ஹீரோயின்கள் இருந்தாலும் மூணு பேரும் சேர்ந்தமாதிரி காம்பினேஷன் சீன் கிடையாது. அதனாலேயோ என்னவோ படப்பிடிப்பு எந்தப் பிரச்சினையுமில்லாம முடிஞ்சது (பலமாக சிரிக்கிறார்).”

“சரி. சுசீந்திரன் என்ன பண்ணியிருக்காரு?”

“இந்தப் படத்தைப் பொறுத்தவரை அவர் புரொடியூசர் மட்டும்தான். சுசீந்திரன் மட்டுமில்லாம, ‘தாய்’ சரவணன், நந்தகுமாருன்னு மத்த புரொடியூசர்களுக்கும் சினிமா நல்லா தெரியும். என் வேலையில் தலையிடாம இயக்குனருக்கான சுதந்திரத்தை முழுசா எனக்கு கொடுத்து செயல்பட வெச்சிருக்காங்க.”

“இந்தப் பேட்டியிலே எங்களுக்கு கிளாமராவே மேட்டர் தேறலியே?”


“அப்படிங்களா? (யோசிக்கிறார்). லவ் சீனுலே நடிக்கிறப்போ ஹீரோ ஸ்ரீ கொஞ்சம் தடுமாறினார். ம்ஹூம். அதை தடுமாற்றம்னு கூட சொல்லக்கூடாது. வெட்கம்னுதான் சொல்லணும். சம்ஸ்கிருதிதான் தடாலடியா ஸ்ரீயோட வெட்கத்தை விலக்கி நடிக்க வெச்சாங்க. அதுக்கப்புறம் சம்ஸ்கிருதி வெட்கப்படுற அளவுக்கு ஸ்ரீ பின்னியெடுத்துட்டாரு. இந்த கிளாமர் போதுமா சார்?”

- சுரேஷ் ராஜா