யார் அந்த முயல் குட்டி?



பாயும் புலி பட்டாசு!

மாஸ் ஹீரோக்களுக்கு எப்பவுமே கைகொடுக்கும் காஸ்ட்யூம் காக்கிச் சட்டை. நடிகர் சங்க தேர்தல், திருட்டு விசிடி தடுப்பு, சமூக சேவை என்று கடந்த சில ஆண்டுகளாக பரபரப்பாக செயல்படும் விஷால், ‘பாயும் புலி’க்காக அதைத்தான் அணிந்திருக்கிறார். காக்கியின் அருமை பெருமைகளை ‘தங்கப் பதக்கம்’ முதல் ‘காக்க காக்க’ வரை எப்படி தாங்கி நிற்கிறதோ, அந்த பாரம்பரியத்தை ‘பாயும் புலி’யும் தொடரும் என்று நம்பிக்கையோடு பேச ஆரம்பிக்கிறார் இயக்குனர் சுசீந்திரன்.



“‘பாயும் புலி’ எப்படி வந்திருக்கிறது?”

“‘பாண்டிய நாடு’ படத்தைப் போலவே இந்தப் படமும் மதுரையில்தான் தொடங்குகிறது. மதுரையின் நகர்ப்புறம்தான் களம். ‘பாயும் புலி’ என்கிற ரஜினி பட டைட்டிலே எங்களுக்கு கூடுதல் பலம். கதைக்கு இதுதான் பொருத்தமான டைட்டில் என்பதால் ஏ.வி.எம். நிறுவனத்திடம் பேசி வாங்கினோம். கம்பீரமான போலீஸ் ஆபீஸர் வேடத்துக்கு விஷால் நச்சென்று பொருந்துவார். உடம்பை சாதாரணமாகவே கட்டுமஸ்தாக வைத்திருப்பார். போலீஸ் வேடம் என்பதால் இன்னும் நன்கு முறுக்கேற்றியிருக்கிறார். படத்தின் முதல் பாதியில் சிரிப்பதற்கும், ரசிப்பதற்கும் நிறைய ஸ்பேஸ் உண்டு. இரண்டாம் பாதியில்தான் சென்டிமென்ட், ஆக்‌ஷன் என்று மசாலாவை நிறையவே தூவியிருக்கிறோம். அனல் அரசுவின் ஆக்‌ஷன் காட்சிகளில் அனல் பறக்கும். ஹைலைட்டான க்ளைமேக்ஸ், நீண்டகாலத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பேசப்படும்.”



“விஷாலின் இப்போதைய இமேஜுக்கு கதையில் அரசியல் கலந்திருப்பீங்களே?”

“சினிமா, கல்வி, வியாபாரம், விளையாட்டு என்று எல்லாத் துறையிலும் தான் அரசியல் இருக்கிறது. நாம் அரசியல் என்று பொதுவாக சொல்லும் துறையைப் பற்றி இல்லாமல், கதைக்குள் ஓர் அரசியலைச் சொல்லியிருக்கிறேன். பொதுவாக போலீஸ் படம் என்றாலே குற்றவாளிகளை போலீஸ் துரத்திப் பிடிப்பது என்கிற ஒன்லைன் நமக்கு தோன்றும். அப்படியொரு எண்ணம் வராதபடி இப்படத்தை இயக்கியிருக்கிறேன். ஐ.பி.எஸ். அதிகாரி முதல் சாதாரண கான்ஸ்டபிள் வரை நிஜ போலீஸ் அதிகாரிகளையும், பேட்டையில் தொடங்கி ஜில்லா வரை கோலோச்சும் ரவுடிகள் பலரையும் சந்தித்து நிறைய இன்புட் பெற்றேன். இவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு வாழ்க்கை இருக்கிறது. ஒவ்வொருவரும் அவரவர் வாழ்க்கையை எதிர்கொள்ளும் கோணங்கள், பார்வைகள் வேறு வேறு. நான் சேகரித்த எல்லா தகவல்களையும் ஒரே படத்தில் கொட்டாமல் இந்தக் கதைக்கு எது எது தேவையோ, அவற்றை மட்டும் எடுத்துக் கொண்டிருக்கிறேன். விஷாலின் கேரியரிலும் சரி, என்னுடைய கேரியரிலும் சரி, இது ரொம்ப முக்கியமான படமாக இருக்கும்.”

“யதார்த்தமான கதைகளோடு தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகமானவர் நீங்கள். மீண்டும் மீண்டும் விஷாலை வைத்து கமர்ஷியல் ரூட்டுக்கு போகிறீர்களே?”

“விஷாலுடன் மீண்டும் பணியாற்ற விரும்பினேன். இயக்குனருக்கு எல்லாவிதத்திலும் சிறப்பாக ஒத்துழைக்கக்கூடிய நடிகர். இன்னும் பத்து படம் கூட அவரோடு இணைந்து பணியாற்ற நான் ரெடி. எப்போதுமே வேகமாக இருப்பார். அவருடன் வேலை பார்க்கும்போது அவருக்கு இருக்கும் எனர்ஜி லெவல் நமக்கும் கடத்தப்படும். மண்ணின் மணமும், மனிதர்களின் உணர்வும் என்னுடைய படங்களில் ரத்தமும் சதையுமாக கலந்திருக்கும். என்னிடம் ரசிகர்கள் எதிர்பார்க்கும் யதார்த்தம், இந்தப் படத்திலும் அப்படியே இருக்கும்.”

“காஜல்?”

“இந்தக் கதைக்கு ரொம்ப பொருத்தமாக இருந்தார். விஷாலுக்கும் அவருக்கும் ஜோடிப் பொருத்தம் பிரமாதம். படம் பாருங்கள், மாறுபட்ட காஜலை உணர்வீர்கள்.”

“படப்பிடிப்புக்கு நீண்டநாள் ஆனது போல தெரிகிறதே? பொதுவாக விஷால் படங்கள் அறிவிக்கப்பட்டதுமே கொஞ்சநாளில் திடீரென்று ரிலீஸ் ஆகும்...”

“பெரிய நட்சத்திரப் பட்டாளம் சார். சூரி மாதிரி பிஸி ஆர்ட்டிஸ்டுகளை பயன்படுத்தினால்தான் காமெடி எடுபடுகிறது. எல்லாருடைய தேதியும் ஒத்துப்போய் எடுக்கணும் இல்லையா! நானும் என் டீமும் இந்தப் படத்துக்காக எழுபத்தி இரண்டு நாட்கள் உழைத்திருக்கிறோம். பூஜைக்கு வந்ததோடு சரி. தயாரிப்பாளர் மதன் அதன் பிறகு எந்த குறுக்கீடும் செய்யவில்லை. கேட்ட வசதிகள் அத்தனையும் செய்து கொடுத்தார். படத்தின் முதல் பிரதியைப் பார்த்து ரொம்ப சந்தோஷப்பட்டார்.”

“பாடல் காட்சிகளில் ஏதோ புதுமை செய்திருக்கிறீர்கள் என்று இண்டஸ்ட்ரி முழுக்க பேச்சு. என்னதான் செய்திருக்கிறீர்கள்?”


“பாடலை பதிவு செய்து கொண்டு அதற்கேற்ப விஷுவல் என்றுதான் இதற்கு முன்பெல்லாம் படமாக்கி இருக்கிறேன். இப்படத்தில் பல காட்சிகளை ஷூட் செய்துவிட்டு, அதை போட்டுக் காண்பித்து வைரமுத்துவிடம் பாடல்களை வாங்கினோம். வேல்ராஜ் எடுத்திருக்கும் விஷுவல்களுக்கும், வைரமுத்துவின் வைரவரிகளுக்கும் அப்படியொரு போட்டி. குறிப்பாக ‘யார் அந்த முயல்குட்டி?’ பாட்டு செம ரகளை. அதற்காக மீண்டும் சில சிறப்பான காட்சிகளை படம் பிடித்தேன். இமானின் இசை பிரமாண்டம். பாடல்களில் மட்டுமின்றி, பின்னணியிலும் மிரட்டியிருக்கிறது.”

“ஒளிப்பதிவாளர் வேல்ராஜ்?”

“இப்போது அவர் வெறும் ஒளிப்பதிவாளர் கிடையாது. மெகாஹிட் கொடுத்த டைரக்டரும் கூட. இயக்கம், கேமிரா என்று இரு துறைகளிலும் பிஸியாக இருந்தாலும், நான் கேட்டுக் கொண்டதுமே வந்து இந்தப் படத்துக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார். நாம் போதும் என்று சொன்னாலும்கூட போதும் என்ற மனமே அவருக்கு கிடையாது. ரிஸ்க் எடுத்து வேலை பார்ப்பார். இந்தப் படத்தின் விஷுவல்கள் சிறப்பாக அமையவேண்டும் என்பதற்காக இந்தியா முழுக்க சுமார் ஐயாயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்தார். விஷுவல் நிச்சயம் அள்ளும்.”

- சுரேஷ்ராஜா