இன்று நேற்று நாளை



2065ஆம் வருடத்தில் வாழும் விஞ்ஞானி ஆர்யா. அவர் அதிநவீன டைம் மிஷின் ஒன்றைக் கண்டுபிடித்து அதை நாம் இப்போது வாழும் 2015ம் ஆண்டுக்கு அனுப்பி வைக்கிறார். அந்த டைம் மிஷின் விஷ்ணு விஷாலிடம் கிடைக்கிறது.

2015 ஆம் ஆண்டைப் பொறுத்தவரை விஷ்ணு விஷாலுக்கு வேலைப் பிரச்னை, காதல் பிரச்னை என பற்பல பிரச்னைகள். தன்னைச் சூழ்ந்திருக்கும் அனைத்து பிரச்னைகளையும் டைம் மிஷின் உதவியால் விஷ்ணு விஷால் வெற்றி காண்பதுதான் கதை. இந்தப்படத்தில் ஹீரோ, ஹீரோயின் எல்லாமே அசரடிக்கும் திரைக்கதையும் எதிர்பாராத திருப்பங்களும்தான். அந்த வகையில் அறிமுக இயக்குனர் ரவிகுமார்  ஜொலிக்கிறார்.

ஆர்யாவுக்கு கெஸ்ட் ரோல் என்றாலும் பெஸ்ட்டாக நடித்திருக்கிறார். கேரக்டருக்கு மிகப் பொருத்தமாகவும் நெருக்கமாகவும் இருக்கிறார் விஷ்ணு விஷால். காதலியின் அப்பா டெஸ்ட் வைக்கும்போது முதலில் தோற்று, பிறகு ஜெயிக்கும் காட்சிகளில் ரசிகர்களிடமிருந்து அபாரமாக கிளாப்ஸ் வாங்குகிறார். அழகாக இருக்கிறார் மியா ஜார்ஜ்.

கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி நடிப்பிலும் ஸ்கோர் பண்ணுகிறார். நண்பனாக வரும் கருணாகரன் இந்தப் படத்துக்கு பெரிய பலம். ‘அரைகுறை விஞ்ஞானி’ பார்த்தசாரதி வரும்போது தியேட்டரில் சிரிப்பு சத்தத்தை கேட்க முடிகிறது. ரவுடியாக வரும் ரவிஷங்கர், ஹீரோயின் அப்பாவாக வரும் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் பாத்திரம் அறிந்து நடித்திருக்கிறார்கள்.

ஹிப்ஹாப் தமிழா இசையில் பாடல்கள் அருமை. பின்னணி இசையில் உலகத்தரம். டிவிஸ்ட் மேல் டிவிஸ்ட் உள்ள கதையை வசந்தின் கேமரா தூக்கி நிறுத்துகிறது. டைம் மிஷினை உருவாக்கிய விதத்தில் ஆர்ட் டைரக்டர் விஜய் ஆதிநாதனுக்கு ஸ்பெஷல் பாராட்டு. 2065ல் எல்.ஐ.சி கட்டிடம் எப்படியிருக்கும்? டாஸ்மாக் கட்டிடம் எப்படியிருக்கும் என்று கற்பனை பண்ணி அதற்கு கிராபிக்ஸ் வடிவமும் கொடுத்திருக்கும் இயக்குனர் ரவிகுமாரிடம் தாராளமாக பட்ஜெட்டும் கொடுத்திருந்தால் தமிழ் சினிமாவுக்கு ஜூனியர் ஷங்கர் ரெடி!