இளைஞனின் போராட்டம்!



‘மதுரை’ தமிழர்களுக்கு எப்படி பரிச்சயமான ஊரோ, அதுபோல மதுரை செல்வம் என்ற  பெயர் சினிமா வட்டாரத்தில் பிரபலம். கால் செஞ்சுரிக்கும் மேலாக தமிழ் சினிமாவில் பி.ஆர்.ஓவாகவும், அர்ஜுன், கவுண்டமணி, செந்தில் உட்பட நிறைய நடிகர்களின் மேனேஜராகவும் பணியாற்றியவர் இவர். இன்னும் பல அருமை, பெருமைகளுக்குச் சொந்தக்காரரான மதுரையார், வேலம்மாள் சினி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிக்க, கே.சி.ரவி வழங்கும் படம் ‘சீனி’.

புதுமுகம் சஞ்சீவ் இதன் நாயகன். நாயகி ஓவியா. காமெடி நடிகராக பரத் ரவி அறிமுகமாகிறார். இவர்களோடு ராதாரவி, ‘பருத்திவீரன்’ சரவணன், பவர்ஸ்டார் சீனிவாசன், கஞ்சா கருப்பு, ரவிமரியா, சின்னி ஜெயந்த் ஆகியோரும் இருக்கிறார்கள். பிரபல தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான யானை முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறதாம்.

‘‘நடுத்தர குடும்பத்தில் பிறந்த இளைஞன் பட்டப்படிப்பு முடித்ததும்  சொந்தமாக தொழில் தொடங்கி தொழில் அதிபராக வரவேண்டும் என்று போராடுகிறார். அந்த வாழ்க்கைப் போராட்டத்தையே காதல், காமெடி, சென்டிமென்ட் கலந்து சொல்லியிருக்கிறேன். காந்த் தேவா இசையில் பாடல்கள் அனைத்தும் மிகச்சிறப்பாக வந்துள்ளன.

இந்தப் படத்தில் ஏராளமான நடிகர்கள் இருந்தாலும் ரசிகர்கள் எதிர்பார்க்க முடியாத நடிகர் ஒருவர் இருக்கிறார். அந்த நடிகர் எம்.ஜி.ஆர். அது எப்படி என்பது படம் ரிலீஸாகும் வரை சஸ்பென்ஸ்‘’ என்கிறார் இயக்குனர் ராஜதுரை. இவர் மனோஜ்குமார், ஆர்.கே.செல்வமணி, சுராஜ் ஆகிய இயக்குனர்களிடம் துணை இயக்குனராகப் பணியாற்றியவர்.

-எஸ்